Search This Blog

Friday, December 13, 2013

பிரிவுகளை தடுப்போம்

ஈன்றோர், உடன்பிறப்பு, உறவு, நட்பு, காதல்  என வரிசைப்படுத்தப்பட்ட நபர்களிடம் நெருக்கம், தெரிந்தவர், அயலவர் என பல்வேறு பாகுபாடுகளையும் உட்சேர்த்து நமக்கென ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டே உரையாடல்களை தொடர்கின்றோம் என்றாலும் அனேக நேரங்களில் இவர்களுள் ஏதோ ஒரு தரப்பினரால் கசப்பான சம்பவங்களையும் வலிகளையும் சந்தித்து உணரவே செய்கின்றோம். எதனால் இவ்வாறான நிலை ஏற்படுகின்றது என ஆராய்ந்தால் நாம் அல்லது சம்பந்தப்பட்ட நபர் எதிர்ப்பார்க்கும் சாதகமான பதில் அவர்களுக்கு கிடைக்காமையினால் அவர்கள் வரையறுத்த எல்லை தாண்டப்படுவதே காரணமாக அமைகின்றது அது ஒரு விடயம் குறித்ததாகவோ, பொருள் குறித்ததாகவோ இல்லை இன்னொரு நபர் குறித்ததாகவோ அமையலாம். 

ஒருவர் மீது கோபம் தலை தூக்கும்போது இணைந்திருக்கும் போது வெளி தெரியாத அவர் குறித்த தீய அம்சங்கள், குணாதிசயங்கள் பெரிதாக தெரிய ஆரம்பிக்கும் இதனால் வெறுப்பு மூலமாகி பிரிவே நிரந்தரமாகும் இவ்வாறான நிலைமைகளை சமாளிப்பதற்கு ஏதாவது வழிமுறைகளை கையாளப்பழகிக்கொள்ள வேண்டும் எல்லா சந்தர்ப்பங்களையும் தீமை பயக்கும் என தெளிவாக தெரிந்தும் அணுசரித்து செல்ல வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல

இன்று பிரிவு என்பது வாழ்க்கையில் ஒரு சகஜமான விஷயமாகவே ஆகிவிட்டது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் வேறு எதிர்ப்பாராத பிரச்சினைகளை உருவாக்கி வாழ்க்கையையே சிதைத்து விடும். அது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் இவை அனைத்திற்கும் அன்பொன்றே மருந்தாகும். இன்றைய வாழ்க்கை முறை தராதரம் என எல்லா விடயங்களையும் தீர்மானிப்பது பணமாகவே காணப்படுகின்றது என்ன தான் பணம் பாதாளம் வரை பாயும், பணமிருந்தால் எதனையும் சாதிக்கலாம் என வாய் கிழிய கத்தினாலும் உண்மையான அன்பையோ, பாசத்தையோ தரக்கூடிய உறவுகளை தர முடியாது வேண்டுமானால் தகாத உறவுகளை மட்டும் சேர்ப்பித்து தரும்

ஒரு மனிதன் தன் சுற்றத்து உறவுகளை பற்றி அறிந்துகொள்ள சரியான தருணம் அவன் வீழ்ந்திருக்கும் தருணமே அவனிடம் அனைத்துமே இருக்கும் போது ஆயிரம் உறவுகள் சுற்றி வட்டமிடும் அவனது நிலைமை சற்று தவறிவிட்டாலோ விரல்விட்டு எண்ணக்கூடிய தரப்பினரே இருப்பர் சிலருக்கு அவ்வளவும் இருப்பதில்லை எனவே மனிதன் சமனிலையை பேணும் வகையில் தன்னை தன் தனித்தன்மையை அமைத்துக்கொள்ள வேண்டும் இன்னொருவரின் சேர்ப்பில்/பிரிவில் தன் நிலை மாறுபடும் எனும் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் தனியாக தீர்மானங்களை மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்

எனவே கோபமோ, ஏமாற்றமோ, மனச்சோர்வோ எதுவானாலும் இன்னொருவரின் மேல் வெறுப்பைக் காட்டுவதற்கு பதிலாக தனியாக அமைதியாக யோசித்து அதற்கான காரணங்களையும் தீர்வையும் கண்டறிந்து அதன்பால் செயற்பட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் பிரிவுகளையும் தவிர்க்கலாம். தன்னை ஏமாற்றியவர், அவமானப்படுத்தியவர், துன்புறுத்தியவரை நானும் பதிலுக்கு பதில் பழி வாங்கியே தீருவேன் என நின்றால் இறுதியில் மிஞ்சப்போவது இழப்பைத்தவிர வேறெதுவும் இல்லை. அளவுடன் இருக்கும் வரை எந்தப்பிரச்சினையும் வர வாய்ப்பிருக்காது பிரிந்துப்போன உறவுகளை சேர்ப்பது என்பது உடைந்த கண்ணாடியை  ஒட்ட வைப்பதற்கு சமன் என்ன தான் ஒட்டினாலும் சகஜமாக ஆரம்ப காலகட்டங்களைப்போல் அத்தனை நெருக்கமாக இருக்காது எனவே ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவோமானால் எந்த துயரும் எம்மைத் தீண்ட முடியாது

தொங்கு கயிறு

சிலுவைகளை சுமப்பதற்காகவே
சிறைபிடிக்கப்பட்ட சிட்டுக்குருவி நான் - ஏனோ
தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்தே
பழக்கப்பட்ட சுற்றங்கள் சூழ

 நின்றாலும் நடந்தாலும் 
சொல் ஈட்டி கொண்டே குத்திக் கிழிக்கும்
சொந்தங்கள் 

தினம் நூறு கதை கூறி
பார்வை வீச்சாலே சுட்டெறிக்கும் 
பந்தங்கள்

பழக்கப்படுத்திக் கொள்வதையை
வழக்கப்படுத்தச் சொல்லும்
ஈன்றோர்கள்

தூரிகை மிஞ்சிய வர்ணமாய்
அலட்சியமாய் பார்க்கும்
உடன்பிறப்புக்கள்

ஒதுக்கப்பட்ட மலர்போல
உதாசீனமாகவே உரசிப்பார்க்கும்
முதலாளி வர்க்கம்

உதாரணம் காட்டியே
ஏலனம் செய்யும் 
உதவும் கரங்கள்

இப்படியான
சிலுவைகளை சுமப்பதற்காகவே
சிறைபிடிக்கப்பட்ட சிட்டுக்குருவி நான் - ஏனோ
தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்தே
பழக்கப்பட்ட சுற்றங்கள் சூழ

Wednesday, December 11, 2013

எனக்கோரு இரங்கல் பா

ஜனனத்தின் முடிவது மரணமே கொள்வோம்
மரணத்தின் தொடக்கமோ புது ஜனனமே என்போம்
இடையில் இருப்பதே வாழ்வென்று காண்போம்
இருளையும் ஒளியையும் சேர்ந்திட ஏற்போம்

இறைவனின் படைப்பதில் இதனையும் பார்ப்போம்
இன்முகம் கொண்டவர் துயரினை துடைப்போம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் நீப்போம்
உறுதியுடம் நாம் ஓரினம் கோர்ப்போம்

கருவில் உயிர்பெற காரணம் கேட்டாய்
உருவில் உனைதர ஊதியம் கேட்டாய்
உலகில் உடன்வர உதவியும் கேட்டாய்
கடவுளின் கிருபையை யாரிடம் தீர்ப்பாய்

பூமிக்குள் நீ ஒரு விதையாய் வந்தாய்
புதிதாய் இங்கொரு பிறவியும் கண்டாய்
ஒட்டத்தின் முடிவதில் துயிலவே செய்தாய்
தூக்கத்தின் இறுதியில் துவண்டே வீழ்ந்தாய்

பிறப்பதோ இறப்பதோ பெரிதொன்றும் இல்லை
நிலைப்பினில் நாளொரு பயனதை சேர்ப்பாய்
கோபங்கள் சாபங்கள் கொன்று நீ வாழ்ந்தால்
மாண்டபின்னாலும் மனதினில் நிலைப்பாய்

தீயவர்  துணையதை ஏற்கவே மறுப்பாய்
தூயவர் துணை கொண்டு தாயகம் சேர்ப்பாய்
கலியுக கயவரை அடியுடன் வெறுப்பாய்
பார்ப்பவர் சீர்பட வாழ்வொன்றை வாழ்வாய்

மாண்டவர் மறுபடி எழுவதும் இல்லை
இருப்பவர் துணைவர சேர்ப்பதும் இல்லை
காட்சியில் மறைந்தவர் தூர நின்றாலும் 
சாட்சியாய் மனதினில் வாழ்வதே சிறப்பு

அகிலத்தில் எமை தந்த இறைவா நீ வாழ்க
இறைவனின் மறுவுரு தா(தந்தை)யே நீ வாழ்க
வழி தொட உறுதுணை உறவுகள் வாழ்க
என் மாமிசம் ஏந்திடும் மண்ணே நீ வாழ்க!

Tuesday, December 10, 2013

வாழ்ந்து தான் பார்ப்போமே!

வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் கண்மூடி திறக்கும் நேரத்திற்கிடையில் வெவ்வேறான வடிவங்களாக பரிமாற்றமடைவதோடு அவற்றில் பல ஓடி மறைந்து விடுகின்றன ஏனோ ஒரு சில மட்டுமே நிலையாய் பதிந்து விடுகின்றன. அவ்வாறாக மனதில் பதிந்த விடயங்க்கள், நிகழ்வுகள் எம் உள் மனதில் சந்தோசமாகவோ, துக்கமாகவோ மாறி ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வை தந்து செல்லும். நாம் விரும்பிய ஒன்று கிடைக்காமலோ தொலைந்தோவிட்ட போது மனிதன் துயரம் என்ற அகோர பாதாளந்துக்குள்ளும் விரும்பியதொன்று கிடைத்தோ, எதிர்ப்பாராத ஒரு நிகழ்வு சுபமாகவோ நடைபெறும் போது மகிழ்ச்சியின் உச்சத்திலும் திளைக்கின்றான். ஆக மனிதன் வாழ்க்கை என்ற புத்தகத்தை இன்பம் துன்பம் என்ற பக்கங்களைக்கொண்டு மாறி மாறி பிரட்டிக் கொண்டிருக்கின்றான். கண்ணுக்குப்புலப்படாத ஏதோ ஒரு சக்தி இதனை செயற்படுத்திக்கொண்டிருக்கின்றது ஆனாலும் சந்தோசத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள துணிந்த மனிதன்; துயரம் என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதோடு விரும்புவதும் இல்லை. 

துயரம் என்ற முற்றுப்புள்ளி ஒவ்வொரு சந்தோசத்திற்கும் இல்லை என்றால் மனிதன் தன்னை மறந்தே போய்விடுவான் இன்னிலையை சீராகப்பேணவே அந்த கண்ணுக்கு புலப்படாத சக்தியானது இயற்கையின் இரவு பகல் போல தொடர்ந்து ஒரே இடைவேளியில் இல்லையென்றாலும் அவ்வப்போது இந்த மாற்றங்களை சேர்ப்பித்து உண்மையை உணர்த்திவிட்டுச் செல்கின்றது. இப்படியாக வாழ்க்கையின் நியதி அமைந்துவிட்டப்போது; தோல்வியையோ, துன்பத்தையோ கண்டு துவல்வதை நிறுத்திவிட்டு அதனை எதிர்கொண்டு எவ்வாறு சமாளிப்பது என்பதை சிந்திப்பதில் நேரத்தை செலவிடலாம் மேலும் இவற்றை வெற்றிக்கான முதற்படியாக ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் மனதை சஞ்சலப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகள் சம்பவிக்காமல் பேணுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளலாம்.

