தொலைதூர காதல்
கண்கள் சந்திக்காமல் இதயங்கள் சந்தித்த ஒரு கற்பனை காதல் கதை
அத்தியாயம் 1
ஒரு “ஹலோ”வில் தொடங்கிய காதல்
ஒரு இணையவழி சந்திப்பு...
அது எப்படி நிகழ்ந்தது என்றே இருவருக்கும் தெரியவில்லை.
முதலில், யாரோ ஒருவர் போலத்தான் பேசிக்கொண்டார்கள்.
“Hi... எப்படி இருக்கின்றீர்கள்?”
என்ற அவன் குரல், அவளுடைய குருதி நாளங்கள் வரை சென்று ஒலித்து உறைந்தது.
அன்று தொடங்கிய அந்த உரையாடல்,
நாட்கள் செல்லச் செல்ல நெருக்கமானது.
எப்போது அவன் அவளுக்குப் பிடித்துப்போனான்?
எப்படி பிடித்துப்போனான்?
எதற்காக இவ்வளவு பிடித்துப்போனான்?
எதுவுமே அவளுக்குப் புரியவில்லை.
யாரென்றே முழுமையாக அறியாமல்,
ஒருவருடைய குரலுக்குள் ஒருவர் மெல்ல மெல்லத் தொலைந்து போனார்கள்.
ஒரு பின்னேரம்...
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்
அவன் திடீரென சொன்னான்:
“எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது... I love you.”
அவள் அமைதியாகிவிட்டாள்.
அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது.
அது உண்மைதான்.
அவனுடைய குரலும், பேச்சும், அவன் காட்டிய அக்கறையும் அவளுக்குள் ஏற்கனவே ஒரு இடத்தைப் பிடித்திருந்தன.
ஆனால் அதை “காதல்” என்று சொல்லும் துணிவு மட்டும் அவளிடம் இல்லை.
என்ன பதில் சொல்வது?
எப்படிச் சொல்வது?
இந்த உறவு எங்கே போகும்?
என்ற ஆயிரம் கேள்விகள் ஒரே நொடியில் அவளைச் சூழ்ந்துகொண்டன.
பயந்துபோனாள்.
ஒரு வார்த்தையும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தாள்.
அவள் அழைப்பைத் துண்டித்ததும் அவன் பதறிப்போனான்.
தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
“ஏன் பேசாமல் போனாய்?”
“நான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?”
“பதில் சொல்லு...”
அவனுடைய செய்திகள் அவளுடைய அலைபேசியை நிரப்பிக்கொண்டிருந்தன.
அவள் பார்த்தாள்.
பதிலளிக்கவில்லை.
அடுத்த நாள்...
எதுவுமே நடக்காததைப் போல அவளே அவனை அழைத்தாள்.
அவன் குரலில் நேற்றைய பதற்றம் இருந்தது.
ஆனால் அவன் எதையும் கேட்கவில்லை.
ஏதோ ஒன்றைப் புரிந்துகொண்டவனாய் மெதுவாகக் கேட்டான்:
“உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறது தானே?”
அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பிறகு...
“ம்...”
என்றாள்.
அந்த ஒரு “ம்”...
அவர்களின் காதலுக்கு முதல் சம்மதமாகிவிட்டது.
அத்தியாயம் 2
இதயத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம்
அதன்பிறகு அவர்களின் உரையாடல்கள் நாட்களைத் தாண்டின.
நாட்கள் வாரங்களானது.
வாரங்கள் அவர்களின் வாழ்க்கையாக மாறின.
தொலைவில் இருந்தாலும், அவர்களின் நெருக்கம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒருநாள் அவர்கள் இருவரும் ஒரு சிறிய ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.
அது சட்டத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தமல்ல.
இதயத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் ஒப்பந்தம்.
அவன் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், அதற்கான பதில் அவனுடைய காலையைத் திறக்கும் முதல் செய்தியாக இருக்க வேண்டும்.
அவள் ஒரு செய்தி அனுப்பினால்,
அதற்கான பதில் அவள் கண்விழித்துப் பார்க்கும் முதல் செய்தியாக இருக்க வேண்டும்.
அதுதான் அவர்களின் ஒப்பந்தம்.
காதலில் சிறியதாகத் தோன்றிய அந்த விதி, அவர்களுக்கு மிகப் பெரியதாக இருந்தது.
அவர்கள் இருவரும் அந்த ஒப்பந்தத்தை ஒருபோதும் மீறியதில்லை.
தூக்கம் வந்தாலும் பதில் எழுதாமல் தூங்கியதில்லை.
எவ்வளவு வேலை இருந்தாலும் அந்தப் பதிலைத் தவறவிட்டதில்லை.
ஒருவர் கண்விழிக்கும் முன்பே மற்றொருவரின் வார்த்தை அவரைத் தேடி வந்து நிற்கும்.
