உறவுகள்!

சில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது. 

என்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெருக்கமான உறவே தான்! ஒரு நல்ல உறவு என்பது நாம் செய்வதையெல்லாம் சரியென கொள்வதாக கண்டிப்பாக அமையாது நம் நன்மைகளில் கூட இருப்பதைப்போன்றே தீமைகளிலும் உரிமையோடு சம பங்குகொள்ளும். அதோடு நம் நல்ல விடயங்களைப் பாராட்டுவதைப்போன்றே தவறுகளையும் சுட்டிக்காட்டி முடிந்தவரை நம்மால் தவறுகள் ஏற்படுவதை தவிர்த்துவரும்.

இரு நபர்களுக்கிடையிலான உறவு மிக அழகானது அதைப்பேணுவது நம் கைகளிலேயே உள்ளது. பொதுவாக பெற்றோரிடம், சகோதரர்களிடம் உள்ள உறவு இரத்தபந்தமாக அமைந்தாலும் ஒரு எல்லையை தாண்டி அவர்களிடம் உறவாட மறுத்துவிடுகின்றோம் இது அவர்களை தூரமாகப் பார்ப்பதனாலல்ல அதிக நெருக்கமாக உணர்வதால் ஒரு மரியாதை கலந்த அன்பு அது. நட்பு அந்த எல்லைகளை எல்லாம் கடந்து எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் இந்த நெருக்கம் மனதளவில் இருக்கும். ஒரு மனிதனின் சுயத்தை அவன் நட்பை வைத்தே அடையாளம் காணலாம் என மூத்தோர்கள் கூறுவதை நானும் நம்புகின்றேன். நண்பர்களை அத்தனை சீக்கிரத்தில் நாம் தேர்ந்துவிடுவதில்லை. சில சமயங்களில் நம் தேர்வுகள் தவறானதாகக் கூட அமைவதுண்டு ஆராய்ந்து திருத்திக்கொள்வதும், விலக்கிவிடுவதும் ஆறறிவு படைத்த நமது பொறுப்பே! இங்கு இத்தனைப்பேர் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எல்லை கிடையாது. யார், யாருடன் வேண்டுமானாலும் ஆண், பெண் பேதமின்றி நட்பு கொள்ளலாம். தவறே இல்லை. ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கையும் வேண்டாம், அதிகப்படியான சந்தேகமும் வேண்டாம் நல்ல நட்பைப்போற்றுவோம்.

காதல், திருமணம் யாரென்றே அறியாத ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பந்தங்கள். காதல்! எல்லா காதலும் பொதுவாக திருமணத்தில் முடிவதில்லை என்றாலும் இது ஒரு அழகான உணர்வு. நம்மை நாமே அழகாக உணரும் தருணம். கற்பனை கிரகத்தில் புதிதாக சிறகு முளைத்துப்பறக்கும் பட்டாம்பூச்சிகள். இது யாரையும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. நேரம், காலம், ஜாதி, மதம், மொழி எதனையும் பார்ப்பதும் இல்லை. இப்படியானக்காதல்கள் காதலாகவே வாழும். காதல் அழகை மட்டும் பார்த்து வருவதில்லை அன்பு, நடவடிக்கை, அக்கறை என எதைப்பார்த்து வேண்டுமானாலும் ஏற்படும் உணர்வு எப்போது, யார் மீது ஏற்படும் என்பது சொல்லமுடியாத இது ஒரு பால் ஈர்ப்பு. தன்னை மட்டுமே பார்க்க வேண்டும், தன்னோடு மட்டுமே பேச வேண்டும் என சுயநலம் நிறைந்தது காதல். காதலித்தே பார்க்க வேண்டும் காதலை உணர! காதல் செய்யுங்கள் :) உண்மையாக உள்ளத்தால் காதல் செய்யுங்கள். இங்கும் காதல் என்னும் பெயரில் பொய்யாக நடிப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். தவறுதலாக பயன்படுத்த நினைப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். சரியான நபரை தேர்ந்து காதல் செய்யுங்கள்.

