ஹவுஸ் வைப்
“ஹவுஸ் வைப்”
அவளின் மொத்த உலகத்தையும்
இரண்டு வார்த்தைகளில் சுருக்கி,
அதை ஒரு கௌரவப் பட்டமாக
அவள் கழுத்தில் மாட்டிவிடுகிறார்கள்.
“உங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு வந்தால் மட்டும் போதும்…
வேலைக்குச் செல்லத் தேவையில்லை.”
என்பதாகத் தொடங்கி,
அவள் தலையில்
ஓய்வில்லாத ஒரு பொறுப்பு
குடியேறுகிறது.
இதுவரை இருந்த தன் வீடு -
தாய் வீடாகவும்,
இனி இருக்கப்போகும் தன் வீடு -
மாமியார் வீடாகவும்
மாறிப்போய்,
இரண்டு வீடுகளுக்கும் சொந்தமானவளாக இருந்தும்
வீடற்றவளாக்கப்படுகிறாள்.
இரு வீடும் அவளுடையது -
ஆனால் வீட்டு முடிவுகள் அவளுடையதல்ல.
சமையல் அவளுடையது -
ஆனால் அவள் விருப்பம்
சமையல் பட்டியலில் இல்லை.
துவைப்பது அவளுடையது,
துடைப்பது அவளுடையது,
பெருக்குவது அவளுடையது,
எச்சில் தட்டுகளை அகற்றுவதும் அவளுடையது.
முற்றத்தின் கடைசி இலையும்
அவளுடைய குற்றமாகிறது.
வீடு சுத்தமாக இருந்தால்
அது இயல்பு.
சிறிது அழுக்காக இருந்தால் -
“வீட்டில் சும்மாதானே இருக்கிறாள்…
அவள் இதைக்கூட செய்யமாட்டாளா?”
குழந்தை படிக்கவில்லை -
அம்மாவின் தவறு.
Homework முடியவில்லை -
அம்மாவின் கவனக்குறைவு.
குழந்தை ஒழுங்கில்லாமல் வளர்ந்தால் -
அம்மாவின் வளர்ப்பு.
பொறுப்பு முழுவதும் அவளுக்கு;
அதிகாரம் மட்டும் யாரோ ஒருவருக்கு.
அவளுக்கும் உடல் உண்டு
என்பதை வீடு மறந்துவிடுகிறது.
காய்ச்சல் வந்தாலும்
அடுப்பு காத்திருக்கிறது.
தலைவலி வந்தாலும்
துணிக்கூடை காத்திருக்கிறது.
உடல் ஒத்துழைக்காத நாளிலும்
வீடு அவளிடம் கேட்கிறது —
“இன்றைக்கு சாப்பாடு என்ன?”
தனக்கொரு தேநீர் வேண்டுமென்றாலும்
அவளே எழுந்து,
அவளுக்காகவே தேநீர் போடுகிறாள்.
இதுவும் ஒரு வகை வன்முறைதானே?
அவளுக்காக ஒரு கப் தேநீர் வைக்க
ஒரு வீடு முழுவதும் இருக்கிறது;
ஆனால்,
ஒரு கை மட்டும் இல்லை.
கேட்டால்,
“எனக்குத் தெரியாது”
என்று ஒரு நொடிக்குள்
கணவன் சொல்லிவிடுகிறான்.
அது ஒரு பதில்.
அதே வார்த்தையை
அவள் சொன்னால்?
அது ஒரு குற்றம்.
அவளுக்குத் தெரியாததை
அவள் கற்றுக்கொள்ள வேண்டும்.
முடியாததை
அவள் முடிக்க வேண்டும்.
சோர்ந்தாலும்
அவள் தொடர வேண்டும்.
அவன் அறியாதது -
அவனுடைய இயல்பு;
அவள் அறியாதது -
அவளுடைய குற்றம்.
அவள் வீட்டை நடத்துகிறாள்.
ஆனால்,
அந்த வீட்டின் வருமானத்தில்
அவளுடைய உழைப்பிற்கு
ஒரு வரி கூட இல்லை.
சம்பளம் இல்லை.
விடுமுறை இல்லை.
ஓய்வூதியம் இல்லை.
தன் உழைப்பின் மீது
பொருளாதார அதிகாரமும் இல்லை.
ஒரு குடும்பத்தின்
தினசரி தேவைகளை
தன் கைகளால் இயக்குகிறவள்,
பொருளாதாரத்தில்
யாரையோ எல்லாவற்றிற்கும்
எதிர்பார்த்து நிற்க வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறாள்.