அதனால் அவர்களின் ஒவ்வொரு காலையும் ஒருவரின் வார்த்தையில்தான் தொடங்கியது.
அவன் அனுப்பிய ஒரு வரி
அவளுடைய நாளை அழகாக்கியது.
அவள் அனுப்பிய ஒரு பதில் அவனுடைய இரவுக்கு அமைதியாக இருந்தது.
அவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்திருக்கவில்லை.
ஆனால் ஒருவரின் காலை மற்றொருவரின் வார்த்தையால் தொடங்கியது.
ஒருவரின் இரவு மற்றொருவரின் குரலால் முடிந்தது.
அப்படித்தான்...
ஒரு இணையவழி சந்திப்பில் யாரோ ஒருவராகத் தொடங்கியவர்கள், ஒருவரை ஒருவர் அறியாமலேயே ஒருவருக்கொருவர் வாழ்க்கையாகிவிட்டார்கள்.
அந்தக் காதலுக்கு முகம் தெரியவில்லை.
ஆனால் இதயம் மட்டும் முழுமையாகத் தெரிந்திருந்தது.
அத்தியாயம் 3
காதலின் கதவைத் திறந்த SIM அட்டை
ஒருநாள்...
அவளுடைய அலுவலக முகவரிக்கு
ஒரு சிறிய பொதி வந்து சேர்ந்தது.
அவளுக்கே தெரியாமல் அவன் அனுப்பியிருந்தான்.
அதைத் திறந்தபோது, அதற்குள் ஒரு SIM card இருந்தது.
அவள் ஆச்சரியமாக நின்றாள்.
அவன் அவளிடம் நேரடியாகச் சொல்லாமல், அவளுக்காக ஒரு புதிய வழியைத் திறந்திருந்தான்.
“Couple package” என்றார்கள்.
ஆனால் அது இரண்டு எண்களை இணைத்ததல்ல.
இரண்டு இதயங்களை, தொலைவில் இருந்தபடியே ஒரே துடிப்பில் இணைத்தது.
தடைகள் ஏதுமின்றித் தொடர்ந்து பேச வேண்டும்
என்பதற்காக அவன் செய்த சிறு முயற்சி அது.
ஆனால் அந்தச் சிறு முயற்சிக்குள் ஒரு பெரிய காதல் மெல்ல மெல்ல பிறந்துகொண்டிருந்தது.
காதல் கடலில் இருவரும் மூழ்கித்தான் போனார்கள்.
கரை எங்கே?
ஆழம் எவ்வளவு?
என்று அறியாமலே...
காரணம் எதுவுமின்றி காதல் மட்டும் பெருக்கெடுத்தது.
அத்தியாயம் 4
முகம் தெரியாத மனிதன்
ஆச்சரியம் என்னவென்றால்...
இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரை பார்த்ததே இல்லை.
முகம் தெரியவில்லை.
கைகள் தொட்டதில்லை.
அருகில் நின்றதில்லை.
ஆனாலும் இதயங்கள் மட்டும் எப்படியோ ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டிருந்தன.
காதல் எப்போது தொடங்கியது?
எந்த வார்த்தையில் பிறந்தது?
எந்த அழைப்பில் உயிர் பெற்றது?
எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை.
ஒரு “ஹலோ”விலா?
ஒரு நீண்ட இரவு உரையாடலிலா?
அல்லது அவன் குரல் கேட்காமல் போன ஒரு சிறிய நிமிடத்திலா?
பதில் தெரியவில்லை.
ஆனால் நாள் முழுவதும்
அவன் எண்ணங்களைத் தாண்டி வேறு எதுவும் இல்லை அவளுள்.
அவள் சிரிப்பிலும் அவன்.
அவள் அமைதியிலும் அவன்.
அவள் கனவிலும் அவன்.
அவள் விழித்திருக்கும் இரவுகளிலும் அவன்.
ஒருநாள் அவள் உணர்ந்தாள்...
அவள் அவளாக இல்லை என்று.
அவள் நினைவுகள் அவனுடையவை.
அவள் காத்திருப்புகள் அவனுடையவை.
அவள் கனவுகள் அவனுடையவை.
அவள் இதயம் மட்டும் இன்னும் அவளிடம் இருந்தது.
அதுவும் அவனுக்காகவே.
அத்தியாயம் 5
தொலைவில் இருந்தும் அருகில்
அவன் கேட்டால் தூரத்தையும் கடக்கத் துணிந்தாள்.
அவன் சோகப்பட்டால்
தன் சிரிப்பையே மறக்கத் துணிந்தாள்.
அவன் மகிழ்ந்தால் அந்த மகிழ்ச்சியில் தன்னையே மறக்கத் துணிந்தாள்.
அவனைப் பார்த்ததில்லை அவள்.
ஆனால் அவனை உணர்ந்தாள்.
அவனருகில் இருந்ததில்லை.
ஆனால் அவன் அருகாமையை ஒவ்வொரு மூச்சிலும் உணர்ந்தாள்.