திருமணம்! மனதாலும் உடலாலும் உறவாக ஒன்ரற கலந்து தன் துணையை மறுபாதியாக ஏற்கும் பிணைப்பு. சிலரது பெற்றோரின் சம்மதத்துடன் பேச்சுத்திருமணமாகவும், சிலரது தன் துணையை தானே தேர்ந்ததன் பலனாக தனியாக காதல் திருமணமாகவும் அமைந்துவிடுகின்றது. எது எப்படியோ இது ஒரு புது உலகம். இதுவரை இருந்ததைப்போன்றல்லாது எல்லாமே புதிதாக இருக்கும். பெண்களுக்கோ இருக்கும் சூழலும் புதிதானதாகவே இருக்கும்! இங்கே தான் எந்தத் தடையும் இல்லாமல் ஒரு சக ஆணுடன் ஒரு பெண் தனியாக இருப்பதற்கு எல்லோராலும் அனுமதிக்கப்படுகின்றாள். காதலோடு காமமும் சேர்ந்தே இருக்கும் இந்த உறவில்! கணவன் மனைவி இருவருக்கிடையில் எதுவும், எவரும் இடையூராக இருப்பதில்லை. இங்கே காதலில் போல அதை செய்யாதீர், இதை செய்யாதீர், அப்படி இருக்காதீர், இப்படி இருக்காதீர், நேரம், காலம் என்ற எந்த பிரச்சினையும் இல்லை. தம்பதியருக்கிடையிலான புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒருவருக்கொருவர் எத்தனை உதவியாக இருக்கின்றார்கள் என்பதனடிப்படையில் நெருக்கம் அமைந்துவிடுவதோடு உறவு சிறப்பாக அமைந்துவிடுகின்றது. இங்கே விளையாட்டுத்தனங்கள் மூட்டைக்கட்டப்பட்டு நமக்கென பொறுப்புக்கள் தலை தூக்கும். ஒரு தாயின் பொறுப்புக்களை மனைவியும், தந்தையின் பொறுப்புக்களை கணவனும் ஏற்றே ஆகவேண்டிவரும். இங்கே வேலைப்பழு, ஓய்வின்மை போன்ற சிக்கல்களும் ஏற்படும்.  எல்லா திருமண பந்தங்களும் ஆரம்பத்தில் இருப்பதைப்போலே இறுதிவரை இருந்துவிடுவதில்லை. சில சில பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கவே செய்யும். இதன் "மூல" காரணம் ஆரம்பத்தில் இருப்பதைப்போல (உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி நலம் விசாரிப்பது, தொலைபேசியில் அவ்வப்போது பேசுதல்) போன்ற விடயங்களுக்கு போகப்போக முக்கியத்துவமளிக்காமையே! இதிலும் இரண்டு வகையுண்டு ஒன்று நம்மவர் தானே என்ற எண்ணம், மற்றது வேண்டுமென்றே புறக்கணிப்பது. எது எப்படியானாலும் அதனால் ஏற்படும் விலகளும் வலிகளும் ஒன்றாகவே இருக்கும். இங்கேயும் கூட்டுக்குடும்பம், தனிக்குடித்தனம் என்ற இரு தரப்பினர் இருப்பார்கள். சிலருக்கு கூட்டுக்குடும்பமாக இருப்பதில் பிரச்சினை சிலருக்கு தனிக்குடித்தனமாக இருப்பதில் பிரச்சினை. ஆக மொத்தத்தில் எப்படியாவது, ஏதாவது ஒரு வழியாக பிரச்சினைகள் மட்டும் இருக்கவே செய்கின்றது. இங்கே இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், வேலையோடே பொதுவாக நேரம் களிந்துவிடும் சிலருக்கு அதுவும் பிரச்சினையாக மாறிவிடும். எந்த நேரமும் வேலை மட்டும் தான் என! கணவன் வேலைக்கும், மனைவி இல்லத்தரசியாகவும் அமைந்துவிட்டால், அதனிலும் கொடுமை.... என்னவென்றால், நீ மட்டும் வெளியில் சென்று வருகின்றாய் நான் இந்த வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றேனென மனைவியும், உனக்கென்ன நிம்மதியாக வீட்டில் இருக்கின்றாய் நான் தான் ஓய்வே இல்லாமல் உழைக்கின்றேன் என கணவனும் ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிடும் உறவு. ஆக எப்படியாவது பிரச்சினை தலை தூக்கிவிடுகின்றது.  இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, நான் தான் அதை செய்கின்றேன், நீ இதை செய்ய மாட்டாய் என குற்றச்சாட்டுக்களாலேயே குலைந்துவிடுகின்றது குடும்பம். வெளியில் சென்றுவரும் கணவனின் தேவைகள், மனநிலை உணர்ந்து மனைவியும், தனிமையில் தனக்காகவே காத்திருக்கும் மனைவியின் ஏக்கங்க்கள் புரிந்து கணவனும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உறவு பேணப்படும்.  வேலைக்கு செல்பவர்களல்லாது ஒருவர் இன்னொருவரை சார்ந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் நியாயமான ஆசைகளை, தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய மற்றவர் முன்வர வேண்டும். வீட்டில் இருப்பவருக்கு வருமானம் வருவதில்லை அவருக்குள்ளும் சக மனிதருக்குள்ள விருப்பு வெறுப்புக்கள் இருக்கவே செய்யும், ஒவ்வொரு தேவைக்கும் உங்களையே நாடி வரும் நிலைமை அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

கணவன் மனைவிக்கிடையில் ஒழிவு மறைவுகள் இருக்கவே கூடாது. அப்படி ஏதாவதொன்றை இருவரில் யாராவது ஒருவர் மறைக்கின்றாரேயாயின் அந்த உறவுக்குள் உண்மை இல்லை என்றே அர்த்தம். உங்கள் உறவுகளுடன் வெளிப்படையாக இருங்கள். இப்படியாக ஒவ்வொரு உறவும் புரிந்துணர்வோடும் உண்மையோடும் இருந்தால் உறவுகள் மேம்படும் வாழ்வு வலம்பெறும்.

தகாத உறவு! இதை உறவு என சொல்லலாமா? இங்கே உறவுகளுக்குள் இருக்கவேண்டியதாக சொல்லப்படும் எதுவும் இருப்பதில்லை காமத்தை தவிர! எதனால் இப்படியான ஒரு தேடல் நடைபெறுகின்றது? பொதுவாக இங்கே குற்றச்சாட்டு "தவறு செய்பவரால் மற்றவர் மீதே சுமத்தப்படுகின்றது" எப்படி என்றால் அவர் என்னோடு எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றார், என் தேவைகளை புரிந்து கொள்வதில்லை, என்னை கஸ்டப்படுத்துகின்றார், எனக்கு நிம்மதி இல்லை என பலவாராக அமையும் ஆனால் அதற்காக வேற்று நபர்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வீர்களா? தகாத உறவு என்றால் கணவன் மனைவியிடமல்லாது, மனைவி கணவனுடனில்லாமல் வேற்று மனிதர்களுடன் உடலளவில் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு மட்டும் தானா? 

அன்மையில் என் நண்பரொருவரின் (இப்போது நண்பனென கூற முடியவில்லை) கைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்த என் மகள் தவறுதலாக messenger க்குள் சென்றதோடல்லாமல் (அவள் Net connect செய்து youtube ல் தனக்கு தேவையான பாடல் வரை தேர்ந்து கொள்வாள் என்பது வேறு) அம்மா இங்கே பாருங்கள் நம்ம Aunty என காட்ட அதுவும் எனக்கு தெரிந்த பெண் ஒரு ஆண் குழந்தையின் தாய் (அடுத்தவர் அந்தரங்கங்களை பகிர்தல் தவறு தான் பெயரும் நபர் யாரென்றும் குறிப்பிடவில்லை. பெரிதாக ஒன்றும் வாசிக்கவுமில்லை) தவறான படங்கள் இரண்டு இணைக்கப்பட்டிருந்தது. இது வரை என் கணவர் என்னிடம் கூட பகிர்ந்து கொள்ளாத வகையில் இருந்தது அந்த படங்கள். கீழே Itz me என தொடங்கி கொஞ்சம் வாசித்தும் விட்டேன் தவறு தான். பின் இதைப்பற்றி அந்த நண்பனிடம் கேட்டேன். நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தானே பின் எப்படி உங்களால் இப்படியெல்லாம் முடிகிறதென்று அதற்கு அவர் கூறிய பதில் அவள் தான் அது போன்ற படங்களை தனக்கு அனுப்புவதாகவும் அப்படி இனி செய்ய வேண்டாமென கூறுவதற்காகத்தான் அந்த படங்களை இணைத்தேன் என்றும் கூறினார் இங்கே ஏதாவது நம்புவதைப்போல இருக்கின்றதா? தவறான விடயத்தை சுட்டிக்காட்ட அதே தவறை செய்து காட்ட வேண்டுமென்ற அவசியமென்ன? அதுவும் அவ்வாறு இனிமேல் அனுப்பவேண்டாம் என கூறியதாக எதுவும் இருக்கவில்லை. அந்த பெண் மட்டும் தவறானவளென்றால் நட்பை துண்டித்திருக்கலாமே :( அத்தோடு நமக்கென்ன வந்தது என விட்டுவிட்டேன் விலக்கிவிட்டேன். இங்கும் தவறுகள் ஒருவர் மீது மட்டுமே சுட்டிவிடப்படுகின்றது. தனக்கு இதில் விருப்பமில்லையென்றும், தான் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் தன் மனைவி குழந்தை குடும்பமே முக்கியம் என்றும், தனக்கும் அவளுக்கும் நீ நினைக்கும் வகையில் எந்த ஒரு தவறான உறவும் இல்லை என்றும் ஏதேதோ சொன்னார். என் மனதில் அருவருப்பு எண்ணம் மட்டுமே அப்போது இருந்தது இப்போதும் இருக்கின்றது! இங்கே அவனில் நம்பிக்கை வைத்த அந்த மனைவியினதும், அவளில் நம்பிக்கை வைத்த அந்த கணவனதும் நிலை? பரிதாபமா?

ஈற்றில் ஒருவரின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து உறவாக அமைத்துக் கொள்வது தவறு என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு