73. சிறகடிக்கும் ஆசைகள்


ஆசைகளே இல்லாத மனிதன் இல்லை; அவனது ஆசைகளுக்கு அளவுகளும் இல்லை...! இப்படிபட்ட தன்மை கொண்ட மனித இனத்தில் பிறந்த எனக்குள்ளும் ஓராயிரம் ஆசைகள் இருக்கின்றன, அவற்றை ஒவ்வொன்றாக சொல்லிவிடலாம் என நினைத்து பிடித்தமானவற்றை அசைப்போட தொடங்கினேன்.... தொடர்ந்து கொண்டே போனது எனது ஆசை சங்கிலி அநியாயத்திற்கு, நாளுக்கு நாள் ஒவ்வொரு ஆசையாக கூடிகொண்டே போகுதே தவிர குறைவதாக இல்லை. என்னடா இது? இப்படியே நீண்டால் முதலாவது ஆசை என்னவென்று எனக்கே மறந்து போய்விடுமே என்ற பயம் நெஞ்சுக்குள் வந்து என்னையே பயமுறுத்தியது. அன்றிலிருந்தே... நீயா நானா என பார்த்து விடுவோம் என பயத்தோடு போட்டியிட்டு என்  நினைவேட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். அவற்றுள் சிலவற்றை உங்களுக்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

(விஷேட குறிப்பு: உங்களுக்கு பிடித்தாலும் வாசிங்க, பிடிக்கவில்லை என்றாலும் வாசிங்க)

*அப்பா....,
எனக்கு முதல் அறிமுகம் அம்மாவாக இருந்தாலும் நான் ஒட்டிக்கொண்டதென்னவோ இவரோடு தான். அப்பா என்று சொல்லும் போதே மனசு இலகி போயிடுங்க, அப்பாவைத் தான் இந்த உலகத்திலேயே எனக்கு அதிகமாக பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னை அனுஅணுவாக இரசிக்க வைத்திருக்கின்றன, அவருடைய சின்ன சின்ன அசைவும் எனக்கு பிடிக்கும், வாழ்ந்தால் அவரை போல வாழ வேண்டும் என அப்போதே தோன்றும். மீண்டும் அவரை சந்திக்க வேண்டும்.... அவருடைய மகளாக அவர் மடியில் தலை சாய்க்க வேண்டும் (இது என்னுடைய பெரிய ஆசை.) இந்த ஒரு ஆசைக்காக என்னோட எல்லா ஆசைகளையும் விட்டுக் கொடுத்துடுவேன்.


















*தொட்டில்
 நான் கண்ட முதல் ஊஞ்சல். ஒரு இனிமையான வருடல், ஆடிக் கொண்டிருக்கும் போதே அப்படி ஒரு தூக்கம் வரும் அதனோடு சேர்ந்த தாலாட்டும் பிடிக்கும்.


















*குதிரை வண்டி
எனக்கு அப்பா வாங்கித் தந்த முதல் விளையாட்டு பொருள், அதில் ஏறியதும் அவ்வளவு சந்தோசம் பிறக்கும் (என்னவோ விமானம் வாங்கியதை போல சொல்லிக் கொண்டிருக்காளே என நினைக்கிறீங்களா?)  நான் முதல் தடவையா விமானத்தில் ஏறியப்போது எனக்கு கிடைக்காத சந்தோசம் என்னோட குதிரை வண்டி எனக்கு தந்திருக்குங்க. மீண்டும் அதே குதிரை வண்டி....., ஆட்டிவிட பக்கத்தில் என் அப்பா ஆசை.













*என்னோட நாய்க்குட்டி
என்னோட முதல் நண்பி, என்னோட சந்தோசமோ, துக்கமோ  நான் பகிர்ந்து கொள்வது என்னோட ”அமி” யோடு தான். அமிக்கும் அப்பா போலவே என்னோடு இருக்க பிடிக்கவில்லை போல என்னை விட்டு போயிடுச்சு. மீண்டும் அமியோடு என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆசை.

