பயணங்களும், பிடிக்காத முகங்களும்
பிடித்த முகங்களோடு மட்டுமே
பயணிக்க வேண்டும் என்பதில்லை…
பயணிக்க வேண்டும் என்பதில்லை…
சில முகங்களைப் பிடிக்கவில்லை என்றாலும்,
பிடித்த யாரோ ஒருவருக்காகவேனும்
அந்த முகங்களைச் சகித்துக்கொண்டு
அவர்களோடு பயணிக்க வேண்டிய
கட்டாயத்தில் அமைந்துவிடுகின்றன
வாழ்க்கையின் பல பயணங்கள்…
சிலரை நாம் விரும்புவதில்லை,
சிலரின் வார்த்தைகள் நமக்குப் பிடிப்பதில்லை,
அவர்களின் குணங்கள் நம்மைத் தொந்தரவு செய்யும்
அவர்களோடு முரண் கருத்துக்கள் மட்டுமே அதிகமிருக்கும்
ஆனாலும்,
அவர்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட முடியாத
சில உறவுகளின் வட்டத்திற்குள்
நாமும் இருக்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில்,
எல்லாப் பயணங்களும்
நமக்குப் பிடித்தவர்களோடு மட்டுமே
அமைந்துவிடுவதில்லை.
சில நேரங்களில்,
நாம் விரும்பாத ஒருவரைச் சகிப்பது
அவருக்காக அல்ல…
நாம் நேசிக்கும் ஒருவரின்
மனதை காயப்படுத்தாமல் இருப்பதற்காக.
அங்கே,
சகிப்புத்தன்மை என்பது
நம் பலவீனம் அல்ல…
நம் மனதுக்கு நெருக்கமானவர் மீது
நாம் வைத்திருக்கும் அன்பின்
இன்னொரு வடிவம்.
வாழ்க்கை முழுவதும்
பிடித்தவர்கள் மட்டுமே சூழ
பயணிக்க முடிந்திருந்தால்,
“புரிதல்” என்ற வார்த்தைக்கு
இத்தனை ஆழமான அர்த்தம் இருந்திருக்காது.
சில பிடிக்காத முகங்கள்
நம் பாதையில் இணைந்து தொடர்வதற்குக் காரணம்,
நமக்குப் பிடித்த ஒருவரின் வாழ்க்கையில்
அவர்கள் மிக முக்கியமானவர்களாக இருப்பதுதான்.
அதனால்,
சில பயணங்களில்
முகங்களைப் பார்ப்பதைவிட,
அந்தப் பயணத்தின் காரணத்தைப் பார்ப்போம்…
பிடிக்காதவர்களோடும்
பிடித்தவருக்காகப் பயணிக்கக் கற்றுக்கொள்வோம்.
பொய்யான புன்னகைகளை
நம்மால் கொடுக்க முடியாமல் போகலாம்…
ஆனால், தேவைப்படும் நேரங்களில்
மனதைப் புண்படுத்தாமல்
சில வார்த்தைகள் பேசக் கற்றுக்கொள்வோம்.
எல்லோரையும் நேசிக்க முடியாது…
எல்லோரையும் விரும்பவும் முடியாது…
ஆனால், நாம் நேசிக்கும் ஒருவருக்காக
சிலரைச் சகித்துக்கொண்டு
நாம் கடந்து செல்லும் அந்தப் பாதையின் முடிவில்,
நமக்குப் பிடித்த ஒருவரின்
முழுமையான மகிழ்ச்சியே
அடங்கியிருக்கலாம்!
சம்யு ❣️
i3 planet 🌎
Comments