Search This Blog

Wednesday, August 26, 2015

உறவுகள்!

சில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது. 

என்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெருக்கமான உறவே தான்! ஒரு நல்ல உறவு என்பது நாம் செய்வதையெல்லாம் சரியென கொள்வதாக கண்டிப்பாக அமையாது நம் நன்மைகளில் கூட இருப்பதைப்போன்றே தீமைகளிலும் உரிமையோடு சம பங்குகொள்ளும். அதோடு நம் நல்ல விடயங்களைப் பாராட்டுவதைப்போன்றே தவறுகளையும் சுட்டிக்காட்டி முடிந்தவரை நம்மால் தவறுகள் ஏற்படுவதை தவிர்த்துவரும்.

இரு நபர்களுக்கிடையிலான உறவு மிக அழகானது அதைப்பேணுவது நம் கைகளிலேயே உள்ளது. பொதுவாக பெற்றோரிடம், சகோதரர்களிடம் உள்ள உறவு இரத்தபந்தமாக அமைந்தாலும் ஒரு எல்லையை தாண்டி அவர்களிடம் உறவாட மறுத்துவிடுகின்றோம் இது அவர்களை தூரமாகப் பார்ப்பதனாலல்ல அதிக நெருக்கமாக உணர்வதால் ஒரு மரியாதை கலந்த அன்பு அது. நட்பு அந்த எல்லைகளை எல்லாம் கடந்து எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் இந்த நெருக்கம் மனதளவில் இருக்கும். ஒரு மனிதனின் சுயத்தை அவன் நட்பை வைத்தே அடையாளம் காணலாம் என மூத்தோர்கள் கூறுவதை நானும் நம்புகின்றேன். நண்பர்களை அத்தனை சீக்கிரத்தில் நாம் தேர்ந்துவிடுவதில்லை. சில சமயங்களில் நம் தேர்வுகள் தவறானதாகக் கூட அமைவதுண்டு ஆராய்ந்து திருத்திக்கொள்வதும், விலக்கிவிடுவதும் ஆறறிவு படைத்த நமது பொறுப்பே! இங்கு இத்தனைப்பேர் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எல்லை கிடையாது. யார், யாருடன் வேண்டுமானாலும் ஆண், பெண் பேதமின்றி நட்பு கொள்ளலாம். தவறே இல்லை. ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கையும் வேண்டாம், அதிகப்படியான சந்தேகமும் வேண்டாம் நல்ல நட்பைப்போற்றுவோம்.

காதல், திருமணம் யாரென்றே அறியாத ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பந்தங்கள். காதல்! எல்லா காதலும் பொதுவாக திருமணத்தில் முடிவதில்லை என்றாலும் இது ஒரு அழகான உணர்வு. நம்மை நாமே அழகாக உணரும் தருணம். கற்பனை கிரகத்தில் புதிதாக சிறகு முளைத்துப்பறக்கும் பட்டாம்பூச்சிகள். இது யாரையும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. நேரம், காலம், ஜாதி, மதம், மொழி எதனையும் பார்ப்பதும் இல்லை. இப்படியானக்காதல்கள் காதலாகவே வாழும். காதல் அழகை மட்டும் பார்த்து வருவதில்லை அன்பு, நடவடிக்கை, அக்கறை என எதைப்பார்த்து வேண்டுமானாலும் ஏற்படும் உணர்வு எப்போது, யார் மீது ஏற்படும் என்பது சொல்லமுடியாத இது ஒரு பால் ஈர்ப்பு. தன்னை மட்டுமே பார்க்க வேண்டும், தன்னோடு மட்டுமே பேச வேண்டும் என சுயநலம் நிறைந்தது காதல். காதலித்தே பார்க்க வேண்டும் காதலை உணர! காதல் செய்யுங்கள் :) உண்மையாக உள்ளத்தால் காதல் செய்யுங்கள். இங்கும் காதல் என்னும் பெயரில் பொய்யாக நடிப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். தவறுதலாக பயன்படுத்த நினைப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். சரியான நபரை தேர்ந்து காதல் செய்யுங்கள்.

