பூரண திருப்தி

இன்னும் எத்தனை விடியல்கள்
நமக்குச் சொந்தம்…?
இன்றைத் தாண்டி
நம் சுவாசம் நீளுமா…?

அறிந்தவர் யாருமில்லை…

“நாளை” என்பது
நம்மால் எழுதப்படாத,
எழுத முடியாத
ஒரு வெற்றுப் பக்கம்.

நம்பிக்கையோடு
நாளை” என்று சொல்லும் அந்த நாள்,
நமக்காக மட்டும்
விடியாமல் கூட போகலாம்…

அதனால்…

இருக்கும் போதே
அனைவரிடமும் அன்பாக இருப்போம்.

சின்னச் சின்ன வார்த்தைகளை,
சிறு சிறு குறைகளை
பெரிதுபடுத்தி
வெறுப்பை வளர்த்து
தூரங்களை உருவாக்குவதற்குப் பதிலாக,

அன்பை விதைத்து,
உறவுகளை உயிரோடு வைத்திருப்போம்.

கோபத்தில் சொல்லப்படும்
ஒரு வார்த்தை
பல வருட அன்பைக் காயப்படுத்தலாம்…

ஆனால்,

அதே இடத்தில்
உணர்ந்து சொல்லப்படும்
ஒரு மன்னிப்பு
ஒரு வாழ்க்கையையே
அமைதியாக்கிவிடலாம்.

ஏனெனில்…

ஒருநாள் நாம் விரும்பினாலும்
திரும்பிச் செல்ல முடியாத
ஒரு நாளில் நின்றுகொண்டு,
கோபத்தை விடுத்து இன்னும் கொஞ்சம் 
அன்பாக இருந்திருக்கலாமே…”

என்று வருந்தும் நேரம் 
வருவதற்கு முன்பே புரிந்துகொள்வோம்…

மனிதர்களை இழந்த பிறகு
அவர்களின் அருமையை உணர்வது
வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம்.

இன்று நம்மோடு இருப்பவர்கள்
என்றென்றும் இருப்பார்கள்
என்று நினைக்காதிருப்போம்.

இன்று நேசிக்க முடிகிறதா…
உண்மையாய் நேசிப்போம்.

ஏனெனில்…

வாழ்க்கை எவ்வளவு நீளமானது
என்பதை யாரும் அறியோம்…

ஆனால்,

நமக்குக் கிடைத்த இந்த நொடி
எல்லோருக்கும் கிடைக்குமா
என்பதையும் அறியோம்.

ஆகவே…

வாழ்க்கை முடியும் முன்…
பிரிவு வருவதற்கு முன்…
மௌனம் நிரந்தரமாகும் முன்…

சொல்ல வேண்டிய அன்பைச் சொல்லிவிடுவோம்.

இன்னும் எத்தனை நாட்கள்
நமக்கானது என்று தெரியவில்லை…

யாருடைய வாழ்க்கை நீளும்,
யாருடைய நாட்கள் குறையும்
யாரும் அறியோம்.

அதனால்,

இருக்கும் நாட்களை
இன்பமாய் வாழ்வோம்.

நாளை நமக்கானதா
என்பது தெரியாது…

ஆனால்,

இன்றைய நாள் நமக்கானது.

நாளை, நாம் இல்லாத நாளிலும்,
நல்ல மனிதர் என்று
நாலு பேர் பேசட்டும்…

நாம் விட்டுச் சென்ற
அன்பை நினைத்து
சில மனங்கள்
மௌனமாக நெகிழட்டும்…

அதுவே
வாழ்ந்ததற்கான
பூரண திருப்தி!

சம்யு ❣️❣️
i3 planet 🌎 

Comments

Popular posts from this blog

வலையுலகும் எனது நூறாவது பதிவும்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

73. சிறகடிக்கும் ஆசைகள்