தலை நிமிர்ந்து செல்லுவோம்

வஞ்சங் கொண்டவர் புடைசூழ குலவி
வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து
விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து
பொருத்தமுற பொய்மை தனை போற்றி நின்றபோதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

மனை பறித்து இடை மடமமைத்து கொடுத்து
மந்தைகளி லொன்றாக எம் குலமும் சேர்க்க
உடன்பிறந்த உறவுகளை ஒவ்வொன்றாய் லைத்து
உடலோடு மனமுடைந்து சோர்ந்து விட்ட போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

நோக்குந் திசையெலாம் களியாட்டம் வளியாகி
மண் பறித்த நோ வந்து நெஞ்சையு மடைத்து
தீண்டும் தென்றலும் தீய தனலாக எரித்து
இரவிலொரு ஒளிவீச்சு கண்பறித்து போகினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

களிப்பினொடு காலனும் பாசக் கயிற்றை நீட்டி
காயத்தில் மண்ணள்ளி தூவிவிட்டு சிரித்து
சிறைவாசல் களிதன்னை ஏற்று தினம் வாடி
சீற்றமுற சிங்கமும் உயிர் குடித்து போகினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

வேஷங்களைப் பூசிக்கொண்டு வாசல் வரை வந்து
பொய் பாசத்தொடு பட்டணத்தில் வீடு தாறேன் என்று
ஆசை காட்டி மோசம் செய்து ஆடைகளும் களைத்து
தாயோடு தாய் நாடும் சேர்த்தெடுக்கும் போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

தோல்வி கண்டு தொடர்பிழந்து நிலைப்பில் நிர்மூலமாகி
நிந்திக்கும் தந்தி கண்டு நிகரில்லா இடர் தந்து கூடி
வெற்றி யென்னும் மாயை சூடி நிஜத்தினில் பாடி
வலை வீசி உலை குழைத்து வஞ்சம் தீர்த்து போயினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

கரம் பற்ற முடியாமல் கைகளையும் புதைத்து
கால்களிலே கடிவாளம் நீளத்திற்கு பூட்டி
கண்டபடி மாதருயிர் பருகி நிதம் ஊண் தேற்றி
புறமுதுகு காட்டி எம்மை ஓடச் சொல்லும் போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

கண்டவரும் நற்றமிழை நாசஞ் செய்ய துடித்து
நாவாலே வளைவுகளால் நாட்களையும் கடிந்து
குடி தன்னில் குடி சேர்த்து கூர் வாளால் கிழித்து
உயிர் குடிக்க சுரம் சேர்த்து யாக்கை தன்னை முடக்கினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

எட்ட நிற்கும் தென்றலுமே எட்டி வந்து இடித்து
ஏழ் கடலு மொன்றாகி கிட்ட வந்து அடித்து
எரிமலையில் தீப்பிளம்பு முட்ட வந்து பொசுக்கி
பஞ்ச பூதமுமே ஒன்றாகி பறந்து வந்து தாக்கினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

புரியாத மொழியினிலே உணர்வு புதிராகப் பேசி
உள்ளங்கள் மீதினிலே உவர் நெருப்பள்ளி வீசி
கனவுதரும் நினைவினிலே கடை நொடியை களைத்து
நித்தம் நித்தம் நிறுத்தாமல் நித்திரையைக் குழப்பினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்!

Comments

THANa said…
கீர்த்தி நீண்ட இடைவெளிக்குப்பிறகு அருமையான ஒரு கவிதை தந்துள்ளிர்கள்.
பஞ்ச பூதங்கள் சுட்டெரித்தாலும் தமிழன் என்று சொல்லடா! கவிதை சொன்ன விதம் அருமையாக இருக்கிறது
தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.
சிறப்பாய் உள்ளது தோழி.
அருமையான கவிதை,சகோதரி.

தொடரட்டும் உம்தமிழினப் பணி.
suryajeeva said…
பத்தாவது புஸ்தகத்தில் இலக்கண கவிதை படித்தது ஞாபகம் வருகிறது.. இலக்கியம் இலக்கியத்திற்கே என்ற நிலையில் இருந்து இலக்கியம் மக்களுக்கே என்ற நிலைக்கு இறங்கி, அனைவருக்கும் புரியும் படி எழுதும் நாளை எதிர் பார்த்து இருக்கிறேன்..

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்