திருமணம்! மனதாலும் உடலாலும் உறவாக ஒன்ரற கலந்து தன் துணையை மறுபாதியாக ஏற்கும் பிணைப்பு. சிலரது பெற்றோரின் சம்மதத்துடன் பேச்சுத்திருமணமாகவும், சிலரது தன் துணையை தானே தேர்ந்ததன் பலனாக தனியாக காதல் திருமணமாகவும் அமைந்துவிடுகின்றது. எது எப்படியோ இது ஒரு புது உலகம். இதுவரை இருந்ததைப்போன்றல்லாது எல்லாமே புதிதாக இருக்கும். பெண்களுக்கோ இருக்கும் சூழலும் புதிதானதாகவே இருக்கும்! இங்கே தான் எந்தத் தடையும் இல்லாமல் ஒரு சக ஆணுடன் ஒரு பெண் தனியாக இருப்பதற்கு எல்லோராலும் அனுமதிக்கப்படுகின்றாள். காதலோடு காமமும் சேர்ந்தே இருக்கும் இந்த உறவில்! கணவன் மனைவி இருவருக்கிடையில் எதுவும், எவரும் இடையூராக இருப்பதில்லை. இங்கே காதலில் போல அதை செய்யாதீர், இதை செய்யாதீர், அப்படி இருக்காதீர், இப்படி இருக்காதீர், நேரம், காலம் என்ற எந்த பிரச்சினையும் இல்லை. தம்பதியருக்கிடையிலான புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒருவருக்கொருவர் எத்தனை உதவியாக இருக்கின்றார்கள் என்பதனடிப்படையில் நெருக்கம் அமைந்துவிடுவதோடு உறவு சிறப்பாக அமைந்துவிடுகின்றது. இங்கே விளையாட்டுத்தனங்கள் மூட்டைக்கட்டப்பட்டு நமக்கென பொறுப்புக்கள் தலை தூக்கும். ஒரு தாயின் பொறுப்புக்களை மனைவியும், தந்தையின் பொறுப்புக்களை கணவனும் ஏற்றே ஆகவேண்டிவரும். இங்கே வேலைப்பழு, ஓய்வின்மை போன்ற சிக்கல்களும் ஏற்படும்.  எல்லா திருமண பந்தங்களும் ஆரம்பத்தில் இருப்பதைப்போலே இறுதிவரை இருந்துவிடுவதில்லை. சில சில பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கவே செய்யும். இதன் "மூல" காரணம் ஆரம்பத்தில் இருப்பதைப்போல (உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி நலம் விசாரிப்பது, தொலைபேசியில் அவ்வப்போது பேசுதல்) போன்ற விடயங்களுக்கு போகப்போக முக்கியத்துவமளிக்காமையே! இதிலும் இரண்டு வகையுண்டு ஒன்று நம்மவர் தானே என்ற எண்ணம், மற்றது வேண்டுமென்றே புறக்கணிப்பது. எது எப்படியானாலும் அதனால் ஏற்படும் விலகளும் வலிகளும் ஒன்றாகவே இருக்கும். இங்கேயும் கூட்டுக்குடும்பம், தனிக்குடித்தனம் என்ற இரு தரப்பினர் இருப்பார்கள். சிலருக்கு கூட்டுக்குடும்பமாக இருப்பதில் பிரச்சினை சிலருக்கு தனிக்குடித்தனமாக இருப்பதில் பிரச்சினை. ஆக மொத்தத்தில் எப்படியாவது, ஏதாவது ஒரு வழியாக பிரச்சினைகள் மட்டும் இருக்கவே செய்கின்றது. இங்கே இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், வேலையோடே பொதுவாக நேரம் களிந்துவிடும் சிலருக்கு அதுவும் பிரச்சினையாக மாறிவிடும். எந்த நேரமும் வேலை மட்டும் தான் என! கணவன் வேலைக்கும், மனைவி இல்லத்தரசியாகவும் அமைந்துவிட்டால், அதனிலும் கொடுமை.... என்னவென்றால், நீ மட்டும் வெளியில் சென்று வருகின்றாய் நான் இந்த வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றேனென மனைவியும், உனக்கென்ன நிம்மதியாக வீட்டில் இருக்கின்றாய் நான் தான் ஓய்வே இல்லாமல் உழைக்கின்றேன் என கணவனும் ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிடும் உறவு. ஆக எப்படியாவது பிரச்சினை தலை தூக்கிவிடுகின்றது.  இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, நான் தான் அதை செய்கின்றேன், நீ இதை செய்ய மாட்டாய் என குற்றச்சாட்டுக்களாலேயே குலைந்துவிடுகின்றது குடும்பம். வெளியில் சென்றுவரும் கணவனின் தேவைகள், மனநிலை உணர்ந்து மனைவியும், தனிமையில் தனக்காகவே காத்திருக்கும் மனைவியின் ஏக்கங்க்கள் புரிந்து கணவனும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உறவு பேணப்படும்.  வேலைக்கு செல்பவர்களல்லாது ஒருவர் இன்னொருவரை சார்ந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் நியாயமான ஆசைகளை, தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய மற்றவர் முன்வர வேண்டும். வீட்டில் இருப்பவருக்கு வருமானம் வருவதில்லை அவருக்குள்ளும் சக மனிதருக்குள்ள விருப்பு வெறுப்புக்கள் இருக்கவே செய்யும், ஒவ்வொரு தேவைக்கும் உங்களையே நாடி வரும் நிலைமை அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

கணவன் மனைவிக்கிடையில் ஒழிவு மறைவுகள் இருக்கவே கூடாது. அப்படி ஏதாவதொன்றை இருவரில் யாராவது ஒருவர் மறைக்கின்றாரேயாயின் அந்த உறவுக்குள் உண்மை இல்லை என்றே அர்த்தம். உங்கள் உறவுகளுடன் வெளிப்படையாக இருங்கள். இப்படியாக ஒவ்வொரு உறவும் புரிந்துணர்வோடும் உண்மையோடும் இருந்தால் உறவுகள் மேம்படும் வாழ்வு வலம்பெறும்.

தகாத உறவு! இதை உறவு என சொல்லலாமா? இங்கே உறவுகளுக்குள் இருக்கவேண்டியதாக சொல்லப்படும் எதுவும் இருப்பதில்லை காமத்தை தவிர! எதனால் இப்படியான ஒரு தேடல் நடைபெறுகின்றது? பொதுவாக இங்கே குற்றச்சாட்டு "தவறு செய்பவரால் மற்றவர் மீதே சுமத்தப்படுகின்றது" எப்படி என்றால் அவர் என்னோடு எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றார், என் தேவைகளை புரிந்து கொள்வதில்லை, என்னை கஸ்டப்படுத்துகின்றார், எனக்கு நிம்மதி இல்லை என பலவாராக அமையும் ஆனால் அதற்காக வேற்று நபர்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வீர்களா? தகாத உறவு என்றால் கணவன் மனைவியிடமல்லாது, மனைவி கணவனுடனில்லாமல் வேற்று மனிதர்களுடன் உடலளவில் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு மட்டும் தானா? 

அன்மையில் என் நண்பரொருவரின் (இப்போது நண்பனென கூற முடியவில்லை) கைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்த என் மகள் தவறுதலாக messenger க்குள் சென்றதோடல்லாமல் (அவள் Net connect செய்து youtube ல் தனக்கு தேவையான பாடல் வரை தேர்ந்து கொள்வாள் என்பது வேறு) அம்மா இங்கே பாருங்கள் நம்ம Aunty என காட்ட அதுவும் எனக்கு தெரிந்த பெண் ஒரு ஆண் குழந்தையின் தாய் (அடுத்தவர் அந்தரங்கங்களை பகிர்தல் தவறு தான் பெயரும் நபர் யாரென்றும் குறிப்பிடவில்லை. பெரிதாக ஒன்றும் வாசிக்கவுமில்லை) தவறான படங்கள் இரண்டு இணைக்கப்பட்டிருந்தது. இது வரை என் கணவர் என்னிடம் கூட பகிர்ந்து கொள்ளாத வகையில் இருந்தது அந்த படங்கள். கீழே Itz me என தொடங்கி கொஞ்சம் வாசித்தும் விட்டேன் தவறு தான். பின் இதைப்பற்றி அந்த நண்பனிடம் கேட்டேன். நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தானே பின் எப்படி உங்களால் இப்படியெல்லாம் முடிகிறதென்று அதற்கு அவர் கூறிய பதில் அவள் தான் அது போன்ற படங்களை தனக்கு அனுப்புவதாகவும் அப்படி இனி செய்ய வேண்டாமென கூறுவதற்காகத்தான் அந்த படங்களை இணைத்தேன் என்றும் கூறினார் இங்கே ஏதாவது நம்புவதைப்போல இருக்கின்றதா? தவறான விடயத்தை சுட்டிக்காட்ட அதே தவறை செய்து காட்ட வேண்டுமென்ற அவசியமென்ன? அதுவும் அவ்வாறு இனிமேல் அனுப்பவேண்டாம் என கூறியதாக எதுவும் இருக்கவில்லை. அந்த பெண் மட்டும் தவறானவளென்றால் நட்பை துண்டித்திருக்கலாமே :( அத்தோடு நமக்கென்ன வந்தது என விட்டுவிட்டேன் விலக்கிவிட்டேன். இங்கும் தவறுகள் ஒருவர் மீது மட்டுமே சுட்டிவிடப்படுகின்றது. தனக்கு இதில் விருப்பமில்லையென்றும், தான் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் தன் மனைவி குழந்தை குடும்பமே முக்கியம் என்றும், தனக்கும் அவளுக்கும் நீ நினைக்கும் வகையில் எந்த ஒரு தவறான உறவும் இல்லை என்றும் ஏதேதோ சொன்னார். என் மனதில் அருவருப்பு எண்ணம் மட்டுமே அப்போது இருந்தது இப்போதும் இருக்கின்றது! இங்கே அவனில் நம்பிக்கை வைத்த அந்த மனைவியினதும், அவளில் நம்பிக்கை வைத்த அந்த கணவனதும் நிலை? பரிதாபமா?

ஈற்றில் ஒருவரின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து உறவாக அமைத்துக் கொள்வது தவறு என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

Sunday, February 9, 2014

எதை கொ(ன்)ண்(று)டு எதை வெல்வாய்சாவி தொலைந்த பூட்டைப்போல 
திறவாமல் மூடியே இருக்கிறது
விடியல்!

எப்படியாவது திறந்து விடுவாய்
என தட்டிக்கொடுக்கிறது
நம்பிக்கை!

முன்னேறும் முன்னே....

உன்னால் அசைக்க முடியாது 
என பேதியை கிளப்புகிறது
பயம்.

உச்சி முதல் பாதம் வரை
ஆழமாய் பதிந்து கிடக்கிறது
விரக்தி.

முடியாததை முயலாதே
என கட்டிப் பிடிக்கிறது
தயக்கம்.

அனுபவம் போதாது
என ஆட்டி வைக்கிறது
அறியாமை.

என்ன தான் நடக்குமோ
என ஆட்சி செய்கிறது
கவலை.

ஆபத்தாக அமையலாம்
என அறிவிப்பு செய்கிறது
சிந்தனை.

இப்படியாக 
குழப்பங்கள் சூழ்ந்து கொ(ள்)ல்(ள)ல...

நம்பிக்கை மட்டும்
எப்படியாவது திறந்து விடுவாய்
என தட்டிக்கொடுக்கிறது
அழுத்தமாய்!

கண்களை இருக்கி மூடி
தனிமையில் 
தனிமையாகிறேன்

தயக்கங்கள் தள்ளிச்சென்று
எனை தாக்கும்
ஏக்கங்களாக ஏற்றம் கொள்கிறது.

ஏக்கத்தின் தாகங்கள்
அவ்வப்போது 
தீர்க்கப்பட வேண்டியவை.

ஏன் முடியாது...?
முயலாமல் 
முடிவேது

காதுகளில் கனீர் ஒலிகளாக
நம்பிக்கை மட்டும்
உரக்க குரல் எழுப்புகிறது.

தோழா! உன்னைச் சுற்றி
இட்ப்பட்ட வட்டத்தை 
நீயே தாண்டு.

உன் கண்களை மறைக்கும்
மாயையை எட்டிப்பிடித்து
தூரமாய் எறி.

உன் கைகளை கட்டும்
முடிச்சுகளை 
அவிழ்த்து எறி.

உன் இதயத்தை 
சுற்றும் நடுக்கத்தை 
கால்களால் உதை.

நம்பிக்கை தோழனானால்
தோல்விகள் தூரமாவது
நிஜம்.

முடங்கி கிடப்பதிலும்
முயன்று தோற்பது
வீரமே!

நீ எதை கொண்டு
எதை வெல்ல
போகிறாய்???

Saturday, January 25, 2014

கனவு உலகில் லயித்தவரா நீங்கள்...?

"சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கிறான்" என்று ஆய்வுகள் கூறுகின்றன என்றாலும் அன்றாடம் எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படுவது தான் இது சார்ந்த தகவல்கள் என்றாலும் கனவு என்பது உண்மையா? என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்று வரை காணப்படவே செய்கின்றது. அதனிலும் கனவு கலர் கலராக வருகின்றனவா...? அல்லது பிளாக்வைட்டாக வருகின்றனவா..? என்றெல்லாம் பலவாறான சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது. மேலும் கனவு ஏன், எதனால், எப்போது ஏற்படுகின்றது? கனவு காண்பதென்பது ஒரு குறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன.

இது சார்ந்த சில தகவல்களை ஆராய்வோம். கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண அறிவியல் புரிதலை இன்று வரை அடைந்தபாடில்லை.

ஒரு நபர் சிறிது நேரம் ஏதாவது சிந்தனையில் இருப்பாராயின் அவரிடமும் கனவு காண்கின்றாயா என்ற கேள்வியை தொடுக்கின்றோம். மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பவர்கள் கனவு கண்டதாக ஏதாவது சந்தர்ப்பத்தை முன் வைப்பார்கள் இதில் எதை உண்மையில் கனவு என்கின்றோம் என்ற புதிய சந்தேகமும் மூளைக்குள் பிசைகின்றதா? ஆம் கனவை இரு வகைப்படுத்தலாம்.

முதலாம் வகை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கண்களுக்குள் ஏதோ ஒரு நிகழ்வு படமாக முன்னகர்தல் இரண்டாமது நம் எதிர்காலம் குறித்து நாம் இப்படித் தான் வாழ வேண்டும், இப்படியான செயல்களை செய்ய வேண்டும் என இலட்ச்சியங்களை வளர்த்துக் கொள்வதோடு அதனை அடையும் வழிமுறைகளை சிந்தித்து அதனை அடைய முயலலும் ஆகும்.

மேலும் சமய ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வெவ்வேறான பல கருத்துக்கள் கனவு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மூளைக்கு செல்லும் முக்கியமான உணர்வு நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படுவதன் மூலம் கனவுகள் வருவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறினாலும் கனவுகள் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன என ஒரு தரப்பினரும் சமய ரீதியாக எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவிக்கும் அபூர்வ சக்தி கனவு என்றும், அவற்றிற்கான சான்றுகள் உள்ளன என இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

சிலர் ஏதோ ஒன்றை கண்டதாக உணர்ந்து திடுக்கிட்டு அசைவர் ஆனாலும் என்ன என்பதை மறந்ததாக கூறுவர். மற்ற சிலர் ஏதோ படக்கதை போல சொல்லிக் கொண்டே போவார்கள். மற்றவர்கள் தான் முதல் நாள் கண்ட கனவு மறு நாளும் தொடர்வதாக கூறுவார்கள் இவ்வாறான தன்மையை கண்டினியூவல் ஆக்டிவேஷன் என்று அழைக்கின்றனர். இன்னும் சிலர் தனக்கு கனவே வருவதில்லையே என புலம்பிக் கொள்வார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர் அவர் மூளையின் அதிரடி செயற்பாடே என்கின்றது இன்னொரு ஆய்வு. ஆம் அரைவாசி உறக்கத்திலுள்ள மூளை தான் கனவுகளின் அடிப்படைக் காரணம் என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் காணும் கனவுகள் தான் நினைவில் இருக்கின்றன எனவும், மறந்து போய்விடும் கனவுகள் மூளை நல்ல உறக்கத்தில் இருக்கும் போது பிறப்பது எனவும் கூறுகின்றார்கள்.

கண்களின் அசைவை வைத்தே நாம் எந்த நேரத்தில் எவ்வகையான கனவை காண்கின்றோம் என அறியலாம் என்பதை முதன்முதலில் கண்டறிந்த அஸெரின்ஸ்கி 1953 ல் இவ்வாராய்ச்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும் பலர் இது தொடர்பான ஆய்வுகளை இன்று வரை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். என்றாலும் மனதின் பயமோ, மன அழுத்தமோ, ஆழ் மனதில் பதிந்து போன ஆசைகளும் எம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகின்ற போது தான் கனவாக வருகின்றது என்ற பொதுவான கருத்தும் காணப்படுகின்றது. அதாவது அதிகமாக நாம் எதைப்பற்றி சிந்திக்கின்றோமோ அதுவே கனவாக வருகின்றது. ஏதோ ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடே கனவாக அமைகின்றதாம். அதனிலும் ஆண்கள் காணும் கனவுக்கும் பெண்கள் காணும் கனவுக்கும் அனேக வித்தியாசங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கனவுகள் பல்வேறான கோணங்களில் வெவ்வேறான கருத்துக்களைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. நல்ல கனவுகளால் மன மகிழ்ச்சி கிடைத்தாலும் சில தீவிரமான கனவுகளால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததே ஏராளம். எனவே இந்த கனவு காணலை விளக்கி அன்றாட வாழ்வோடு ஒட்டி உறவாட உங்களுக்கான யோசனைகள் சில

மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளல்

தேவையற்ற விடயங்களைப் பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்தல்


தினமும் குறித்த நேரத்திலேயே ப்டுக்கைக்கு செல்ல பழகிக் கொள்ளல் அதே போல குறித்த நேரத்திலேயே விழித்தெழல்


மெல்லிய இசை கேட்டல்


ஆரோக்கியமான நல்ல புத்தகங்களை வாசித்தல்


உடலையும், மனதையும், தூங்கும் சூழலையும் தூய்மையாக வைத்துக் கொள்ளல்


படுக்கையை வசதியானதாக அமைத்துக் கொள்ளல் (தலையணை, விரிப்பு)


தூங்குவதற்கான சூழல் இருக்கின்றதா எனப்பார்த்துக் கொள்ளல் (அமைதியான இருளான அமைப்பு)

தூங்கச் செல்வதற்கு முன் சிறிது தூரம் நடை பயிற்சி செய்தல்


இரவு உணவை முடித்துக் கொண்டதுமே உறக்கத்தை தேடாமல் சிரிது நேரத்தின் பின் படுக்கைக்கு செல்லல்.

குடிப்பழக்கத்தை தவிர்த்தல்

இவ்வாறான சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டால் கனவு எனும் பயங்கரத்திலிருந்து தப்பித்து ஆழ்ந்த உறக்கத்தை நிம்மதியாக அடையலாம்.

சிந்து பைரவி


இன்று சினிமா படங்களுக்குள்ள ரசிகர்களைப் போலவே தொலைகாட்சிகளில் பகுதி பகுதியாக பிரித்து ஒலி ஒளி பரப்பும் "டிராமா" க்களுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. திரைப்பட ரசிகர்கள் குறிப்பிட்ட நடிகர், நடிகையின் படம் என்றதும் அடித்துப் பிடித்து கொண்டு அதனை பார்ப்பதும், அது குறித்த கருத்துக்களை வெளியிடுவதும் குறுகிய காலத்துக்குள் விலக்கி வைக்கப்படுகின்றது ஆனால் இந்த தொடர் நாடகங்கள் இன்று அனேகமான நபர்களை தொலைக்காட்சிக்கு முன்னால் கட்டிப்போட்டு வைக்கின்றது. ஏதோ தம் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாக அல்லது தம் வீட்டு உறுப்பினர்களைப்போலவே கருதி அவர்களுக்காக மகிழ்வதும், திட்டுவதும், கவலையடைவதும் பைத்தியக்காரத்தனமே என்றாலும் சில நேரங்களில் ரசிக்கவும் வைக்கின்றது.


எதுவாக இருந்தாலும் அதிலுள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு தீயவை தீயில் வைப்போம் அந்த வகையில் நான் இன்று உங்களுடன் பகிரப்போவது  ராஜ் டிவி வழங்கும் "சிந்து பைரவி" என்னும் தொடரின் ஆரம்பப்பாடலையே "டைட்டில் சோங்". சிந்து பைரவி தொடர் 800வது பகுதியையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது சிந்துவின் கதை இன்று மகள் சிந்துவின் கதையையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கின்றது


(அனேகர் பரம ரசிகர்கள் என்பது தெரிந்தே சிலரோடு என்னையும் குறிப்பிட்டுகின்றேன்), எனக்கும் உங்களில் சிலரைப்போலவே அந்த கதையோடு அத்தனை பிடிப்பில்லை என்ற போதும் எங்கிருந்தாலும் அந்த ஆரம்பப்பாடலை செவிமடுக்கும் போது ஏதோ ஒரு இனிமை என்னை மென்மையாக்குகின்றது மனதை இலகுவாக்குகின்றது இதோ அந்த பாடலின் அற்புத வரிகள் உங்கள் பார்வைக்காக:


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

"அன்பு கரங்களில் அடைக்கலமானது...
அழகிய பொம்மை;
ஆண்டவன் கருணையில் வாழ்ந்திடும் ஏழ்மை...
அதுவே உண்மை!


சிலரது புதியது பழதானால்...
அது சிலர் வாழ்வினில் புதிதாகும்;
சிலரது உடைமைகள் உருவிழந்தால்...
அது சிலர் உறவாய் உருமாறும்!


பூங்குயில் தினம் பாடும் இங்கே.                                                                       ஆசையின் பல்லவி......


Friday, January 24, 2014

எதில் உண்மையான இன்பம்?ஒன்று கிடைக்கும் வரை அதற்காக ஏங்குவதும் அதனை அடைந்துவிடுவதற்காக தன்னால் இயன்ற வரை போராடுவதும் மனிதனின் இயற்கையான குணம் ஈற்றில் குறித்த விடயம் சார்ந்த வெற்றியை தனதாக்கிக்கொண்டாலும் தன் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டது என நிம்மதியடைவதையும், கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியடைவதையும் அவனது மனம் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. தான் நினைத்த, எதிர்ப்பார்த்த ஒன்று நடந்துவிட்டால் தன்னை விட அதிஷ்டசாலி யாரும் இல்லை, தானே பாக்கியவான் என மகிழ்ச்சிகொண்டாலும் அடுத்த கணம் வேறொரு நிகழ்வு, விடயம், ஏன் நபர் குறித்ததான தேடலை குறுகிய இடைவேளையிலேயே மீண்டும் தொடர்கின்றான் இவ்வாறு ஒன்று, ஒன்றிலிருந்து இன்னொன்று என அடிக்கடி அவனது விருப்பங்களும், தேவைகளும் இடம்மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. இது சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடுகளின்றி உருபெறுகின்றது 

இவ்வாறான தேடல்கள் சில நன்மை பயத்தாலும் சில தீமைகளையும் சேர்ப்பிக்கவே செய்கின்றன எனவே புதியன தொடர்பான தேடல் தவறான விடயங்கள் சார்ந்ததாயிராமல் நல்ல முன்னேற்றம் தரக்கூடியதாக அமையுமாறு நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் ஏதாவது புதிய விடயங்கள் பற்றி அறியும் போது, பார்க்கும் போது நாட்டம் ஏற்படுவது இயற்கை ஆனால் அது எவ்வாறான விடயம் அதனை தொடர்வதனால் பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பன தொடர்பான ஆராய்தலையும் நமக்குள் நாமே பலமுறை மேற்கொள்ள வேண்டும் நாம் எடுக்கும் முடிவு நல்லதாக அமையும் போது யாரும் பெரிதாக கண்டு கொள்ள போவதில்லை என்றாலும் தூற்றுவதற்கு இந்த சமூகம் எப்போ என காத்துக்கொண்டிருக்கின்றது என்பதை மனதில் கொள்ள வேண்டும் நாம் செய்யும் தவறான ஒரு செயல் மற்றவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதனிலும் நம்மையே அதிகம் தாக்கும் என்பது தான் உண்மை ஆகவே எதுவாயிருப்பினும் சிந்தித்து செயல்படுவது தான் எதிர்காலத்தை நிலைப்பில் வைக்கும். 

