கனவு உலகில் லயித்தவரா நீங்கள்...?

"சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கிறான்" என்று ஆய்வுகள் கூறுகின்றன என்றாலும் அன்றாடம் எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படுவது தான் இது சார்ந்த தகவல்கள் என்றாலும் கனவு என்பது உண்மையா? என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்று வரை காணப்படவே செய்கின்றது. அதனிலும் கனவு கலர் கலராக வருகின்றனவா...? அல்லது பிளாக்வைட்டாக வருகின்றனவா..? என்றெல்லாம் பலவாறான சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது. மேலும் கனவு ஏன், எதனால், எப்போது ஏற்படுகின்றது? கனவு காண்பதென்பது ஒரு குறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன.

இது சார்ந்த சில தகவல்களை ஆராய்வோம். கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண அறிவியல் புரிதலை இன்று வரை அடைந்தபாடில்லை.

ஒரு நபர் சிறிது நேரம் ஏதாவது சிந்தனையில் இருப்பாராயின் அவரிடமும் கனவு காண்கின்றாயா என்ற கேள்வியை தொடுக்கின்றோம். மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பவர்கள் கனவு கண்டதாக ஏதாவது சந்தர்ப்பத்தை முன் வைப்பார்கள் இதில் எதை உண்மையில் கனவு என்கின்றோம் என்ற புதிய சந்தேகமும் மூளைக்குள் பிசைகின்றதா? ஆம் கனவை இரு வகைப்படுத்தலாம்.

முதலாம் வகை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கண்களுக்குள் ஏதோ ஒரு நிகழ்வு படமாக முன்னகர்தல் இரண்டாமது நம் எதிர்காலம் குறித்து நாம் இப்படித் தான் வாழ வேண்டும், இப்படியான செயல்களை செய்ய வேண்டும் என இலட்ச்சியங்களை வளர்த்துக் கொள்வதோடு அதனை அடையும் வழிமுறைகளை சிந்தித்து அதனை அடைய முயலலும் ஆகும்.

மேலும் சமய ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வெவ்வேறான பல கருத்துக்கள் கனவு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மூளைக்கு செல்லும் முக்கியமான உணர்வு நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படுவதன் மூலம் கனவுகள் வருவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறினாலும் கனவுகள் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன என ஒரு தரப்பினரும் சமய ரீதியாக எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவிக்கும் அபூர்வ சக்தி கனவு என்றும், அவற்றிற்கான சான்றுகள் உள்ளன என இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

சிலர் ஏதோ ஒன்றை கண்டதாக உணர்ந்து திடுக்கிட்டு அசைவர் ஆனாலும் என்ன என்பதை மறந்ததாக கூறுவர். மற்ற சிலர் ஏதோ படக்கதை போல சொல்லிக் கொண்டே போவார்கள். மற்றவர்கள் தான் முதல் நாள் கண்ட கனவு மறு நாளும் தொடர்வதாக கூறுவார்கள் இவ்வாறான தன்மையை கண்டினியூவல் ஆக்டிவேஷன் என்று அழைக்கின்றனர். இன்னும் சிலர் தனக்கு கனவே வருவதில்லையே என புலம்பிக் கொள்வார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர் அவர் மூளையின் அதிரடி செயற்பாடே என்கின்றது இன்னொரு ஆய்வு. ஆம் அரைவாசி உறக்கத்திலுள்ள மூளை தான் கனவுகளின் அடிப்படைக் காரணம் என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் காணும் கனவுகள் தான் நினைவில் இருக்கின்றன எனவும், மறந்து போய்விடும் கனவுகள் மூளை நல்ல உறக்கத்தில் இருக்கும் போது பிறப்பது எனவும் கூறுகின்றார்கள்.

கண்களின் அசைவை வைத்தே நாம் எந்த நேரத்தில் எவ்வகையான கனவை காண்கின்றோம் என அறியலாம் என்பதை முதன்முதலில் கண்டறிந்த அஸெரின்ஸ்கி 1953 ல் இவ்வாராய்ச்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும் பலர் இது தொடர்பான ஆய்வுகளை இன்று வரை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். என்றாலும் மனதின் பயமோ, மன அழுத்தமோ, ஆழ் மனதில் பதிந்து போன ஆசைகளும் எம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகின்ற போது தான் கனவாக வருகின்றது என்ற பொதுவான கருத்தும் காணப்படுகின்றது. அதாவது அதிகமாக நாம் எதைப்பற்றி சிந்திக்கின்றோமோ அதுவே கனவாக வருகின்றது. ஏதோ ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடே கனவாக அமைகின்றதாம். அதனிலும் ஆண்கள் காணும் கனவுக்கும் பெண்கள் காணும் கனவுக்கும் அனேக வித்தியாசங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கனவுகள் பல்வேறான கோணங்களில் வெவ்வேறான கருத்துக்களைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. நல்ல கனவுகளால் மன மகிழ்ச்சி கிடைத்தாலும் சில தீவிரமான கனவுகளால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததே ஏராளம். எனவே இந்த கனவு காணலை விளக்கி அன்றாட வாழ்வோடு ஒட்டி உறவாட உங்களுக்கான யோசனைகள் சில

மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளல்

தேவையற்ற விடயங்களைப் பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்தல்


தினமும் குறித்த நேரத்திலேயே ப்டுக்கைக்கு செல்ல பழகிக் கொள்ளல் அதே போல குறித்த நேரத்திலேயே விழித்தெழல்


மெல்லிய இசை கேட்டல்


ஆரோக்கியமான நல்ல புத்தகங்களை வாசித்தல்


உடலையும், மனதையும், தூங்கும் சூழலையும் தூய்மையாக வைத்துக் கொள்ளல்


படுக்கையை வசதியானதாக அமைத்துக் கொள்ளல் (தலையணை, விரிப்பு)


தூங்குவதற்கான சூழல் இருக்கின்றதா எனப்பார்த்துக் கொள்ளல் (அமைதியான இருளான அமைப்பு)

தூங்கச் செல்வதற்கு முன் சிறிது தூரம் நடை பயிற்சி செய்தல்


இரவு உணவை முடித்துக் கொண்டதுமே உறக்கத்தை தேடாமல் சிரிது நேரத்தின் பின் படுக்கைக்கு செல்லல்.

குடிப்பழக்கத்தை தவிர்த்தல்

இவ்வாறான சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டால் கனவு எனும் பயங்கரத்திலிருந்து தப்பித்து ஆழ்ந்த உறக்கத்தை நிம்மதியாக அடையலாம்.

Comments

நல்லதொரு யோசனைகள்...

தொடர வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு