எதில் உண்மையான இன்பம்?
ஒன்று கிடைக்கும் வரை அதற்காக ஏங்குவதும் அதனை அடைந்துவிடுவதற்காக தன்னால் இயன்ற வரை போராடுவதும் மனிதனின் இயற்கையான குணம் ஈற்றில் குறித்த விடயம் சார்ந்த வெற்றியை தனதாக்கிக்கொண்டாலும் தன் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டது என நிம்மதியடைவதையும், கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியடைவதையும் அவனது மனம் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. தான் நினைத்த, எதிர்ப்பார்த்த ஒன்று நடந்துவிட்டால் தன்னை விட அதிஷ்டசாலி யாரும் இல்லை, தானே பாக்கியவான் என மகிழ்ச்சிகொண்டாலும் அடுத்த கணம் வேறொரு நிகழ்வு, விடயம், ஏன் நபர் குறித்ததான தேடலை குறுகிய இடைவேளையிலேயே மீண்டும் தொடர்கின்றான் இவ்வாறு ஒன்று, ஒன்றிலிருந்து இன்னொன்று என அடிக்கடி அவனது விருப்பங்களும், தேவைகளும் இடம்மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. இது சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடுகளின்றி உருபெறுகின்றது
இவ்வாறான தேடல்கள் சில நன்மை பயத்தாலும் சில தீமைகளையும் சேர்ப்பிக்கவே செய்கின்றன எனவே புதியன தொடர்பான தேடல் தவறான விடயங்கள் சார்ந்ததாயிராமல் நல்ல முன்னேற்றம் தரக்கூடியதாக அமையுமாறு நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் ஏதாவது புதிய விடயங்கள் பற்றி அறியும் போது, பார்க்கும் போது நாட்டம் ஏற்படுவது இயற்கை ஆனால் அது எவ்வாறான விடயம் அதனை தொடர்வதனால் பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பன தொடர்பான ஆராய்தலையும் நமக்குள் நாமே பலமுறை மேற்கொள்ள வேண்டும் நாம் எடுக்கும் முடிவு நல்லதாக அமையும் போது யாரும் பெரிதாக கண்டு கொள்ள போவதில்லை என்றாலும் தூற்றுவதற்கு இந்த சமூகம் எப்போ என காத்துக்கொண்டிருக்கின்றது என்பதை மனதில் கொள்ள வேண்டும் நாம் செய்யும் தவறான ஒரு செயல் மற்றவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதனிலும் நம்மையே அதிகம் தாக்கும் என்பது தான் உண்மை ஆகவே எதுவாயிருப்பினும் சிந்தித்து செயல்படுவது தான் எதிர்காலத்தை நிலைப்பில் வைக்கும்.
இவ்வாறாக தேடல்கள் ஒவ்வொன்றாக மாற்றம் பெறுவதற்கான முக்கிய காரணம் எதனையும் தீர ஆராயாமல் மேலோட்டமான நோக்குதலூடாக ஒன்றிப்போதலே ஆகும். அதன் உண்மையான தன்மையை, அர்த்தத்தை தெளிவாக புரிந்துகொள்வோமானால் இவ்வாறான தவறுகளை முற்றிலும் என சொல்ல முடியாவிட்டாலும் பொதுவாக தவிர்க்கலாம். சில தருணங்களில் அது தவறே என தெரிந்தும் உங்களை மகிழ்வில் திளைக்க வைப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் அப்படியாக கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு மாயையே! குறிப்பிட்ட நேரத்துக்கே அது நீடிக்கும் சில நேரங்களில் அவ்வாறான மகிழ்ச்சி உங்களை வலிகள், கவலைகள், பிரச்சினைகள் அனைத்தையும் மறக்கடிக்கும் மருந்தாக கூட உங்களுக்கு தோன்றலாம் போகப்போக அது குறித்த வலியும் இன்னும் சேர்ந்தே தாக்கும். எந்த தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறு தாக்கம் உண்டு எனவே தவறான வழிகளில் இன்பம் கொள்ளும் நீங்கள் பின் விளைவுகளையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.
அப்படி என்றால் உண்மையான ஆனந்தம் எதில் உள்ளது? ஆராயத்தான் வேண்டும்... எப்படியாவது வேலை நடந்தால் சரி என்பதை விட எந்த வழியில் நடந்தால் நான் என்ற தனி மனிதனுக்கும் நாம் என்ற சுற்றத்துக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என பார்க்க வேண்டும் அவ்வாறாக நம் செயல்கள் அமைந்துவிட்டால் அந்த ஆனந்தம் தான் நிலைக்கும் நம்மை தொடரவும் செய்யும். எத்தனையோ பிறவிகள் எடுப்போம் என கூறிக்கொள்வதனிலும் இருக்கும் வாழ்க்கையை எவ்வாறு அமைத்து கொண்டிருக்கின்றோம் என்பதில் முதலில் தெளிவடைவோம். நான் எப்படி இருந்தால் மற்றவருக்கென்ன என்ற போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியான தேசத்தில் வாழவில்லை எல்லோரும் ஒன்றாகவே இருக்கின்றோம் சமூகத்தோடு கைக்கோர்த்துக்கொண்டு தான் எதிர்காலத்தில் கால் பதிக்க வேண்டியிருக்கும். எனவே ஒருமைப்பாட்டை வளப்படுத்திக்கொள்ளுங்கள்
உங்களுக்குள்ளேயே இந்த வினாவை ஒவ்வொருவரும் கேட்டுப்பாருங்கள் "நான் முழுமையடைந்து விட்டேனா?" இந்த கேள்வியை கேட்கும் போதே ஆயிரம் கிளை வினாக்கள் உம்மை புதிதாக தொடரும் இது குறித்ததான தன்னிச்சையான தேடல் ஒவ்வொருவருக்குள்ளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்பது உண்மை மேலும் கிடைத்ததில் மட்டும் திருப்தியடையாமல், அடுத்த கட்டத்தை தாண்ட முனைவதில் தவறில்லை ஆனால் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதையை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அந்த பாதை உங்களுக்காகவே முற்களால் கூட நிரப்பப்பட்டுவிடக்கூடும். அந்த ஏமாற்றம் உங்களை எழுந்திரமுடியா படுகுழியில் தள்ளி வலிகளை தரலாம்.
மனிதன் தன் வாழ்க்கையின் அடிப்படை என்ன என்பதை அறியாமல் தனக்குத்தானே முகமூடிககளை அணிவித்து அழகு பார்க்கின்றான் அதில் பெருமையும் கொள்கின்றான். தன் சுற்றத்தை சூழலை ஆராயும் முன் தன்னை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் அதற்காக நேரத்தை செலவிடவும் வேண்டும் ஆனால் இங்கே நான் என்ற தன்னை தவிர எந்த நபரையும் தன்னோடு ஒப்பிட்டுப்பாராமல் தொடர்புபடுத்தாமல் தேடலை தொடருங்கள் வலிகள் தாக்கலாம் என்றாலும் உங்களின் நிலை, எதிர்கால தன்மை, இலக்கு, குறிக்கோள் பற்றிய தீர்க்கமான முடிவு கிடைக்கும் இதனால் இன்பமயமான வெற்றியை அடைந்து உங்களையும் சமுதாயத்தையும் இந்த தேசத்தையும் புனிதப்படுத்துவீர்கள்
Comments
வாழ்த்துக்கள்...
வாசிக்க : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html