Search This Blog

Monday, June 28, 2010

தலை நிமிர்ந்து செல்லுவோம்

வஞ்சங் கொண்டவர் புடைசூழ குலவி
வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து
விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து
பொருத்தமுற பொய்மை தனை போற்றி நின்றபோதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

மனை பறித்து இடை மடமமைத்து கொடுத்து
மந்தைகளி லொன்றாக எம் குலமும் சேர்க்க
உடன்பிறந்த உறவுகளை ஒவ்வொன்றாய் லைத்து
உடலோடு மனமுடைந்து சோர்ந்து விட்ட போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

நோக்குந் திசையெலாம் களியாட்டம் வளியாகி
மண் பறித்த நோ வந்து நெஞ்சையு மடைத்து
தீண்டும் தென்றலும் தீய தனலாக எரித்து
இரவிலொரு ஒளிவீச்சு கண்பறித்து போகினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

களிப்பினொடு காலனும் பாசக் கயிற்றை நீட்டி
காயத்தில் மண்ணள்ளி தூவிவிட்டு சிரித்து
சிறைவாசல் களிதன்னை ஏற்று தினம் வாடி
சீற்றமுற சிங்கமும் உயிர் குடித்து போகினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

வேஷங்களைப் பூசிக்கொண்டு வாசல் வரை வந்து
பொய் பாசத்தொடு பட்டணத்தில் வீடு தாறேன் என்று
ஆசை காட்டி மோசம் செய்து ஆடைகளும் களைத்து
தாயோடு தாய் நாடும் சேர்த்தெடுக்கும் போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

தோல்வி கண்டு தொடர்பிழந்து நிலைப்பில் நிர்மூலமாகி
நிந்திக்கும் தந்தி கண்டு நிகரில்லா இடர் தந்து கூடி
வெற்றி யென்னும் மாயை சூடி நிஜத்தினில் பாடி
வலை வீசி உலை குழைத்து வஞ்சம் தீர்த்து போயினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

கரம் பற்ற முடியாமல் கைகளையும் புதைத்து
கால்களிலே கடிவாளம் நீளத்திற்கு பூட்டி
கண்டபடி மாதருயிர் பருகி நிதம் ஊண் தேற்றி
புறமுதுகு காட்டி எம்மை ஓடச் சொல்லும் போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

கண்டவரும் நற்றமிழை நாசஞ் செய்ய துடித்து
நாவாலே வளைவுகளால் நாட்களையும் கடிந்து
குடி தன்னில் குடி சேர்த்து கூர் வாளால் கிழித்து
உயிர் குடிக்க சுரம் சேர்த்து யாக்கை தன்னை முடக்கினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

எட்ட நிற்கும் தென்றலுமே எட்டி வந்து இடித்து
ஏழ் கடலு மொன்றாகி கிட்ட வந்து அடித்து
எரிமலையில் தீப்பிளம்பு முட்ட வந்து பொசுக்கி
பஞ்ச பூதமுமே ஒன்றாகி பறந்து வந்து தாக்கினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

புரியாத மொழியினிலே உணர்வு புதிராகப் பேசி
உள்ளங்கள் மீதினிலே உவர் நெருப்பள்ளி வீசி
கனவுதரும் நினைவினிலே கடை நொடியை களைத்து
நித்தம் நித்தம் நிறுத்தாமல் நித்திரையைக் குழப்பினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

Friday, June 25, 2010

சித்திரம் பேசுதடி
Picture is a poem with out words

Thursday, June 24, 2010

புரியா நிஜங்கள்

நினைவு தோற்கும் போது
கனவு தானே வாழ்க்கை
கவலை சுமந்து சுமந்து
களைத்துப் போவதேது...?

உறவு உதறும் போது
உணர்வு தானே வாழ்க்கை
உரிமை கோரிக் கோரி
இடிந்துப் போவதேது...?

தனிமை சூழும் போது
மௌனம் தானே உறவு...
துணையை தேடித் தேடி
தொலைந்துப் போவதேது....?

மனது நோகும் போது
நினைவு தானே உறவு
மரணம் தேடித் தேடி
விரைந்துப் போவதேது...?

வினாக்களில் விடைகள்
ஒழித்துக் கொண்டு
விந்தை செய்யுது உலகம்!

விடைத் தேடிய
புரியா நிஜமாய்
புவி சூழ உயிர்கள்!

Friday, June 18, 2010

நீ தானே என் சுவாசம்

நினைவுகள் சுமக்கும் இதயத்தின் ஆழம் புதைத்தேன் உனதுருவம்
கனவுகளை சேர்த்து கண்களில் கோர்த்து அமைத்தேன் புது உலகம்
தினம் தினம் நூறு கவிதைகள் கொண்டு வரைந்தேன் ஒரு கடிதம்
மதியெல்லாம் உனதாக மனமெங்கும் நீயாக காதல் வரமானது
(நினைவுகள் சுமக்கும்)

கண்களின் ஓரம் மின்னிடும் ஜாலம் நீயன்றி யார் தந்தது.....
இனிமைகள் தந்தாய் இம்சையும் செய்தாய் என் முன்னே நீயாய் வந்தாய்
இத்தனை காலம் இல்லாத மாற்றம் என்னுள்ளே யார் தந்தது....
கனவெல்லாம் உனதாக கவியெல்லாம் அழகாக என்னுள்ளே நீயாய் வந்தாய்
(கண்களின் ஓரம்)

பூவோடு உரசும் காற்றுக்கள் பேசும் புதிர் தானே உன் ஸ்பரிசம்
உயிர் வாழ தூண்டும் உணர்வெல்லாம் ஆளும் புதுமையே உன் சுவாசம்
அனிச்சத்தின் அழகாம் அலை வான ஒளியாம் பேசும் மொழியின் மென்மை
மின்னல்கள் இடியாகும் இமையெல்லாம் இருளாகும் இன்பமே உன் வெள்ளம்
(பூவோடு உரசும்)
(நினைவுகள் சுமக்கும்)

வாழ்வோடு வாடலும் தேடலும்

நான் அழிந்துப் போய் நால்வரும் ஒன்றானால் யதார்த்தம் ஆனால் அதனை அடைவதற்கான தடைகள் ஏராளம். அனுபவமே வாழ்க்கை ஆனால் அனுபவங்களை அன்றோடு விட்டுவிட்டு அடுத்த நாளை தேடும் மனது இவ்வாறிருக்க இருப்பவன் இல்லாதவனையும் இல்லாதவன் இருப்பவனையும் மாறி மாறி குறைக் கூறிக் கொண்டே கழியுது காலம். இங்கே ஜாதி மத பேதங்கள் தலைவிரித்து வெறிப்பிடித்து ஆடுகின்றது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் எங்கே தொடங்கியது எங்கே முடிகின்றது என்ற வாழ்வின் போக்கு விளக்கமில்லாமல் விடிந்து முடிகின்றது. அதிலும் போட்டி எதிலும் போட்டி நானா நீயா அவனா இவனா? எவனோ சொன்னான் என்று ஏற்றுக்கொள்ள முனைதல் முடியாத போது முரணாக முன்னெழல் இது தான் வாழ்வின் வடிகால் வழி வழிந்தோடுது பொறாமை அணையில்லாமல் கரை கடந்து சுயமாக சிந்திப்பதே இல்லை. ஆக்கவும் அழிக்கவும் அவனே முயன்றான் ஏதோ சக்தி என்று அவனே பரப்பினான் இதயத்தில் தான் தான் ராஜா தானே மந்திரி தன்னை விட்டால் தன்னை விட்டால் யாருமில்லை என்ற ஆணவம் ஆட்டி வைக்கும் அன்றாடம் எதற்காக நான் செய்ய வேண்டும் தான் தனக்கு மட்டுமே வேண்டும் என ஒரு தரப்பினரும் எனக்கென்ன வந்தது என ஏனையோரும் நடை போடுகின்றனர். நான் நம்மினம் நம் உறவுகள் என்ற உயரிய எண்ணம் உருவாகி இருந்தால் உலகில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு ஏது? எல்லோரும் வாழ்ந்திருப்பார்கள் இன்று பணம் படைத்தவன் வாழ்க்கையைக் கொண்டாட வறியவன் வாழ்வதைப் போல நடித்துக் கொண்டிருக்கின்றான் பணம் படைத்தோரால் ஏழையின் அடிவயிறு ஆட்டம் காண்கின்றது. அவன் வாழ்வு தூண்டிலில் மாட்டிய மீனாய் தத்தளிக்கின்றது. இங்கே இவர்கள் ஒற்றுமையாய் இருந்தால் இன்னொரு சக்தி ஏன் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும்? ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணல் மேடை தெரியாதவனுக்கு ஆடுபவன் மேலை இப்படித் தொடர எங்கனம் முன்னேற்றம் காண்பது? ஏட்டுக்கல்வி ஏட்டோடு தூங்க எவன் வீட்டை எவன் கெடுப்பது இது தான் புதிய முயற்சி வென்றவன் கொண்டாட தோற்றவன் மேலும் தோண்டப்படுகின்றான்.