 














*டெடி பியர்ஸ்
என் அறை முழுவதும் கலர் கலராக, வித விதமாக  நிறைய டெடி பியர்ஸ் சின்னதிலிருந்து பெரியது வரை இருக்கனும். அப்படியே டெடியைக் கட்டிக்கொண்டு நாள் முழுதும் தூங்க ஆசை.

 










 *மீன் தொட்டில்
மனது குழப்பத்தில் இருக்கும் போது கலர் கலரா க அழகழகான மீன்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ மன பாரம் குறைந்ததான ஒரு உணர்வு பிறக்கும். ரொம்ப பெரியதாக ஒரு மீன் தொட்டில் வைத்து அதில் வித்தியாசமான மீனினங்களை வளர்க்க ஆசை. (இடப்பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக இருக்கின்றது, உதவ யாராவது முன் வருவீங்களா?)

 













*ஐஸ்கிறீம்
சொல்லும் போதே எச்சில் ஊறும்... எவ்வளவு சாப்பிட்டாலும் சலித்துப் போகவே மாட்டேனுது. குளிர் அதிகமாக இருக்கும் போது நடுங்கிக் கொண்டே ஐஸ்கிறீம் சாப்பிட பிடிக்கும். என்னை சுற்றி ஐஸ்கிறீம் மழை பெய்ய வேண்டும் இது என்னுடைய ரொம்ப சின்ன ஆசை. (ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்த என் நண்பிக்கு என் ஐஸ்கிறீமை அப்பா கொடுத்துவிட அதை பறிக்கப் போய் அப்பா பூஜை நடத்தியதெல்லாம் என் வரலாற்று சான்றுகள், இப்போது நான் ஐஸ்கிறீம் சாப்பிடுவதில்லை இது பெரிய கொடுமைங்க)

 















*சொக்கலேட்
எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன்.... சில நேரங்களில் சாப்பிடவே முடியாமல் போனாலும் கூட தம்பிக்கு கொடுக்காமல் கஸ்டப்பட்டும் சாப்பிடுவேன். நம் அன்றாட உணவுகளில் அத்தியாவசியமாக சேர்த்துக்கொள்ள வேண்டியதாக சொக்கலேட்டை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று ஆசை. (யாருக்கும் தெரியாமல் என் புத்தகப்பைக்குள் கடைக்குப் போய் அள்ளி போட்டுக் கொண்டு போயிடுவேன் ஒரு கட்டத்தில் அப்பா கடைக்கு சொக்கலேட் வாங்குவதையே நிருத்திட்டார்னா பார்த்துக்கொள்ளுங்கள்) (திருடி சாப்பிட்டு அடி வாங்கிய அனுபவம் இருக்கு..... உங்களுக்கும் இருக்கலாம்... இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்)
 















 *எங்கர்
அம்மா... சமையலறையை விட்டு எப்போது நகருவாங்கனு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்து...... அவங்க இல்லாத நேரமாகப் பார்த்து எடுத்துச் சாப்பிட பிடிக்கும். (அந்த நேரமாகப் பார்த்து அம்மா வந்துவிட அவசரப்பட்டு விழுங்க நினைத்து தொண்டைக்குள் அடைத்துக்கொள்ள மாட்டிக்கொண்டு சூடுப்பட்ட அனுபவம் கூட இருக்கு) நண்பி ஒருத்திக்கு இதை போய் நான் சொல்ல சீனியையும் சேர்த்துக் கொண்டால் அப்படி ஆகாது என ஆலோசனை வழங்கியதோடு அதை பின்பற்றி தொடர்ந்தேன். (இது சிறந்த முறை எங்கர் சாப்பிடுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள்) எங்கர் சாப்பிட பிடிக்கும்.

 













 *அச்சாறு
சொல்லும் போதே சாப்பிடுவதைப் போல ஒரு உணர்வு, அப்படி ஒரு சுவை.........  பாடசாலை முடிந்ததும் நண்பர்களோடு சேர்ந்து பேசிக் கொண்டே அச்சாறு சாப்பிட ஆசை (வீட்டில் எவ்வளவு இருந்தாலும் ரோட்டில் சாப்பிடும் புத்தி போகாதா என அம்மா காதை திருகுவாங்க...  நினைக்கும் போதே வலிக்குறத போல தோணுது போங்க) 













 *கொக்காகோலா
எந்தனை தான் பானங்கள் வந்த போதும் எதுவுமே கொண்டிராத விஷேட சுவை இருப்பதாக நான் உணர்வது கொக்காகோலாவில் தான். குடிக்க குடிக்க கொக்காகோலா போத்தல் காளியாகவே கூடாதுன்றது என்னோட ஆசை (அதிகமா குடிக்கக்கூடாதென திட்டாதவங்களே இல்லை இருந்தாலும் விடவே முடியவில்லை)

 












 *பைக் பயணம்
வீதியில் வேகமாக பைக் ஓடுபவர்களை பார்க்கும் போதெல்லாம்  நினைவிற்கு வருவது அப்பாவின் பைக். அவரோடு தான் அதிகமாக நான் பைக்கில் போயிருக்கேன். அப்பாவை இருக்கிக்கட்டிக்கொண்டு பைக்கில் போவதென்றால் அவ்வளவு பிடிக்கும். அப்பாவோடு பைக்கில் மீண்டும் இந்த உலகையே சுற்றி வர ஆசை. (பைக் ஓட்டிக்கொண்டிருக்கும் போது அப்பாக்கு கூச்சம் காட்டிவிட பைக்கோடு சேர்ந்து நாங்களும் விழுந்து கால் நடக்க முடியாமல் இருந்ததும் சுகமான அனுபவம் தான்)
 












*ஊஞ்சல்
என்னுடைய தொல்லை தாங்காமல் அப்பா வாங்கி வீட்டு பின்புறத்தில் கட்டித்தந்த ஊஞ்சல். உல்லாசமாக என்னை மறந்து மணிக்கணக்காக ஆடிக் கொண்டிருப்பேன். அதே போல ஒவ்வொரு நாளும் ஊஞ்சலாட ஆசை. (அம்மா வேண்டாமென சொல்லியும் மா மரத்தில் ஊஞ்சல் கட்டி ஊஞ்சலோடு சேர்ந்து நானும் விழுந்து கை, கால் எல்லாம் காயமாகி அழுது கொண்டே அடியும் கிடைத்திருக்கு)















 *பறவைகளின் கீச்சிடல்
அவை தொனியில் பேசிக்கொள்ளும் பாசமிரு பறவைகளாக அவற்றோடு பறவையாகி பேசிக்கொள்ள ஆசை. பறந்து பறந்து உலகை நானும் பார்த்து இரசிக்க ஆசை. லவ் பேர்ட்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். அவற்றை கைகளில் ஏந்திக் கொள்ள ஆசை.

 













*மழை
அடை மழை பிடிக்கும். கையில் குடை வைத்துக்கொண்டே நனைய பிடிக்கும். தெப்பமாக நனைந்த பின்னும் மீண்டும் நனைய வேண்டுமென்ற எண்ணம் தான் வரும். எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடு வீதியில் நின்று மழையோடு உறவாட ஆசை (கொழும்பில் இதெல்லாம் நடக்குமா?), உறவோடு சுவையாட காகித கப்பல் செய்துவிட ஆசை (மழையில் நனைந்து காய்ச்சலோடு அம்மாவின் அன்பான அடிகளும் மறக்கவே இல்லை ஆனால் இன்று வரை நனைவதை நிறுத்தவும் இல்லை)















*மழை நனைத்த புல்வெளியும், பூக்களும்
இரவில் பெய்த மழையின் அடையாளமாய்
  ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள் சூழ்ந்த புல்வெளிகளும் பூக்களும் கொள்ளை அழகு. அப்புல்வெளியில் புழுவாகி புரண்டு வர ஆசை. பனிப் படர்ந்த, நீர்த்துளி நனைத்த பூக்களுக்குள் ரோஜாவை முத்தமிட ஆசை. ரோஜாக்கள் காதுக்குள் இரகசியமாய் அவன் பெயரை தினம் சொல்லி இரசிக்க ஆசை.

 














*பாடல்
இதயங்களை சாந்தமாக்கும் இனிமை சுமந்தது கானம். பாடல் கேட்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் இரவில் கவிதை கலந்து பாடலாக கேட்டுக்கொண்டே நித்திரைக்கொள்ள பிடிக்கும். (மற்றவர்கள் பாடும் போது கேட்பதென்றால் பிடிக்கும். பாடமாட்டீங்களானு நீங்க கேட்பது புரியுதுங்க நான் தொடங்கும் போதே உலகத்தில் உள்ள எல்லா கழுதையும் என் வீட்டை தேடி வரத்தொடங்கிடும் அந்த கஸ்டம் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு வேண்டாமே) கிட்டார் வாசிக்க பிடிக்கும். நான் வாசிக்கும் இசையை அனைவரும் இரசிக்க வேண்டும் என்றும் ஒரு ஆசை.















*நடனம்
நடனம் என்னோட உயிர்னு சொல்லலாம். நடனம் ஆடுவதென்றால் எனக்கு அவ்ளோ பிடிக்கும். எப்படியாவது அரங்கேற்றம் முடிக்க வேண்டும் இதுவும் என்னோட பெரிய ஆசை. (அம்மாக்கு பிடிக்காததால விடாமல் இருக்க அவங்களுக்கு தெரியாமல் கூட பாடசாலை விழாக்களில் ஆடி இருக்கேன். அப்படி ஒரு முறை செய்து காலில் பூசிய மை அழிபடாமல் மாட்டிக் கொண்டதெல்லாம் பெரிய கதை. இதுக்கெல்லாம் என் அப்பா தான் உதவி.... அம்மாவிடம் திட்டு வாங்கும் நல்லவர்.)












 *காலை
இருளை மெதுவாக விரட்டிக்கொண்டே மெதுவாக எட்டிப்பார்க்கும் ஒளி தேவதையின் அழகு. தினம் தினம் இரசிக்க ஆசை.  அவள் வரவில் அணு நொடியும் அணைத்து வாழ ஆசை.













*மாலை
காலையில் வேலைக்குச் சென்று திரும்பும் நம்மைப் போல தன் ஒளிக்கற்றைகளை சுருட்டிக்கொண்டு ஓய்வெடுக்க தயாராகும் மாலை வேளை. மேகங்களின் நகர்வு.... மெது மெதுவாய் சூடிக்கொள்ளும் காரிருள்.... அதனோடு ஆதவனின் துணையோடு மெதுவாய் முகம் காட்டும் பால் நிலவை அணைத்துக் கொள்ள ஆசை (அதன் நடுவே மழையும் வெயிலும் சேர்ந்துக் கொள்ள கலர் கலராய் குடைப்பிடிக்கும் வானவில்லும் பிடிக்கும்.) 











*கடலும், காற்றும்
அலை மோதும் கடலோடு அலையோடு அலையாகி அதன் நடுவே நீந்தல் பிடிக்கும். கடற்கரையில் தனியாக கடற்காற்றை உரசிக்கொண்டு உலாவி வர ஆசை, மணல் நடுவே அவன் பெயரை யாருக்கும் தெரியாமல் கிறுக்கிவிட ஆசை, முடிப்பதற் கிடையில் அழித்து செல்லும் அலையோடு சண்டையிட ஆசை. (மீண்டும் ஒரு சுனாமியே வந்தாலும் கடல் தொடும் விருப்பம் குறையாமல் இருக்க ஆசை)
 










*குழந்தைகள்
”அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளிக் கொஞ்சும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உருகி போனேன்.”  இந்த வரிகளுக்குள் எவ்வளவு உண்மை இருக்கு இரசித்திருக்கின்றீர்களா? சின்ன குழந்தைகள் என்றால் அவ்ளோ பிடிக்கும். நாளுக்கு நாள் மாறி மாறி பேசும் மனிதர்களுக்குள் உண்மையை மாத்திரமே பேசும் உன்னத உயிர்கள். அவர்களோடு இருக்கும் போது எல்லா கவலையும் மறந்து குழந்தைகளோடு குழந்தையாக நானும் மாறிடுறேன். அப்படிப்பட்ட ஒரு குழந்தையாக மாறிவிட ஆசை.
 










*நண்பர்கள்
”நட்புக்கு இலக்கணமாக நண்பர்கள்” பொய்மை தகர்த்தி உண்மை அன்போடு உறவாக வேண்டும். என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், என் தவறுகளை தட்டிக் கேட்கும் நண்பர்களோடு நல் நட்பாக ஆசை.  நட்போடு நான் வாழ ஆசை.

 









*பிறப்பு
மறுபடியும் தமிழ் வாசம் வீசும் தமிழ் மண்ணில் தமிழர்களோடு நானும் ஒரு தமிழச்சியாய் பிறந்துவிட ஆசை. தமிழ் மொழியை பேசிக்கொள்ள, தமிழையே சுவாசித்துக்கொள்ள ஆசை. தமிழுக்காய் வாழ்ந்துவிட்டு தமிழுக்காய் உயிர் விட்டுப் போகவும் ஆசை. நான் வாழும் பூமியை ஒரு தமிழன் தலைவனாய் ஆட்சி செய்ய ஆசை. அவன் வழி நடத்தல் எல்லா ஆட்சிக்கும் எடுத்துக்காட்டாய் அமைய ஆசை.










போதும் நிறுத்துங்கள் என நீங்கள் எல்லோரும் திட்டுவது நன்றாகவே கேட்கின்றது. இது போல இன்னும் எனக்குள் எத்தனையோ ஆசைகள் அடுக்கடுக்காக அத்தனையும் சொல்ல போனால் எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது. உங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு தானே.... இதோ நிறுத்திக் கொள்கின்றேன். என்னைப்போலவே உங்கள் ஒவ்வொருத்தருக்குள்ளும் சிறகடிக்கும் ஆயிரம் ஆசைகள் அதை விட அதிகமான ஆசைகள் இருக்கும் அதை எல்லாம் எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசிக்க தயாராக ஆவலோடு நாங்கள் இங்கே.....!

இதன் தொடராக அவர்களுடைய ஆசைகளையும் பகிர்ந்து கொண்டு என்னைப்போலவே உங்களது பொறுமைகளையும் சோதிப்பதற்காக இன்னும் மூவரின் கைகளில் இதன் வடத்தை ஒப்படைக்கின்றேன்.

இதோ அவர்கள் மூவரும்

01. மனசுக்குள் மத்தாப்பூ


02. வானம் உன் வசப்படும்

03. மு.மயூரன்

என்னுடையதை வாசித்ததை போலவே இவர்களின் ஆசைகளையும் வாசித்து அவர்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்வதோடு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் . (எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுங்கள்)











Comments

இரசித்தேன்.. நீங்கள் உங்கள் அப்பா மேல் வைத்துள்ள பசத்தை மிக அழகாக வடித்துள்ளீர்கள்.. நல்லாயிருக்கு.. :)
அழகான ஆசைகள். என்ன ஆசைகளினால் ரொம்பவே அடிபட்டிருக்கிறீர்கள். போலிருக்குது..