தானாக தேடி வந்து கிடைத்த வெற்றிக்கும் போராட்டத்தினூடு கிடைத்த வெற்றிக்கும் நிறைய வித்தியாசங்களை நம் மனமே கண்டுணர்வதுண்டு.  நீ எப்போது வீழ்வாய் கைக்கொட்டி சிரிக்கலாம் என ஆந்தைக்கண் கொண்டு காவல் காக்கும் கேடுகெட்ட சமூகத்தின் நடுமே விழுந்தாலும் வேர்தாங்கும் ஆலம் விழுதாக பற்றிப்பிடித்து உன் உறுதியை பரைசாற்று: வலிகளின் நடுவில் வரும் வசந்தத்தை சுவைப்பதிலுள்ள சுகமே தனி! உன்னில் நீயே நம்பிக்கை வைத்தால் உன்னைத் தாண்டி தீமையெல்லாம் உனைத் தீண்டவும் அஞ்சும்!

நான் என்ற உன்னை நிலைநிறுத்த உனக்கு கிடைத்த அறிய வாய்ப்பாக இதனைக்கருதி முன்னேற முயற்சி செய். தவறிலைத்து தன்னை திறுத்திக்கொண்ட மனிதனே பூரணப்படுகின்றான் எனவே உன்னை நீயே பூரணமானவனாக்க முதற்படியை பொறுமையோடு கவனமாக எடுத்து வை எதுவெல்லாம் உன் தோல்விக்கு, கவலைக்கு காரணமாயிற்றோ அவை அனைத்தும் தூரம் வை! உன் குறிக்கோள் எதுவென்று ஆரம்பத்திலேயே குறித்துக்கொள் அது உன் இலக்கை அடைய இன்னும் இலகுவாகும். இது தான் என தீர்மானித்த பின்னரே கலத்தில் இறங்கு இடையில் வரும் தடைகளைக்கண்டு உன் எண்ண ஓட்டங்களைச் சிதறவிடாமல் நேர் பாதையில் ஒரே மனதோடு பயணம்கொள் மேடு பள்ளங்கள் எதுவாயினும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது

இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறு சுவைகளும் கலந்தது தான் வாழ்க்கை அத்தனை சுவைகளையும் சுவைத்துப்பார்த்த பின்னரே இனிப்பின் இன்பத்தை அறிய முடிகிறது அதுபோலத்தான் வாழ்க்கையின் தத்துவத்தை முழுமையாக அறிந்து சுவைப்பதற்கு இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, நட்பு, வெறுப்பு என பல வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு நபர்களைக்கொண்டு எம்மை ஆட்சி செய்கின்றது அதில் நீ எதனைக் கொ(ன்)ண்(று)டு எதனை வென்றாய் என்பதில் தான் வாழ்க்கை தேர்வு நடக்கின்றது ஆகவே, என்னவென்றாலும் நடக்கட்டும் எனக்கென்ன வந்தது என்னும் அலட்சியப்போக்கை அடியோடு நீக்கு உன் வயிற்றுக்குப் பசிப்பதை உன்னால் மட்டுமே உணர முடியும் அதே போலத்தான் உன் சந்தோசம் எதிலென்று உன்னால் மட்டுமே தீர்மாணிக்கமுடியும் அதனை நீயே நல்வழியில் தேடு. உன் வாழ்வை தேர்ந்தெடுத்து சரியாக அமைத்துக்கொள்ளும் பொறுப்பு உன்னுடையது அதில் மற்றோரின் அதிகாரத்திணிப்பை உட்செலுத்தாதே எதுவாயினும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்து தீர்க்கமான முடிவை தெளிவாக எடு அதில் உறுதியாகவும் இரு! வாழ்க்கை புதிதும் அல்ல அத்தனை கொடியதும் அல்ல என்பதை உணர்வாய் செழிப்பாக வாழ்வாய்!