அவன் இரத்தம் வியர்வை வழி வென்றெடுக்கப்படுகின்றது. எண் சாண் உடம்பு எறும்புக்கு உணவாக! எதற்காக இத்தனை ஆட்டம்.... எதற்காக இத்தனை ஓட்டம்? இருப்பதைக் கொண்டு இல்லாதவனுக்கு கொடுத்து வாழ்ந்தால் இவனும் வாழ அவனும் வாழ்வான் இங்கோ இருப்பவன் இல்லாதவனை உரசி மேய்கின்றான், உருவம் கலைக்கின்றான். இத்தனையும் எங்கே கொண்டு சேர்ப்பதற்காக.... இன்று தான் வாழ்க்கை வாழ்க்கை தான் இன்று இதனை மறந்து விடியலில் தொடங்கிடுமா என்பது தெரியாமலே நாளை நாளை என நாளைக்காய் துடிக்கின்றான். குரங்கிலிருந்து வந்தவனே மனிதன் என்று கூறப்படும் பாரம்பரியம் கூர்ப்பின் விளைவா? ஒன்றை விடுத்து ஒன்றில் பாய்வதனைக் கண்டே கூறப்படுகின்றதா? ஒன்றை விட இன்னொன்றும் இன்னொன்றை விட மற்றொன்றும் இவனுக்கு சிறப்பானதாகவே தோன்றும் மனிதனின் ஆசைகளுக்கு முடிவே இல்லை உணமையில் உண்மைகள் மழலைகளை அவற்றின் கள்ளம் கபடமற்ற சிரிப்பொன்றே தூய்மை! மனிதன் வளர வளர அவனது ஆசைகளும் பல் மடங்கில் வளர்ச்சியடைகின்றன. அதன் பிரதிபலிப்பே இன்றைய உலகில் பாரிய அளவில் தொடங்கியுள்ள பிரச்சினைகள் இவனின் பலமும் பலவீனமும் ஆசையே ஆசையினால் அகிலத்தை வென்றவனும் இருக்கின்றான் அதே ஆசையினால் அனைத்தையும் துறந்தவனும் இருக்கின்றான் அவரவரைப் பொறுத்த் ஆசைகள் வேறுபடுகின்றதே தவிர ஆசை இல்லாத மனிதனே இல்லை. கடவுள் பக்தி தனக்கும் மிஞ்சிய ஏதோ ஒன்று உண்டு என்பதை மதங்களில் வேறுபாடு கொண்டிருந்தாலும் நம்பிக்கையில் ஒன்றிணைகின்றார்கள். சொர்க்கம் நரகமென்றும் சொர்க்கமென்றால் நல்லது மட்டுமே செய்தவர்கள் இறந்ததும் போய் சேருமிடம் என்றும் கெட்டது செய்தவன் போய் சேருமிடம் நரகம் என்றும் காலம் காலமாக சொல்லப்படுகின்றது இது மனிதனின் நம்பிக்கை மட்டுமே தானே சொர்க்கத்தையோ நரகத்தையோ நேரில் பார்த்தவர் வந்து சொன்னதில்லையே... இங்கே பாவம் செய்யாத மனிதன் யார்? அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாவத்தைச் செய்தவர்களாகவே இருக்கின்றர். சிலர் தாம் செய்தது சரியா தவறா என்பது தெரியாமல் குழப்பத்தில் நாட்களை கடத்துபவர்களாகவும் இருக்கவே செய்கின்றனர் காலப்போக்கி்ல் அதை முற்றிலுமாய் மறந்தும் விடுகி்ன்றார்கள்.

ஏதோ ஒன்றின் அழிவே இன்னொன்றின் உதயமாக இருக்கின்றது. இன்று எதையாவது ஆக்க வேண்டும் எதிலாவது ஜெயிக்க வேண்டும் என அத்தனையையும் கற்றுக் கொள்ளத் துடிக்கின்றான் அதன்படி கற்று வெற்றியும் அடைகின்றான் ஆனால் உண்மையான வெற்றியென்பது இதுவோ? என்றாவது தன்னை அறிந்துக்கொள்ள முயன்றிருக்கின்றானா? தான் யார் என்பதை அறிந்திருக்கின்றானா? அப்படியானால் இவர்கள் போலியின் மேல் நின்று கொண்டு குதூகலிப்பவர்கள் தானே? எவன் ஒருவன் தன்னை முழுதாய் உணர்கின்றானோ அவனே வெற்றியாளன். மற்றவரில் என்ன குறை காணலாம் என்பது தானே முயற்சியாக அமைகின்றது தன்னில் உள்ள குறைகள் தெரிவதில்லையே....! தான் செய்வது பிழை என்று தெரிந்தும் தொடர்ந்து கொண்டிருக்கும் வர்க்கமும் வாழவே செய்கின்றது.

விட்டுக் கொடுப்பதைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை ஆனால் மற்றவரிடம் மட்டும் எல்லாமே எதிர்ப்பார்ப்புக்கள். இங்கே யாரை நொந்துக் கொள்வது? சீக்கிரமே சிதைந்துவிடும் உடலியல் நிறைவு ஏனோ மனதை விட ஏனையவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. நேற்று தோற்றவன் இன்று ஜெயிப்பான் இன்று ஜெயிப்பவன் நாளை தோற்பான் இது தான் யதார்த்தம். ஒருவன் தொடர்ந்து வெற்றியாளனாகவே இருப்பதுமில்லை, ஒருவன் தொடர்ந்து தோல்வியைத் தழுவிக்கொண்டே இருப்பதும் இல்லை. இங்கே தன்னம்பிக்கையும் முயற்சியுமே ஒருவனை வெற்றியாளனாக்குகின்றது. சோம்பேறித்தனமும், ஆணவமும் ஒருவனைக் கீழே தள்ளிவிடுகின்றது. மாற்றங்கள் மாற்றம் செய்கின்றன மனதை மட்டுமல்ல மலர்களைக்கூட! ஒவ்வொருப் படைப்பும் ஒவ்வொரு அதிசயமே..... இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே.... என்றால் இங்கே இத்தனைப் பாகுபாடு எதற்காக என்பது தான் இன்றும் நம்மை குடைந்தெடுக்கும் கேள்விகள் இல்லையா? அதிலும் அதிசயம் உள்ளது. ஏழையையும் பணக்காரனையும் படைத்ததன் நோக்கம் ஏழையானவன் முயற்சியில் பணக்காரனைப் போல வர வேண்டும், பணக்காரன் ஏழையானவன் தன் நிலையை அடைய உதவ வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கே பணக்காரன் ஏழைத் தன்னிடத்தைப் பிடித்து விடுவானோ என்ற பொறாமையோடும், ஏழைப் பணக்காரனைப் போல வர முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு முயற்சிகளோ, உதவிகளோ இல்லாமலும் உறைந்து கிடக்கின்றனர் கெட்ட எண்ணங்களைச் சுமந்தபடி....., ஆனால் என்றோ ஒரு நாள் அவனுக்குத் தெரியாமல் அவன் அசைவுகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடத்தான் போகின்றன. யாராக இருந்தாலும் தீயிற்கோ, மண்ணிற்கோ உணவாவது தானே ஒவ்வொரு மனிதனதும் விதி!

இதனை உணர்ந்து யதார்த்த வாழ்வினை புரிந்து நடைப்போடப் பழகினால் வாழ்வு செழிக்கும் நாட்கள் சிறக்கும். வளமான வாழ்வு வரமாக நம் கைகளில் தவழும்!

வாழ்க வளமுடன்!

நன்றி இருக்கிறம்

உள்ளம் உணர்வாகும் உணர்வில் உழைப்பே வாழும்


உதிரத்தை
வியர்வையாக்கி
உடல் தன்னை வருத்தி தினம்
உலகத்தில் உரமாக - நல்
வரமாக வந்துதித்த மானுட
கலங்களின் இறப்புக்களோ
கதைகள் பல எடுத்துரைக்க
வரலாற்றில் தடம் பதித்த
சுவடுகள் சொற்பமல்ல
ஆண்டாண்டு காலமாக
நேர வரையறையின்றி
மாண்டு மாண்டு மாடாய் தேய்ந்த
மானுட போராட்டம்
நாள் முழுதும் தன் உடல் வருத்தி
தானே சாவதை தவிர்க்க;

அக்கினியில் அழுத்தப்பட்ட
கறைகளின் திரியாக
தன்னோடே ஒட்டிக்கொண்டு
படையாக தன் நிறம் மறைத்த
வியர்வை தழும்புகளோடு
களைப்பும் துடைத்தெறிந்து
தூய காற்றோடு தூக்கத்தையும்
ஏந்திக்கொள்ள 125 ஆண்டுகளுக்கு
முன்பாக பொதுவுடமை எதிர்த்து வரும்
அமெரிக்காவின் சிகாகோ நகரில்
உழைப்பாளிகளின் ஒன்று திரளல்
உரிமை கோரிக்கை போராட்டத்தின்
முடிவுரை இன்றைய 8மணி நேரமாக
சுருக்கப்பட்ட உழைப்பு நேரமும்
வாரத்தில் ஒரு விடுமுறையும்

ஓய்வுதினம் என்றாலும்
கடமை உணர்ந்தவர்கள் கருதி முன்வந்து
உலகத் தொழிலாளரின் ஒன்றுபட்ட
உழைப்பை கௌரவிக்கும் திருநாள்
வைகாசியின் முதல் நாள்

வானத்தை தொட்டுவரும்
வாலிபரின் கூக்குரல்கள்
வாடாமல் தொடரும் எங்கள்
முதியோரின் முழக்கங்கள்
ஊரெங்கும் ஊர்வலங்கள் ஆம்
இவை உரிமை ஊர்வலங்கள்
கரடு முரடான வாழ்வின் பாதைகளில்
கவலை மறந்துவிட்டு களிப்போடே போற்றிவரும்
காலை முதல் மாலை வரை கண்கொள்ளா
காட்சியல்லோ..... அன்றோடு அவை முடிய
மறு நாளே உழைப்புக்கு உயிர் கொடுக்கும்
வியர்வைக்கு விடுதலையளிக்கும்
வீரத் தொழிலாளர் புகழ்பாடி நாம் மகிழ்வோம்

ஜாதி, மதம் நீளவில்லை பேதங்களும் பிறப்பதில்லை
ஜாதகங்கள் கால் முளைத்து ஜோதிடரை பார்ப்பதில்லை
நல்ல நேரம் கெட்ட நேரம் "நா" வதுவும் உரைப்பதில்லை
ஆண்டி முதல் அரசன் வரை ஆர்ப்பரிக்கும் இன் நாளில்
ஆதரவாய் அனைவருள்ளும் அகிம்சை குடிகொள்ளும்
அன்பை மனம் அள்ளும் அகிலம் உயிர் கொள்ளும்

அடிமைகளாய் முடக்கப்பட்டு போராட்ட கைதிகளாய் அடைக்கப்பட்டு
வலிகளும் வடுக்களும் வயதோடு துணையேற்று
வரிசையாய் வலம்வந்த உழைப்பாளர்
உலகத்தின் உயிரல்லோ - அவரை
உலகத்தின் உயிர்ப்புள்ள வரை உயிராய் மதிப்போம்
உலகை அவர் துணையோடு ஜெயிப்போம்!

நன்றி இருக்கிறம்

Thursday, June 17, 2010

என் உயிரின் உயிராக

நீ வேண்டும் எந்தனுக்கு என் உயிரின் உயிராக
இன்பமுற நான் வாழ்ந்து மண்ணோடு மண்ணாக

மெய் தீண்டும் மெய்யாக வைகறையில் உடனிருக்க
உளத்தொடர்பு கொண்டிங்கு உறக்கத்திலும் உறவாட
போலிதனை பிரித்தறிந்து புறந்தள்ளி புலனாக
மாற்றங்கள் செய்து தினம் மடிதன்னில் எனைக் கிடைத்த
விதி தன்னை வேறாக்கி மதியூடு புவியாள (நீ வேண்டும்)

விண்ணும் மண்ணும் நான் தொடினும் விரைந்தோடி எனைச் சேர
வருத்தத்தில் நான் வாட வந்தென்னை அணைத்தெடுக்க
அழும்போது துவலாமல் என் கண்ணில் நீர் துடைக்க
தோற்றத்திலே துப்பறிய தூயவைகள் சேர்த்தறிய
வீட்டினிலே விளக்கேற்ற விளக்கினிலே ஒளியாக
(நீ வேண்டும்)

நீ வேண்டும் எந்தனுக்கு என் உயிரின் உயிராக
இன்பமுற நான் வாழ்ந்து மண்ணோடு மண்ணாக!