எல்லோருடைய தேவைகளும்
பூர்த்தியான பிறகு,
மீதமிருந்தால்
அவளுக்காக ஏதாவது வழங்கப்படும்.
அதுவும்
அரிதாகவே நிகழும்.
குழந்தைகளிடம்
“வேண்டாம்” என்று சொல்லும்
உரிமை அவளுக்கு இல்லை.
அவள் கண்டித்தால்,
வேறு ஒருவர்
அந்தக் கண்டிப்பை உடைத்துவிடுகிறார்.
அவள் சொல்,
அவளுடைய குழந்தைகளின் முன்னிலையிலேயே
மதிப்பிழக்கிறது.
அப்போது குழந்தை கற்றுக்கொள்கிறது
அம்மா என்பது
மதிப்பற்ற ஒரு ஜடம்.
தேவைப்படும் நேரத்தில்
திறக்கப்படும்
ஒரு கதவு.
பசி - அம்மா.
அழுக்கு - அம்மா.
துணி - அம்மா.
சாப்பாடு - அம்மா.
காய்ச்சல் - அம்மா.
தேவை - அம்மா.
ஆனால்,
அம்மாவுக்கு என்ன தேவை?
அந்தக் கேள்வி மட்டும்
வீட்டின் எந்த அறையிலும்
கேட்கப்படுவதில்லை.
இப்படித்தான்,
ஒரு பெண்ணின் அன்பு
மெல்ல மெல்ல
சேவையாக மொழிபெயர்க்கப்படுகிறது.
அவளுடைய தியாகம்
கடமையாக மாற்றப்படுகிறது.
அவளுடைய பொறுமை
அவள்மீது சுமத்தப்பட்ட உரிமையாகிறது.
அவளுடைய இருப்பு
வீட்டின் இலவச வசதியாகிறது.
அவள் எல்லோருடைய வாழ்க்கையையும்
ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும்போது,
அவளுடைய வாழ்க்கை மட்டும்
மெதுவாக ஒழுங்கிலிருந்து
வெளியேறுகிறது.
ஒருநாள்,
“எனக்கும் ஓய்வு வேண்டும்” என்றால்
வீடு அதிர்கிறது.
“எனக்கும் பணம் வேண்டும்” என்றால்
கணக்குகள் திறக்கப்படுகின்றன.
“என் முடிவும் முக்கியம்” என்றால்
அவளுடைய இடம் கேள்விக்குள்ளாகிறது.
“எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது” என்றால்
அவள் சுயநலவாதியாகிறாள்.
எல்லோருக்காக வாழ்வது - தியாகம்.
தனக்காக வாழ நினைப்பது - சுயநலம்.
எவ்வளவு விசித்திரமான
குடும்ப இலக்கணம்!
ஆனால் நினைவில் கொள்ளுங்கள்
அவள் ஒரு வீட்டின்
முடிவில்லாத சேவை நேரம் அல்ல.
அவளும்
ஒரு உணர்வுள்ள உயிர்.
அவளுக்கும்,
பசி உண்டு.
சோர்வு உண்டு.
கோபம் உண்டு.
கனவு உண்டு.
“இன்று எனக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை”
என்று சொல்லும்
உரிமையும் உண்டு.
“ஹவுஸ் வைப்”
என்று அழைப்பதற்கு முன்
ஒருமுறை யோசியுங்கள்
அந்த வீட்டில்
அவள் என்ன செய்கிறாள்
என்பதைக் காட்டிலும்,
அவள் என்னென்ன
செய்யாமல் இருக்க
தன் வாழ்க்கையை
விட்டுக் கொடுத்திருக்கிறாள்
என்பதை.
அவள் வீட்டைப் பார்த்துக்கொள்வது
அவளுடைய கடமை என்றால்,
அந்த வீடு
அவளைப் பார்த்துக்கொள்வதும்
அதன் கடமைதானே?
அவள் எல்லோருடைய வாழ்க்கைக்கும்
ஆதாரமாக இருக்கிறாள் என்றால்,
அவளுடைய வாழ்க்கைக்கு
ஆதாரம் யார்?
அவள் அனைவருக்கும்
“வீடு” என்ற உணர்வைத் தருகிறாள் என்றால்,
அவளுக்கான வீடு
எங்கே?
ஒரு பெண்ணை
“ஹவுஸ் வைப்” என்று அழைப்பது எளிது.
அவளை, அவளாக வாழவிடுவதுதான் நியாயம்!
சம்யு ❣️
i3 planet 🌎
Comments