இவ்வாறாக தேடல்கள் ஒவ்வொன்றாக மாற்றம் பெறுவதற்கான முக்கிய காரணம் எதனையும் தீர ஆராயாமல் மேலோட்டமான நோக்குதலூடாக ஒன்றிப்போதலே ஆகும். அதன் உண்மையான தன்மையை, அர்த்தத்தை தெளிவாக புரிந்துகொள்வோமானால் இவ்வாறான தவறுகளை முற்றிலும் என சொல்ல முடியாவிட்டாலும் பொதுவாக தவிர்க்கலாம். சில தருணங்களில் அது தவறே என தெரிந்தும் உங்களை மகிழ்வில் திளைக்க வைப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் அப்படியாக கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு மாயையே! குறிப்பிட்ட நேரத்துக்கே அது நீடிக்கும் சில நேரங்களில் அவ்வாறான மகிழ்ச்சி உங்களை வலிகள், கவலைகள், பிரச்சினைகள் அனைத்தையும் மறக்கடிக்கும் மருந்தாக கூட உங்களுக்கு தோன்றலாம் போகப்போக அது குறித்த வலியும் இன்னும் சேர்ந்தே தாக்கும். எந்த தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறு தாக்கம் உண்டு எனவே தவறான வழிகளில் இன்பம் கொள்ளும் நீங்கள் பின் விளைவுகளையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.

அப்படி என்றால் உண்மையான ஆனந்தம் எதில் உள்ளது? ஆராயத்தான் வேண்டும்... எப்படியாவது வேலை நடந்தால் சரி என்பதை விட எந்த வழியில் நடந்தால் நான் என்ற தனி மனிதனுக்கும் நாம் என்ற சுற்றத்துக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என பார்க்க வேண்டும் அவ்வாறாக நம் செயல்கள் அமைந்துவிட்டால் அந்த ஆனந்தம் தான் நிலைக்கும் நம்மை தொடரவும் செய்யும். எத்தனையோ பிறவிகள் எடுப்போம் என கூறிக்கொள்வதனிலும் இருக்கும் வாழ்க்கையை எவ்வாறு அமைத்து கொண்டிருக்கின்றோம் என்பதில் முதலில் தெளிவடைவோம். நான் எப்படி இருந்தால் மற்றவருக்கென்ன என்ற போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியான தேசத்தில் வாழவில்லை எல்லோரும் ஒன்றாகவே இருக்கின்றோம் சமூகத்தோடு கைக்கோர்த்துக்கொண்டு தான் எதிர்காலத்தில் கால் பதிக்க வேண்டியிருக்கும். எனவே ஒருமைப்பாட்டை வளப்படுத்திக்கொள்ளுங்கள்

உங்களுக்குள்ளேயே இந்த வினாவை ஒவ்வொருவரும் கேட்டுப்பாருங்கள் "நான் முழுமையடைந்து விட்டேனா?" இந்த கேள்வியை கேட்கும் போதே ஆயிரம் கிளை வினாக்கள் உம்மை புதிதாக தொடரும் இது குறித்ததான தன்னிச்சையான தேடல் ஒவ்வொருவருக்குள்ளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்பது உண்மை மேலும் கிடைத்ததில் மட்டும் திருப்தியடையாமல், அடுத்த கட்டத்தை தாண்ட முனைவதில் தவறில்லை ஆனால் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதையை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அந்த பாதை உங்களுக்காகவே முற்களால் கூட நிரப்பப்பட்டுவிடக்கூடும். அந்த ஏமாற்றம் உங்களை எழுந்திரமுடியா படுகுழியில் தள்ளி வலிகளை தரலாம்.

மனிதன் தன் வாழ்க்கையின் அடிப்படை என்ன என்பதை அறியாமல் தனக்குத்தானே முகமூடிககளை அணிவித்து அழகு பார்க்கின்றான் அதில் பெருமையும் கொள்கின்றான். தன் சுற்றத்தை சூழலை ஆராயும் முன் தன்னை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் அதற்காக நேரத்தை செலவிடவும் வேண்டும் ஆனால் இங்கே நான் என்ற தன்னை தவிர எந்த நபரையும் தன்னோடு ஒப்பிட்டுப்பாராமல் தொடர்புபடுத்தாமல் தேடலை தொடருங்கள் வலிகள் தாக்கலாம் என்றாலும் உங்களின் நிலை, எதிர்கால தன்மை, இலக்கு, குறிக்கோள் பற்றிய தீர்க்கமான முடிவு கிடைக்கும் இதனால் இன்பமயமான வெற்றியை அடைந்து உங்களையும் சமுதாயத்தையும் இந்த தேசத்தையும் புனிதப்படுத்துவீர்கள்