என்னால் இன்னும் முடியும்

குத்திக் கிழித்தும்
கிழித்ததை ஒட்டியும்
ஆறுதல் சேர்க்கிறாய்

நீ கிழித்த தழும்புகள்
தடயமாக என்னில்!

மடி மீது சுமந்த ஒன்று
மார்த் தேடி தவித்தல் கண்டும்
மாரோடு பால் கன்றிய
கொடிய வலி உள்ளுக்குள்
பிசைகிறது

மரணத்தில் உயிர்க்கும்
மறு ஜென்ம தாயாய் நான்!

அர்த்தமே இல்லாமல்
அர்த்தப்படுத்துவதும் - கேள்விக்
கணைகளால் அடிக்கடி துளைத்தெடுப்பதும்
வழக்கமாகிப் போனது

அசையும் மரத்தில் தொங்கும்
காய்ந்த சருகாய் மனசு!

தெரிந்தே விழுந்து எழுந்ததில்
விடியா விடியலை வெம்பும் மனதின்
வடியும் கண்ணீர் வற்றியபாடின்றி
மீண்டும் மீண்டும் சுரக்கிறது

நாளை நீ தரும் வலிகளை நான்
தாங்கிக்கொள்ளும் வலிமைப் பெறவே!

Comments