நீங்கள் அப்பா பிள்ளையா?
//”அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளிக் கொஞ்சும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உருகி போனேன்.” இந்த வரிகளுக்குள் எவ்வளவு உண்மை இருக்கு இரசித்திருக்கின்றீர்களா? சின்ன குழந்தைகள் என்றால் அவ்ளோ பிடிக்கும். //

எனக்கும் அவ்ளோ பிடிக்கும்.. குழந்தைகள்னா, நல்லா எழுதியிருக்கீங்க சிந்தனா

உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகிறேன்
நன்றி சுபானு

நான் அதிகமா நேசிக்கும் அன்பின் உருவம் என் அப்பா
அடி உதவுவதை போல் அண்ணன் தம்பி உதவ மாட்டாங்கனு சும்மாவா சொன்னாங்க

//நீங்கள் அப்பா பிள்ளையா?//
நான் அப்பா பிள்ளை தான்

நன்றி அண்ணா
நன்றி அமுதன். சின்ன பிள்ளைகளை பிடிக்காதவர்கள் இருப்பார்களா?

//உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகிறேன்//

உங்கள் ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகிறேன்
Unknown said…
//(விஷேட குறிப்பு: உங்களுக்கு பிடித்தாலும் வாசிங்க, பிடிக்கவில்லை என்றாலும் வாசிங்க)//

இது, இது, இது...இதுக்காக தான் வாசிச்சன்...

//அமிக்கும் அப்பா போலவே என்னோடு இருக்க பிடிக்கவில்லை போல என்னை விட்டு போயிடுச்சு.//
:(

//குடிக்க குடிக்க கொக்காகோலா போத்தல் காளியாகவே கூடாதுன்றது என்னோட ஆசை//

கொக்க கோலா எப்பிடி காளியாகும்?
அது சிவபெருமான் கூட ஆகாது... ;)

வாழ்த்துக்கள்...
உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்...
பெரும்பாலான பெண் பிள்ளைகள் அப்பா செல்லம் தான்

அங்கரை விட எனக்கு லக்ஸ்பிறே தான் பிடிக்கும், கோக் பிடிக்கும் ஆனால் குடிப்பது உடல் நலத்திற்க்கு கேடு என சிலர் சொன்னபடியால் குறைத்துக்கொண்டேன்.

உங்கள் ஆசைகளும் உங்கள் பதிவுபோல் நீண்டது.
வாசிக்காமல் விட்டுடுவிங்களோன்ற பயத்துல தான் அப்படி போட்டேன் வாசித்ததற்கு நன்றி கனககோபி அவர்களே...!

காளி உங்களை காலியாக்காமல் இருக்கட்டும்
இதை படித்தே நீண்டதென சொல்லிட்டிங்களே.... இப்போ தானே ஆரம்பிச்சிருக்கேன் அதுக்குள்ளேயா?

பரவாயில்லை லக்ஸ்பிறேயோடு சீனியை சேர்த்துக் கொள்ளுங்கள்

:)
maruthamooran said…
என்னுடைய தந்தை எனக்கு நல்ல நண்பராக, ஆசிரியனாக, வழிகாட்டியாக இருக்கிறார். தங்களின் தந்தைக்கு தாங்கள் செல்லப்பிள்ளை. பதிவு அருமை வாழ்த்துக்கள்.
என்றும் எமை வழிநடத்தும் வழிகாட்டிகள்

நன்றி ப்ரவீன்
நீ இழந்த சிறுவயது ஆசைகள் மீண்டுவரும் என்று கூற முடியாவிட்டாலும்...
எதிர்வரும் காலம் உன் ஆசைகளில் ஒன்றேனும் பூர்த்தியாக்கும்..
தமிழச்சியாய் வாழப்பிடிக்கும் உன் ஆசைகளுக்கு தமிழனின் வாழ்த்துக்கள்
உங்களின் உண்மையான உணர்வுகளை உங்களின் பேனாவல் அழகாக கசியவிட்டு இருக்கிறீர்கள் .
அற்புதம் .
வாழ்த்துக்கள் !


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர் .
http://wwwrasigancom.blogspot.com/

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு