"சந்தீயும் சமதனாமம் நிறைந்த ஈனிய தேசம் ஓன்றை காட்டி எழூப்பூவன்"

சுபீட்சம் நிறைந்த
சுந்தர நாட்டில் - தமிழரின்
சுந்தரப் புன்னகை மட்டும்
தொலைவில் கருவாக!

இரத்த பூமி பார்த்த
கண்களில் வற்றிப் போனது கண்ணீர்
ஏனோ மனது மட்டும்
இன்னும் மரணித்தே!

தீவிரவாதம் கொலை செய்யப்பட்டதாய்
சந்தோச கோஷம் எழுப்புது ஆட்சி
தமிழரின் உணர்வு கொலைகளுக்கும்
சேர்த்தே!

அது தெரியாமல் இன்னும் நம்மில் பலர்
அவர்களும் தமிழர்கள்!

எல்லோருக்கும் சமவுரிமை
பகிர்ந்தளிக்கப்படுவதாய்
சொல்லிச் சொல்லியே
பறிக்கப்பட்டது தமிழரின் உரிமை!

அழிக்கப்பட்டுப் போனது
தமிழரின் வாழ்விடங்கள்
குடியமர்த்தப்பட்டதென்னமோ
சகோதர இனம்!

அகதிமுகாம்கள் அகற்றப்பட்டாலும்
அகதித் தமிழன் வாசகம் மட்டும்
அடிக்கொரு முறை கூவலாக!

எதிர்காலத்தில் எம் பிள்ளைகளும்
அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ள
இந்த வாசகம் புதிய அரசியலமைப்பிற்கூடாக
அவசியமாக்கப்படலாம் ஐயமில்லை!

சில்லென்ற காற்றும் சீறிப் பாய்கின்றது
முடக்கப்பட்ட தமிழரின் நிலையைக் கண்டு!

ஏனோ சிறைப்பிடிக்கப்பட்டது
ஒவ்வொரு தமிழரின் தமிழ் உணர்வுகளும் தான்
ஏங்கித் தவிக்குது மனசு
ஏக்கங்களை சுமந்து கொண்டே!

அடிபட்டும் மிதிபட்டும்
எண்ணிக்கை மறந்து - தம்
உயிர்களைத் தொலைத்து
வாழும் போது நெஞ்சிலிருந்த தெம்பு
இன்று தேம்பி அழுது
அரவம் செய்யவே அலறுகின்றது!

தனித்திருக்கும் நொடியில்
தண்டவாள ரயில்
நெஞ்சைப் பிளந்துவிட்டுப் போகின்றது
தமிழா...! நீ உன் ஒற்றுமையின்மையால்
உன் உறவுகளை மட்டுமல்ல
உயிர் தேசத்தையும் தொலைத்தவன் என்று!

பெருஞ் சத்தத்தோடு வந்து போகும்
இடியின் ஓசை காதில் ஒலிக்கும் போதெல்லாம்
இறந்தாலும் எம்மில் இறவாமல் வாழும்
தமிழரின் ஓலங்கள் அதைவிட
சத்தத்தோடு என் காதுகளில்!

அத்தனை உயிர்களையும்
புசித்து சுவைத்த களைப்பில்
அமர்ந்திருக்க உனக்கு
வருடங்கள் ஈரொன்பது தேவைப்படுகின்றது!

"நாம் எல்லரும் ஓரு தாய் மக்காள்
சாதி மாத பெதமீன்றீ
சந்தீயும் சமதனாமம் நிறைந்த
ஈனிய தேசம் ஓன்றை
காட்டி எழூப்பூவன்"

ஒவ்வொரு முறையும்
கொச்சைத் தமிழில்
இத்தகை வார்த்தைகளைக்
கேட்கும் போதெல்லாம்
நெஞ்சு கனக்கிறது!

இன்னும் நீ கட்டியெழுப்ப
என்ன இருக்கின்றது
எங்கள் உயிர்களை உயிரோடிருக்கும் போதே
சாகடித்துக் கொண்டு...!

எங்களுக்கேதும் செய்துவிட வேண்டாம்
உன் பிச்சையில் வாழ
நாங்கள் எச்சுத் தமிழரல்ல
எங்களை நாங்களாகவே வாழவிடு
அது போதும் அது மட்டும் போதும்!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு