18. ரணப்பட்ட மன ஓலம்

என் மனதைச் சல்லடையாய்ச்
சலித்துப் போகச் செய்த
உன்னைச் சந்திக்கத் துடித்த
நாட்களின் தொகையை
சிந்திக்கும் போதே,
நெஞ்சுக்குள்
நெருஞ்சி முட்கள்
மறுஏவுகணைத் தாக்கமாய்
மதில் சுவர்களை எழுப்புகின்றன!

உன் கரங்களில்
கருணை மலர்களை
எதிர்பார்த்த எனக்கு,
கைவிடப்பட்ட
கசங்கிய கைக்குட்டைதான்
பரிசுப் பொருளாய் கிடைத்தது.

என் கைகளின் சோகத்தை
உணர்ந்து,
பேனையின் நுனியில்
வடிந்த உணர்வுகள்—
இரத்தக் கண்ணீரின் கறைகளாய்
காகிதத்தில்
கோலமிடுகின்றன.

ஆறிய காயங்கள்
மீண்டும் மீண்டும்
மீள் சுழற்சி செய்கின்றன...

“நீ எனக்குச் சொந்தமில்லை”
என்றொரு நாள்
மனதில் விழுந்த
அந்தக் கொடிய வார்த்தைகளை
மீட்டிப் பார்க்கின்றேன்.

என்னுள் உறைந்திருக்கும்
சுமைகளின் கனத்தை முட்டி,
எழ நினைக்கும்
என் உணர்வுகளை
மீண்டும் நானே
குட்டிக் குனிய வைக்கின்றேன்.

சிறுகச் சிறுக
பொக்கிஷமாய் சேமித்த
கனவு வாழ்க்கை,
கனவாகியே போனதால்
கண்களை மூடவும் முடியவில்லை;
கனவைத் தொடரவும் முடியவில்லை.

நினைவுகள் மட்டும்
என் நிழலாகி,
நான் செல்லும் பாதையெங்கும்
என்னைத் தொடர்ந்து வருகின்றன.

ஒருகாலத்தில்
உன் பெயரைச் சொன்னாலே
பூத்த என் இதயம்,
இன்று
அதே பெயரைத் தவிர்க்கவே
துடிக்கிறது.

உன்னை மறக்க வேண்டும்
என்று ஒவ்வொரு நாளும்
எனக்குள் சொல்லிக்கொண்டாலும்,
மறக்க வேண்டியவனாக
உன்னைப் பார்த்ததே இல்லை—
என் வாழ்வின்
ஒரு பகுதியாகத்தான்
உன்னைப் பார்த்தேன்.

அதனால்தான்
பிரிவென்பது
உன்னை இழந்த வலி மட்டுமல்ல;
உன்னோடு சேர்த்து
என்னுள் நான் கட்டிய
ஒரு உலகமே
இடிந்து விழுந்த சத்தம்.

இப்போது
உன்னைத் தேடுவதில்லை...

ஆனால்
என்னைத் தொலைத்த
அந்த நாட்களை மட்டும்
தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஒருநாள்
இந்தக் கண்ணீருக்கும்
ஒரு முடிவு வரும் என்று
என் மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

ஆனால் அந்த நாள்வரை—
காதலித்தவளாய் அல்ல,
காத்திருந்தவளாய் அல்ல,
கைவிடப்பட்டவளாய் அல்ல...

உன்னை நேசித்த
அந்தப் பெண்ணை
மீண்டும்
அவளிடமே
தேடிக்கொண்டிருக்கிறேன்.


சம்யு ❣️

Comments

Popular posts from this blog

வலையுலகும் எனது நூறாவது பதிவும்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

73. சிறகடிக்கும் ஆசைகள்