Search This Blog

Tuesday, January 26, 2010

திருப்பிக் கொடு

உன்னைக் கண்ட நாள் தொட்டு
உள்ளத்துடிப்பு பல மடங்காய்
இரத்த நாடியில் ஏதோ பிசைய
"சுர்" என்று ஏதோ உடலெங்கும் பரவியது

இன்ப ஊற்று இரட்டிப்பாகி
உணர்வெல்லாம் உன்
நினைவு சூடிக்கொள்ள
சிறகு முளைத்த பறவையாய்
என் மனசு ஆனது

இடைக்கிடை இதயம் தொட்டுச் சென்ற
நீ
இன்று என்
இரவுகளை மொத்தமாய் விழுங்கிச் செல்கின்றாய்
இரவோடு இரவாகி என்
இரவுகளைத் தொலைத்தப் பின்னும்
விடியலிலும் உனையே தேடித் துடிக்கின்றேன்

இப்பொழுதெல்லாம் நான் உன்னை
நினைப்பதே இல்லை - ஏனோ
இதயம் தான் ஏங்கி அழுகின்றது

நி
தம் உந்தன் தரிசனம் வேண்டி

இரவுகளின் சாரல் தனலாக
விடியலின் தூரல் குளிராக
மனதினில் நீயும் மலராக
மௌனத்தால் நானும் சிலையாக

மனதினில் மாற்றம் தந்தாயே
இதயத்தை இடம் மாற்றிச் சென்றாயே
இன்று
நீ யே நானாய் ஆனேன்
ிலவாய் பாதி தேய்ந்தேன்

உன்னில் என்னை விளக்கிவிடு
உறவே என்னை மறந்துவிடு
உலகில்
நானாய் வாழ்வதற்கு
என்னை
எனக்கே தந்துவிடு!

Monday, January 25, 2010

வழி பிறக்குமா.... வலி பிறக்குமா....?

தைப்பிறந்தால் வழி பிறக்கும்
மூத்தோரின் முன்னுரைகள்
தையினிலே தலை வெடிக்கும்
தமிழனின் நிலை இது தான்

ஏழையின் கையது தான்
கடவுளென தினம் துதிப்பர்
ஆட்சியிலே அமர்ந்த பின்பு
சீ போனு தான் வதைப்பர்

ஒரே நாடு ஒரே வீடு
ஊரெல்லாம் மைக் பிடிப்பு
உள்ள வீடும் சுருட்டிக் கொண்டு
உலகத்திலே பெரும் நடிப்பு

கைப் பிடித்து மை இடுவர்
கண நேரம் பேசிடுவர்
கால் பிடிக்க வைத்திடுவர்
அடிமை இந்த தமிழனென்று

நாட்டின் குடிமகன்
குடிகார மகனாக - நாள் தோறும்
ஊற்றிடுவர் வஞ்ச புத்தியோடே
நஞ்சை
மருந்தாக

பட்டு நொந்ததிலே பலர்.......

தமிழரின் எதிர்கால விற்பனைக்கு
தாமே தயாராக - இன்று
சிரம் தாழ்த்தி பழகி விட்டார்
சில காலம் வாழ ஆசை

நாளெல்லாம் துடித்திடுவர்
நல்லவன் ஜெயிக்கவென - ஏனோ
நாளை உழைக்காட்டா
நம் வீட்டு அடுப்பணையும்

தேர்ந்தெடுக்க உரிமையுண்டு
தெளிவாக கூறிடுவர்
தெரிந்த பின்னே சொல்லிடுவர்
தெரியாது உன்னை என்று

கோழியிடம் தப்பிக்க
காகத்திடம் சென்ற புழு
யாரிடம் சென்றாலென்ன
புழுவின் கதை முடிந்த கதை

நிறத்தில் மட்டும் மாற்றமுண்டு
குணத்திலல்ல என்றுணர
புழுவிற்கு நேரமில்லை
புதைந்தது அதன் வாழ்வு

என்றாலும் மாற்றமில்லை
மறுபடியும் சிசு புழு - இம்முறை
மாற்றமாய் போனது
கோழி தான் வேண்டுமென்று

தொடருதிந்த தொடர் கதையும்
தொன்று தொட்டு இன்று வரை
மிச்சமில்லை மீதமில்லை தமிழன்
நெஞ்சினிலே வஞ்சமும் தான்!

Sunday, January 24, 2010

முடிவு

கரைந்திட்ட காலமது
அலையாக நுரைக்க
அடிமனதின் ஆசைகளோ
ஆயிரமாய் வளர...
இதயத்திலே
சலனம்
இடைவிடாமல் உரச
இலக்கில்லாத பயணம்
இறுதி வரை தொடர...

கனவினிலே வாழ்வு
காலை மாலை துளிர
நினைவுகளைச் சுமந்தே
நிகழ்வுகளும் மிளிர...எல்லைகளை
கடந்த பாதை
இதயத்திலே உதிக்க
தொடங்கிவிட்ட முடிவை நோக்கி
பல கேள்விகளும் படர...

இருப்பில்லாத வாழ்வில்
உன் இருப்பை தேடிய நெஞ்சம்
அதன் இழப்புக்கள் ஏற்று
இறப்பானது தஞ்சம்!

Monday, January 18, 2010

பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்

மாட்டுப் பொங்கல் தினத்தில் பதிவர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் ஸ்ரேயா மாட்டுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்திருக்கின்றார்கள் இதோ உங்களுக்காக அன்று கலந்து கொண்ட பதிவர்கள் சிலரது முயற்சி (ஸ்ரேயா என்பது பதிவர்கள் மாட்டுக்கு வைத்திருந்த செல்லப் பெயராம் என்பது தீர விசாரித்ததில் தெளிவானது)

தைத்திருநாளை இனிதே கொண்டாடி மகிழ்ந்த களிப்போடே இன்று மாட்டுப் பொங்கலைப் பதிவர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நல்ல நாளிலே முதலாவதாக நானே ஸ்ரேயாவிற்கு பொங்கல் ஊட்டி தொடங்கி வைக்கலாம் என நினைக்கின்றேன். பதிவர்களே உங்கள் கரகோசம் வானை முட்டட்டும். "உனக்கு பொங்கல் ஊட்டி மகிழ்விப்பதற்காக பொடி லோஷன் போதாதென்று என் மகனுக்கு வாங்கி வைத்திருந்த பேபி லோஷனையும் பூசிக்கொண்டு வந்திருக்கின்றேன் கொஞ்சமாவது சாப்பிட்டு விடு..... மேலும் பொங்கல் ஊட்டி உன்னை கௌரவிப்பதற்காக பதிவர்கள் தயாராகக் காத்திருக்கின்றார்கள் அத்தோடு நான் விடைப்பெற வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது... எனவே மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தினத்தில் உன்னை சந்திக்கும் வரை உன்னிடமிருந்து விடைப்பெறுவது உன் அன்பு வாமபூசணி.

(இவ்வாறு குறித்த பதிவர் முயற்சி செய்தும் முடியாமல் போகவே களைப்போடும், சோர்வோடும் அவ்விடத்தை விட்டு நகர்கின்றார். அவரைத் தொடர்ந்து வேகமாக முன் செல்கின்றார் இன்னுமொரு பதிவர்)

முதலில் மூச்சு வாங்கிக் கொள்கின்றார்.......!

சிறிது நேர மௌனத்தின் பின்னர் தொடர்கின்றார்.

ஸ்ரேயா உனக்கே தெரியும் நான் 180 km க்கும் மேற்பட்ட தூரத்திலிருந்து இரண்டு, மூன்று பஸ்கள் மாறி ஒரு நாளை முழுவதுமாக செலவழித்து உனக்கு பொங்கல் ஊட்டுவதற்காக வந்திருக்கின்றேன் உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கொஞ்சமாவது சாப்பிட்டு விடு இன்றே நான் ஊருக்கு திரும்ப வேண்டும். அத்தோடு நான் வந்ததற்கான காரணம்..... இன்று நான் வராமல் விட்டிருந்தால் என் பெயரை பயன்படுத்தி யாராவது உனக்கு பொங்கல் ஊட்டிச் சென்றிருப்பார்கள் அதைத் தடுத்து நான் இருக்கிறேன் என அறிவிப்பதற்காகவே வந்திருக்கின்றேன் சாப்பிட்டு விடேன்....... என கெஞ்சி முடியாமல் போக கோபமடைந்த பதிவர் நீ ஆண் மாடா இருந்திருந்தா யோவ் னு திட்டி இருந்திருப்பேன் நீ ஸ்ரேயாவா ஆயிட்டாய் அதனால யோடி னு திட்டிக்கொண்டே செல்கின்றார்.

(இவ்வாறு முயற்சி செய்து இவரும் தோற்றுப் போகவே சொல்லிக் கொள்ளாமல் இடத்தை விட்டு விரைந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த பதிவர் முயற்சிக்கின்றார்)

இவர் புன்னகையுடன் முன்னகர்கின்றார் (புன்னகையின் அர்த்தம் யாதென வினவிய போது, முதல் சென்ற இருவரும் வயதானவர்களாக இருந்தமையால் தான் ஸ்ரேயாவிற்கு பிடிக்கவில்லை நான் பச்சிளம் பாலகன் என்னால் முடியும் என்பது தான் விடயம் என்றார்)

ஸ்ரேயா ஸ்ரேயா...... என்னை பார் நான் உனக்கு பிடிக்குமென சிவப்பு நிற சட்டை எல்லாம் போட்டு வந்திருக்கேன். உனக்கு வேண்டுமானால் சிவப்பு நிறச் சட்டையே வாங்கி தருகின்றேன். ஒரு முறை வந்து கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு வாந்தியாவது எடுத்துவிட்டு செல்லு வாம்மா.... ஸ்ரேயா. என்னம்மா ஸ்ரேயா நான் கமலகாசன் ஸ்டைலில் இத்தனை அமைதியாக பேசிக்கொண்டிருக்கேன் கொஞ்சமாவது சாப்பிட்டு விட்டு போயேன். இன்று கஞ்சப்பயல் கண்ணாடி நிதியை உதைக்க சந்தர்ப்பம் கிடைத்தும் விட்டு விட்டு ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே ஸ்ரேயா ஏமாற்றி விடாதே. போராடி முடியாமல் சிரித்துக் கொண்டே போனவர் கண்ணீர் மல்க விலகுகின்றார்.

(அவரது கண்களில் கண்ணீரைக் கண்ட சக பதிவர் கோபத்தோடே ஸ்ரேயாவை நெருங்குகிறார்)

ஏய் ஸ்ரேயா உனக்கென்ன கொழுப்பா.... அழகி என்ற நினைப்பா..... நான் யாரென தெரியுமா? உனக்காக கடல் மீது கப்பலில் ஏறி வந்திருக்கின்றேன் என்னை யாரென நினைத்தாய் நீ மட்டும் இப்போது சாப்பிடவில்லை என்றால் நயனுக்கோ நமிதாவிற்கோ ஊட்டி விடுவேன் இங்கே வா வந்து சாப்பிடு..... ஸ்ரீ லங்கால கரம் பிடித்து ஆறிடும் முன்னமே இப்படி பொங்கல் தருவது அபூர்வம் என் உணர்வுகளை மதித்து சாப்பிடு....... ஸ்ரேயா சொல்வதை கேளேன்

(தன் அதட்டலுக்கும் ஸ்ரேயா அசையாமல் நிற்க இனி முடியாதென்ற நிலையில் திரும்பியவர் சக பதிவரும் நண்பருமானவரோடு கண்களால் பேச அந்த நண்பர் விரைகின்றார்)

ஹாய் ஸ்ரேயா, நமக்கு எப்போதும் மொக்கை ஜோக் அடித்து எல்லோரையும் சிரிக்க வைக்கனும் அது தான் முக்கியம் என்னவோ இவங்க எல்லோரும் அழைத்தார்களென உனக்கு பொங்கல் ஊட்ட வந்தேன் இத்தனை நேரம் தூங்கி வழிந்து கொண்டிருந்தேன் என்னவோ என் நண்பன் கண்களைப் பார்த்து பயந்துப் போய் உன்னிடம் வந்தேன். சாப்பிட்டு விடு நான் சிரித்து கொண்டே இருக்கின்றேனென நினைக்காதே சீரியஸானேன் சுட்டு பொசுக்கி விடுவேன் . நானே ஐந்து ரூபாய் செலவிட கூடாதென ஓசி காரில் ஏறி ஏசி வாங்கி வந்தேன் இதோ பார் நான் பாக்கட்டில் புல்லட்டோடு தான் வந்தேன் அடம்பிடித்தாய் உன்னைஅழித்துவிடுவேன்

(சொல்லிக்கொண்டே பாக்கட்டை தொட புல்லட் இல்லாததை உணர்ந்தாரோ என்னவோ அமைதியாக அசைகின்றார் அவரைத் தொடர்ந்து அடுத்தவர்)

சாப்பிடு ஸ்ரேயா ஏன் இப்படி செய்கின்றாய் சாப்பிடேன் பிலீஸ் எனக்கிருக்கும் வேலைப் பளுவில் இதற்கெல்லாம் நேரத்தை வீணடிக்க முடியாது ஓகே உனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நீ சாப்பிட்டு தான் ஆக வேண்டும் ஓகே நான் நல்லவனா கெட்டவனா என எனக்கே தெரியாது ஆனால் மனதில் பட்டதைச் சொல்லிவிடுவேன் இப்போது மட்டும் நீ சாப்பிடவில்லையானால் உன்னை இராட்சசி என்றே அழைப்பேன் நீ சாப்பிட்டால் உனக்கு ஊஞ்சல் கட்டி ஆட்டிவிடுகின்றேன் சாப்பிடேன்......(ஸ்ரேயா சாப்பிடாமல் இருக்க) இனியும் உன்னிடம் கெஞ்சி ஒரு பிரயோசனமும் இல்லை இனி உன்னோடு நான் பேசப்போறது இல்லை பாய்

(அவரும் சென்றுவிட நான் இருக்கேன் என ஒரு குரல் தொடர்ந்து என்ன நடக்கின்றதென தான் பார்த்துவிடுவோமே)

வியர்வை வழிய சிரித்துக் கொண்டே வருகின்றார் இவர் உழவர் திருநாளில் உழைத்து களைத்தாராம் ஸ்ரேயா என் அண்ணன்மார் எல்லோரையும் நீ தலைகுனிய செய்து விட்டாய் பதிவர்களில் மிக சிரியவன் நான் தான் (உருவத்தில் இல்லை வயதில்) அவர்கள் சார்பாக வந்திருக்கின்றேன் நானும் நீயும் உருவத்தில் வெவ்வேறாக இருந்தாலும் நம் இருவரின் நிறையும் ஒரே அளவுதான் இப்போது மட்டும் நீ சாப்பிடவில்லை உன் பொங்கலை நானே சாப்பிட்டு விடுவேன் ஜாக்கிரதை இப்படி மிரட்டியும் அது சாப்பிடாமல் இருக்கவே அவரும்கவலையோடு நகர்கின்றார்.

(இப்படியே ஸ்ரேயா சாப்பிடாமல் அடம்பிடிக்க ஸ்ரேயாவிற்கு யாரைப் பிடிக்கும் என்ற கேள்வி பதிவர்களின் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்தது) தொடர்ந்து இன்னுமொரு பதிவர் விரைகின்றார்

ஸ்ரேயா அக்கா நான் உங்களுக்கு பொங்கல் கொடுப்பதற்காக வந்திருக்கின்றேன் எப்படி இருக்கின்றீர்கள் அக்கா? ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்கின்றீர்கள்? நான் நீங்கள் ரொம்ப நல்ல அக்கா என்று தானே நினைத்தேன் என்ன நீங்கள் இப்படி இருக்கின்றீர்கள் அக்கா நான் பாவம் தானே (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கின்றார்) அக்கா சீக்கிரமாக சாப்பிடுங்கள் நாங்கள் அனைவரும் 155ல் ஐந்தறை கொண்ட பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீடு செல்லவேண்டும்.

(அப்போதும் ஸ்ரேயா ஒரு ரியாக்சனுமே இல்லாமல் இருக்க மோசமான அக்கா என திட்டிக் கொண்டே போவோமா என சக பதிவர் ஒருவரை நோக்கி பார்வையை திருப்ப பொறு நானும் என் பங்கிற்கு முயற்சிக்கின்றேன் என அவர் ஸ்ரேயாவை நோக்கி செல்கின்றார்)

"ம்.................." இப்போது நடக்கும் நிகழ்வை குறித்து பார்த்தால் என்ன நடக்குது எப்படி நடக்குது என்றே புரியவில்லை என்றாலும் இப்படி சாப்பிடாமல் இருப்பது அத்தனை நல்லதல்ல எனக்கு பெண்களின் சகவாசம் பிடிக்காது தான் என்றாலும் பொது இடத்தில் நீ இப்படி நடந்து கொள்வது சரியில்லை எல்லோரையும் சேர்த்து சொல்லவில்லை எனக்கு பிடிக்கவில்லை என்று தான் சொன்னேன் சொல்லிக் கேட்காத பட்சத்தில் அதனை விட்டு விலகி செல்வதே என் வழக்கம் என கூறிக் கொண்டே சக நண்பரையும் அழைத்துக் கொண்டு 155 நோக்கி ஓடுகின்றார்.

(இப்படியாக அனைவரும் குழப்பத்தோடும் ஸ்ரேயாவிற்கு என்ன பிரச்சினை என்றும் தெரியாததால் சோகமாக இருக்கு இன்னுமொரு பதிவர் வருகின்றார்)

வணக்கம் ஸ்ரேயா வேலை இருந்தபடியால் பொங்கல் விழாவில் சற்று தாமதமாகவே கலந்து கொள்ள முடிந்தது முதலில் என்னை மன்னித்துவிடு ஆனாலும் சற்று முன்பிருந்தே பதிவர்களின் முயற்சிகளை அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றேன் நீ சாப்பிடாமலேயே இருக்கின்றாய் என் பக்கம் வந்து சாப்பிடுமாறு அன்போடு வரவேற்கின்றேன் (ஸ்ரேயா வராமல் இருக்கவே) நீ கேட்கமாட்டாய் அதனால் இதனை சொல்லிவிட்டு செல்கின்றேன் அடுத்த பொங்கல் விழாவில் ஆரம்பத்திலேயே கலந்து கொண்டு முயற்சி செய்கின்றேன் என்ன தான் நான் முயற்சி செய்தாலும் உன் மனதில் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும் அப்போது தான் உன்னால் சாப்பிடமுடியும். பிறந்தோம் வளர்நதோம்னு மட்டும் இருந்தால் போதாது நாலு பேர் சொல்லும் நல்லதையும் கேட்கனும்.
(சொல்லிக்கொண்டே வெகு தூரமாக சென்று கொண்டிருந்தார் அந்த பதிவர்)

அவர் செல்வதற்கும் அடுத்த பதிவரின் வருகைக்கும் சொற்ப நேரமே ஆனது.

ஸ்ரேயா இன்று மாட்டுப் பொங்கல் எனக்கும் கௌ என்றால் ரொம்பப் பிடிக்கும் நான் சொன்னால் சாப்பிட்டு விடுவாய் என நினைக்கின்றேன். இப்படி சொல்வதை கேளாமல் இருந்தால் உன் வாயை ஹெக் செய்து இனி மேல் உன்னால் சாப்பிடவே முடியாத படி செய்து விடுவேன். நா இருந்தும் சுவை உணர முடிந்தும் உன்னால் சாப்பிடவே முடியாது அதனால் உடனடியாக சாப்பிட்டு விடுவாயானால் அனைவருக்கும் இலகுவாகவும் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். இப்படிக்கு ப்ரியமுடன் மௌ சாறி கௌ ரசிகன்.

அடுத்தவர் மிக அமைதியாக வருகின்றார்

ஸ்ரேயா இன்று உனக்கென்ன ஆனது ஒரு பெண்ணின் பிரச்சினை பெண்ணால் தான் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும் என்பது எனக்கும் தெரியும் என்றாலும் ஒரு நண்பனாக சொல்கின்றேன் சாப்பிடேன். நான் நினைக்கிறது என்னவென்றால் பெண்களை மதிக்க வேண்டுமென்று தான் பெண்களுக்காக வலை உருவாக்கவும், பதிவர்களுக்காக சங்கம் ஒன்றை அமைத்து செயற்படுத்தவும் நினைத்திருக்கின்றேன் சக பதிவுலக நண்பர்களுடனும் கதைத்துக் கொண்டிருக்கின்றேன் இப்படி சாப்பிடாமல் இருந்தால் எப்படிஉன்னால் இப்படியான நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்ள முடியும் முதலில் வா வந்து கொஞ்சம் சாப்பிடு இது நல்ல பொங்கல் தான் உனக்கு ஏதும் ஆகாது வா ஸ்ரேயா வந்து சாப்பிடு....

(அவர் பேசிப் பேசி களைத்துப் போய் மௌனமானார்) தொடர்ந்து வருகிறார் சகபதிவர் ஒருவர்

ஸ்ரேயா என்ன இது நீ இப்படி செய்து கொண்டிருக்கின்றாய்? மரியாதையாக சாப்பிடு இல்லை உன்னை வித விதமாக படம் பிடித்து கம்மண்ட்ஸ் எனும் பெயரில் கேவளமாக எதையாவது எழுதி உன் இமேஜை டேமேஜ் செய்துவிடுவேன். என்ன தான் இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிர் ஆகாது நாங்கள் சுட்டெறிக்கும் வெய்யிலில் எரிந்தும் எரியாமலும் இருந்து கஸ்டப்படுகின்றோம் புரிந்துக் கொள்ளாமல் சின்ன புள்ள தனமா இல்ல...

(அவரும் முடியாத கட்டத்தில் அழுதுவிடவே அடுத்தவர் சாந்தமாக வருகின்றார்)

ஸ்ரேயா இன்றைய விலைவாசி பற்றி உனக்கு தெரியுமில்ல? (தெரியுமாஇல்லையா என கேட்கின்றார்) உனக்கு விழா கொண்டாடவென ஆன செலவுகள் எவ்வளவென தெரியுமா? அந்த காசை கொண்டு போய் ஏதாவது பிசினஸ்ல போட்டிருப்பேன் பாவமென உனக்கு செலவழித்தால் நீ இப்படி செய்கின்றாய் என்ன நடக்குது இங்கே..... இன்றைய சந்தையின் போக்கு உனக்கு தெரியுமா விலைவாசி எவ்வளவு ஏறிப் போனதென தெரியுமா? தெரிந்திருந்தால் நீ ஏன் இப்படி செய்ய போகின்றாய் தெரியாத உன்னிடம் பேசுவதை விட நான் பேசாமல் செல்வதே மேல் வருகின்றேன்

(இப்படி பேசியும் ஒன்றும் ஆனபாடில்லை தொடர்ந்து கோபத்தோடு ஒருவர் முன்வருகின்றார்)

நேற்று ஆதவனை மகிழ்வித்தாயிற்று இன்று உன்னை சந்தோசப்படுத்தவென இத்தனை ஏற்பாடுகளை செய்தும் நீ ஒரு வாய் சாப்பிட மாட்டேனென இருக்கின்றாய் இப்போது சாப்பிட போகின்றாயா இல்லையா? கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வைத்திருந்த பொங்கலைக் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு அதே கோபமான முகத்துடன் விரைந்தார் அந்த பதிவர்.

அவரது அந்த செயல் அங்கு வருகை தந்திருந்த ஏனைய பதிவர்களை முயற்சிசெய்து கஸ்டப்பட விடாமல் தடுத்தது ஆனாலும் ஸ்ரேயாவிற்கு யாரைப் பிடித்திருக்கின்றது என தெரியவில்லையே என்ற கவலையோடே அனைத்துப் பதிவர்களும் விரைந்தார்கள்.

Monday, January 11, 2010

என்றென்றும் நீ வேண்டும்

உயிரையே பிழிந்து எடுத்த பின்னும்
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன் தினம் தினம்
அப்படி என்னத்தான் இருக்கிறது உன்னிடம்

என்னை ஏங்க வைத்து சாகடிக்கிறாய்
ஏமாற்றங்களால் நோகடிக்கின்றாய்
என்றாலும் என்றும் சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

வாழ்க்கையை சுவைத்து விட
வாட்டத்தை துடைத்து விட
மாற்றானாய் நீ வேண்டாம்
மன்னவனாய் நீ வேண்டும்

சின்ன சின்ன சந்தோசங்கள் வேண்டும்
உன் சில்மிஷங்களும் வேண்டும்
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ மட்டும் வேண்டும்.

சலிக்காத உன் பேச்சு வேண்டும்
சங்கமமாக நீ வேண்டும்
பூவைப்போல ஒரு வாழ்க்கைக்கு
உயிர் தர நீ வேண்டும்

என்னை ஏங்க வைத்து சாகடிக்கிறாய்
ஏமாற்றங்களால் நோகடிக்கின்றாய்
என்றாலும் என்றும் சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

Thursday, January 7, 2010

சுவாசமே நட்பாய்

ஆழப்பதிந்த ஈட்டியின்
தழும்பாய் உன் நட்பு
என் இதயத்தில்!

மீட்டிப்பார்க்கும் போதெல்லாம்
அத்தனையும் பசுமையான
நினைவுகளாய் நெஞ்சில்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறிக்கிடந்த என் எண்ணங்களின்
சேர்க்கை உருவாய் நீ!

சில காலம் சேர்ந்திருந்தும்
பல காலம் பிரிந்திருந்தும்
பாசத்தின் ஊற்றல்லோ நீ!

வேசமில்லா வரமல்லோ
வாசமுள்ள மலரல்லோ என்றும்
வாடாத உன் நட்பு!

நேசத்தின் உறவதாம்
நெஞ்சத்தின் துணையதாம்
என்றென்றும் உன் நட்பு!

காலமும் நிலைக்குமாம்
காத்திருந்தும் தொடருமாம்
சுவாசமே உன் நட்பாய்!

Monday, January 4, 2010

மனித உரிமை மீறல்களும் தனிமனித கடப்பாடுகளும்

மனித உரிமை மீறல்கள் என ஆங்காங்கே செய்திகள் வெளியாகின்றன என்ற போதும் நம்மில் பலருக்கு அது குறித்ததான தகவல்கள் பூரணமாக தெரிந்திருப்பதில்லை. சிலர் அதனை தெரிந்து கொள்ள விரும்புபவர்களாகவும் இல்லை.

இப்படியான ஒரு நிலையில் நமது சமூகம் காலத்தை கடந்து கொண்டிருக்கும் போது அசம்பாவிதங்களின் அதிகரிப்பில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழும் காலத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதின் மகத்துவத்தையும் உணர்ந்து செயற்படும் போது மாத்திரமே அகிம்சையோடானதொரு உலகை காண முடியும்.

மனித உரிமை என நாம் எதனை கூறுகின்றோம் யாராலும் உருவாக்கப்படாததும், எவராலும் வழங்கப்படாததுமான மனிதனுக்கு கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை. அத்துமீறிய பறிப்புக்கள் தண்டனைக்குறிய குற்றம் என என்ன தான் வார்த்தைக்கு வார்த்தை வாய் கிழிய பேசினாலும், இன்றைக்கு இலங்கை சுதந்திரமடைந்து 61 வருடங்களின் பூர்த்தியைக் கண்டுள்ளதாக சொல்லப்பட்டாலும் இங்கே தனி மனித சுதந்திரமென்பது எந்த நிலையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்ற போது நடந்த அட்டுழியங்கள்,மனிதப் பேரழிவுகள், சொத்துப் பறிப்பு, படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகளின் பின்னராக ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலில் தீர்வாக அறிவிக்கப்பட்டதே மனித உரிமைப் பிரகடனம். அதற்கமைய வருடா வருடம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் அதே அட்டூழியங்கள் இன்றும் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சமத்துவமற்ற நிலை, வழக்கு ஆதாரம் இல்லாமல் கைது செய்தல், காணாமல் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை என வெவ்வேறு உருவில் அவதாரமெடுத்துள்ளன.

இவ்வாறாக மனித உரிமைகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் அசம்பாவிதங்களின் தொடர்ச்சிக்கான பிரதான காரணம் யாதென ஆராயும் போது எமக்கு தெளிவாக தெரிய வருவது, இவ்வமைப்பின் உறுப்புரைகள் குறித்தும், சட்ட திட்டங்கள் குறித்ததுமான போதிய அறிவு மக்களுக்கின்மையே. இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலமாக மாத்திரமே இதற்கான தீர்வொன்றினை காண முடியும்.

இதோ 1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமைகள் சாசனம்' 30 உறுப்புரைகள்.

1. சமத்துவ உரிமை சகல மனிதர்களும் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கும் உரிமை இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் அவரவர் விருப்பத்திற்கமைய வாழும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு.

4. எந்த ஒரு தனி மனிதனையும் அடிமையாக நடத்தும் உரிமை எவருக்கும் இல்லை.

5. சித்திரவதை, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பதற்கான உரிமை.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.

7. அனைவருக்கும் சமமான சட்டத்தின் பாதுகாப்பு.

8. ஒருவரின் உரிமை பறிக்கப்படும் போது சட்டத்தை நாடும் உரிமை.

9. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

10. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைத்தல், நாடு கடத்தலுக்கு யாருக்கும் உரிமை இல்லை.

11. எந்த நபருக்கும் நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை.

12. குற்றஞ்சாட்டப்படுவோர், நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

13. ஒருவரின் தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் யாரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

14. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

15. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

16. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

17. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை.

18. எந்த ஆணோ பெண்ணோ தான் விரும்பியவரை திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

19. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

20. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் உண்டு.

21. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

22. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

23. அரசியல் உரிமை அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

24. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

26. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

27. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

28. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

29. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது அனைவராலும் மிதிக்கப்படுவது தடுக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு தனி மனிதனும் சட்டத்தை தன் கரங்களில் எடுத்துக் கொள்ளும் உரிமையை கொண்டவனல்ல என்பதும் உணர்த்தப்பட வேண்டும். எனவே முழு உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்சத்தில் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி வளமானதொரு எதிர்காலத்தை அடையலாம். என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் என்று ஒவ்வொருவரும் மனிதமுள்ள மனிதராய் மாறுகின்றார்களோ அன்று வரை இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது கடினமான விடயமே.