ஒரே பார்வை, உணர்வுகள் வேறு
“எந்த நிலையில் இருந்தவர்கள், இப்போது எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்…”
“எந்த நிலையில் இருந்து, இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் பாருங்கள்…”
இரண்டுமே ஒருவரின் வளர்ச்சியைப் பற்றிய வார்த்தைகள்தான். ஆனால், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் முற்றிலும் வேறுபட்டவை!
முதல் வார்த்தைகளில் பொறாமை…
அடுத்தவரின் உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை!
இரண்டாவது வார்த்தைகளில் பெருமிதம்…
அவர்கள் கடந்துவந்த தடைகளையும் போராட்டங்களையும் எண்ணி மகிழும் விசாலமான மனநிலை!
முகத்துக்கு முன்னால் அன்பைப் பொழிபவர்கள் எல்லோரும் மனதார மகிழ்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிலரின் உண்மையான எண்ணங்கள் முதுகுக்குப் பின்னால் பேசப்படும் வார்த்தைகளில்தான் வெளிப்படுகின்றன என்பதுதான் வருத்தம்!
வேறுபட்ட மனங்கள்!
ஒருவரின் உயர்வைக் கண்டு குறை தேடுவது எளிது; அந்த உயர்வுக்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களை உணர்வதற்குப் பெரிய மனம் வேண்டும்!
பிறரின் வெற்றி நம் தோல்வியல்ல…
அவர்களின் உயர்வு நம் மதிப்பைக் குறைப்பதுமில்லை!
பொறாமை கொண்ட மனம்,
கடந்த காலத்தைச் சுட்டிக்காட்டி இன்றைய உயர்வைக் காயப்படுத்தும்…
பெருந்தன்மை கொண்ட மனமோ,
கடந்த காலத்தை நினைவுகூர்ந்து இன்றைய உயர்வைக் கொண்டாடும்!
இறுதியில்…
அடுத்தவர் எந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்பதைவிட, அவர்களின் உயர்வைக் கண்டு நம் மனம் என்ன உணர்கிறது என்பதில்தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது வெளிப்படுகிறது!
i3 planet 🌎
Comments