63. இயல்பு வாழ்க்கை

எத்தனை நாளிகைகள்.....
உயிரோடு உலா வருவது?

நாளை நானும், நீயும்
மூச்சை நிறுத்திக்கொண்டால்
நமக்கான பொதுப் பெயர்
ஒன்றுதானே.....!

போதுமடா சாமி இந்த
வாழ்க்கை என
நிறுத்திக்கொள்கின்றோம்
சுவாசிப்பதை;

எம் நிறுத்தத்திற்காக
தன் சுவாசத்தை
நிறுத்திக்கொள்ள
எத்தனை உயிர்கள்?

மிஞ்சிப்போனால்
மூன்று நாட்கள்
முக்காடு போட்டு
ஒப்பாரி வைக்கும்
கூட்டம்

நாம் செய்ததை
இல்லையென்றும்
செய்யாததை
செய்ததாயும் கூறும்
செத்து போனவன்
திரும்பவா போகின்றான்
என்ற நினைப்பில்

நிறுத்தப்பட்ட
என் அசைவிற்காய்
நின்றுவிடவா
போகின்றது
புவியின் சுழற்சி?

காலையில் ஆதவனின்
அழகிய சிரிப்பு துகில்கள்
பறவைகளின் கீச்சிடல்
பச்சை குழந்தைகளின் பாட்டிசைப்பு என
எல்லாம் வழமை போலவே
நடக்கத்தான் போகின்றது

தென்றலின் தீண்டல்
தீண்டிவிட்டுப் போகும்
என்னையும் தான்
ஏனோ அந்த வருடலை
உணராமல்
உணர்ச்சியற்று
கிடப்பேன் நான்!

இப்போது தானே
ஜடம் என சொல்ல
வேண்டும் என்னை;
ஏன் அடிக்கடி
அம்மா திட்டுவார்
ஜடமென?

ஒன்று இரண்டென
மாதங்கள் உருண்டோட
நிஜத்தில் உலாவந்த என்னை
நிழற்பிரதியாய் மாட்டிவிடும்
சொந்தங்கள்

இவை எல்லாம் அரங்கேற
யாருக்கும் தெரியாமல்
அருகிலோ, தொலைவிலோ
இதயத்தில் வலி சுமந்து
இளைப்பாற என் மடி தேடும்
ஒரு உயிர்

வாழ்ந்ததன் அர்த்தம் இதுவன்றோ

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு