இறுதிச்சடங்கு















இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட 
பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் 
இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத 
உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்

வாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை 
முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் 
முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி 
நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்

என்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை 
இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை 
நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும் 
“இறந்த”காலமாக மாறிப்போகும் உங்களுக்கு

கண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை 
தொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட 
என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக 
இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது

பொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை 
பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை 
என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும் 
மனமில்லாமல் பிணமாகிப்போனேன் 

ஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் 
மூன்றாம் நாள் நாற்றமெடுக்கும் என மூளை சலவை செய்து 
இறுதிச்சடங்குகளை முடித்து புதைகுழிக்குள் பாசத்தோடு மூடிடுவீர் - 
பின் வீட்டை சுத்தம் செய்வதோடு தலைக்கும் முழுகிக்கொள்வீர்

பூச்சுப்புழுக்கள் எறும்புகள் என்னை இரையாக்கி மகிழும் - பின்போ 
அதன் எச்சமாய் மிச்சமாய் என் யாக்கை கரையும் 
மண்ணோடு மண்ணாகி நான் மாறிப்போவேன் - உங்கள் 
மனங்களிலும் என் நினைவு மெதுவாக அகழும்!!!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு