பிறப்பில் பாகுபாடு ஏன்?
எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும்,
ஆண் பிள்ளை என்றால் அங்கீகாரம்,
பெண் பிள்ளை என்றால் இளக்காரம்
இன்னும் தொடரத்தான் செய்கிறது.
ஆண் குழந்தை என்ற செய்திக்கு
கொண்டாட்டம்…
பெண் குழந்தை என்ற செய்திக்கு
முகச்சுழிப்பு.
ஆண்களைத் தாண்டி,
தாய், மாமியார் என
தாய்குலத்திற்கும்
இந்த வியாதி தொற்றியிருப்பதுதான்
உச்சக்கட்ட வருத்தம்.
எல்லாப் பிறப்பும்
இயற்கையின் பரிசுதானே!
அவனைப் போலவே அவளும்
ஒரே கருவறையில் வளர்ந்தும்,
ஒரே தாயின் வலியில் பிறந்தும்,
ஏன் இந்தப் பாகுபாடு?
குழந்தை திடகாத்திரமாக,
ஆரோக்கியமாக இருக்கிறதா
என்பது இரண்டாம் பட்சம்தான்…
ஆண் குழந்தை என்றால்
வம்சத்தின் வாரிசு என்ற பெருமை,
பெண் குழந்தை என்றால்
என்ற அலட்சியம்
பெண்ணாகப் பிறந்தது ஒரு குற்றமா?
அவள் இதயம் கல்லால் ஆனதா?
அவள் உணர்வில்லாத ஜடமா?
பெற்றோரின் முதுமையில்
மகனின் கைகள் மட்டும்தான்
தாங்க வேண்டுமா?
மகளின் கரங்கள்
தாயின் கண்ணீரைத் துடைக்காதா?
வயதான காலத்தில்
பெற்றோர் மகன் வீட்டில் இருப்பதுதான்
கௌரவமாம்…
அங்கும் யாரோ பெற்ற
ஒரு பெண்தான்
உங்களை கவனித்துக் கொண்டிருப்பாள்.
பேர் மட்டும்
மகனுக்குத் தூக்கிக் கொடுத்துவிடுவீர்கள்!
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்…
உங்கள் உழைப்பின் ஊதியம் முழுவதையும்
“நம்பிக்கை” என்ற பெயரில்
பையனுக்குக் கொடுக்க நினைக்கும் நீங்கள்,
மகள் இன்னொரு வீட்டில்
நிம்மதியாக வாழ வேண்டும் என்பதைத் தாண்டி,
அவளை இன்னொரு வீட்டிற்கு அனுப்பி
உங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளவே
அதிகம் முயல்கிறீர்கள்.
பெண் குழந்தைகள்
யார் தயவிலும் வாழ விரும்பாதவர்கள்;
சுயமாகத் தங்களைப் பார்த்துக்கொள்ளும்
தைரியம் கொண்டவர்கள்.
பிள்ளை என்ற ஒரே சொல்லுக்குள்
பாலினத்தை வைத்து
பாசத்தைக் கூட அளப்பது
எத்தனை கொடுமை!
ஆணாகவோ, பெண்ணாகவோ பார்ப்பதற்கு முன்
மனிதனாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம்.
அவனுக்கும் அவளுக்கும்
சமமான கல்வி,
சமமான உரிமை,
சமமான கனவுகள்,
சமமான அன்பு தருவோம்.
ஆனால்…
நாளை உங்கள் முதுமையில்
உங்கள் கையைப் பிடிக்கப் போவது
மகன் என்ற பெயரா?
மகள் என்ற பாசமா?
பிறக்கும்போதே
பிள்ளைகளைப் பிரித்துப் பார்க்கும் நாம்,
ஒருநாள் முதுமையில்
“என் பிள்ளை என்னைக் கைவிடாமல் இருக்க வேண்டும்”
என்று மட்டும் எதிர்பார்ப்பது
எந்த நியாயம்?
மகனும் மகளும் பிள்ளைகள்தான்.
பாசத்திற்குப் பாலினம் இல்லை.
உரிமைக்கும் பாலினம் இல்லை.
அன்பிற்கு வாரிசு என்று
தனி பாலினமும் இல்லை.
மகளைப் பிறக்கும்போதே
“இன்னொரு வீட்டுக்குரியவள்”
என்று ஒதுக்காதீர்கள்…
நீங்களே அவளை
உங்கள் வீட்டில் அந்நியமாக்கிவிட்டு,
யாரோ ஒரு வீட்டில்
அவளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று எதிர்பார்ப்பதில்
என்ன நியாயம்?
பிறக்கும்போதே
உரிமையற்றவளாக்கப்படுகிறாள்
அது அவள் பிறந்த வீடு.
இது அவள் புகுந்த வீடு…
அப்படியென்றால்,
அவள் வீடு எங்கே?
அந்தக் கேள்விக்கு
ஒரு பெண் குழந்தை
தன் வாழ்நாள் முழுவதும்
பதில் தேட வேண்டிய நிலை
மாற வேண்டும்.
பாகுபாடு பிறப்பில் இல்லை;
அது உங்கள் பார்வையில் பிறக்கிறது.
அந்தப் பார்வை மாறட்டும்.
அன்பு சமமாகட்டும்.
உரிமை சமமாகட்டும்.
அப்போதுதான்
பெண் குழந்தையின் பிறப்பும்
ஒரு கொண்டாட்டமாகும்.
அன்று இந்த உலகம்
ஆண், பெண் என்ற பேதங்களால் அல்ல…
அன்பால் மட்டுமே இணைந்திருக்கும்.
i3 planet 🌎
3 பெண் குழந்தைகளைப் பெற்ற பெருமைக்குரிய தாய்!!!
Comments