தொலைவு அவர்களுக்கிடையில் ஆயிரம் மைல்கள் வைத்திருந்தாலும், அவர்களின் காதலுக்கிடையில் ஒரு விரல் அளவு கூட இடைவெளி இல்லை.
அலைபேசி திரையில் தோன்றும் அவன் பெயர்...
அவளுக்கு அது ஒரு பெயர் மட்டுமல்ல.
நீண்ட நாளின் முடிவில் கிடைக்கும் அமைதி.
அவன் குரல்...
அவளுக்கு அது ஒரு குரல் மட்டுமல்ல.
தனிமையில் அவளைத் தேடி வரும்
ஒரு உயிரின் அரவணைப்பு.
தொலைதூரக் காதல் அது.
கண்கள் சந்திக்காமல் இதயங்கள் சந்தித்த காதல்.
கைகள் கோர்க்காமல் உயிர்கள் இணைந்த காதல்.
ஒரே வானத்தைப் பார்த்தபடி இரு வேறு இடங்களில் இருந்து ஒரே கனவை வாழ்ந்த காதல்.
ஒருநாள் இந்தத் தொலைவு முடியும் என்ற நம்பிக்கையில், இன்றைய ஒவ்வொரு நொடியையும் காதலாகச் சேமித்துக்கொண்டிருந்தார்கள்.
ஏனெனில் சில காதல்களுக்கு அருகாமை தேவையில்லை.
ஒருவரை ஒருவர் உண்மையாக உணரும் இதயங்கள் மட்டும் போதும்.
அத்தியாயம் 6
நாளை நமதே
இருவரும் அடிக்கடி ஒரு விஷயத்தைப் பற்றிக் கதைத்து மகிழ்வார்கள்.
“ஒருநாள் நாம் அருகருகே இருப்போம்.”
“அந்த நாளிலிருந்து இப்படியே பேசிக்கொண்டே இருப்போமா?”
“இல்லை... அப்போது பேசுவதற்குப் பதிலாக நேரில் பார்த்துக்கொண்டே இருப்போம்.”
“வயதாகிவிட்டாலும்?”
“அப்போதும்.”
அவர்களின் கனவுகளில் காதலுக்கு வயது இல்லை.
தொடக்கத்தில் இணையவழி சந்திப்பு.
பின்னர் தொலைபேசி அழைப்புகள்.
அதன்பின் ஒரு நாள் நேரில் சந்திப்பு.
அதற்குப் பிறகு ஒன்றாக வாழும் வாழ்க்கை.
காலை ஒன்றாகத் தொடங்கும்.
இரவு ஒன்றாக முடியும்.
சண்டைகளும் இருக்கும்.
சமாதானங்களும் இருக்கும்.
சிறிய ஆசைகளும் இருக்கும்.
பெரிய கனவுகளும் இருக்கும்.
இறுதியில்...
இருவரும் வயோதிபத்தை அடைந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே,
“நம்ம காதல் இத்தனை தூரம் வந்துவிட்டதே...”
என்று சிரித்துக்கொண்டிருக்க வேண்டும்.
அவர்களுக்கு வாழ்க்கை என்றால் அதுதான்.
அவர்கள் இன்னும் அறியாத ஒன்று மட்டும் இருந்தது.
வாழ்க்கை சில நேரங்களில் நம்முடைய கனவுகளை உடைப்பதற்கு முன், அவற்றை நம்பும்படி நம்மை கற்றுக்கொடுக்கிறது.
அத்தியாயம் 7
யுத்தம் தட்டிய கதவு
அவன் அருகில் அவளை அழைத்துக்கொள்ள பல வழிகளைத் தேடிக்கொண்டிருந்தான்.
தூரம் அவர்களுக்குள் இருந்தாலும், அவளைத் தன் வாழ்வின் அருகில் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை அவனுள் இருந்தது.
அந்த நேரத்தில்...
யுத்தம் அவன் குடும்பத்தின் கதவைத் தட்டியது.
அவன் குடும்பம் பாதிக்கப்பட்ட செய்தி அவளுடைய இதயத்தையும் காயப்படுத்தியது.
அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் அவள் பயணமானாள்.
முதல் சந்திப்பிலேயே அவர்கள் அவளுக்கு அந்நியமானவர்களாகத் தோன்றவில்லை.
அவனைப் பெற்றவர்களின் முகங்களில் அவள் தன் சொந்தங்களைப் பார்த்தாள்.
அவனுடைய குடும்பத்திற்கும் அவள் பிடித்துப்போனாள்.
அவளுக்கும் அந்தக் குடும்பம் பிடித்துப்போனது.
காதல் மட்டும் அல்ல...
ஒரு குடும்பத்தையே அவள் மனம் நேசிக்கத் தொடங்கியது.
அப்படியே அவர்களின் காதல் ஒரு குறையும் இல்லாமல் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருந்தபோது...
வாழ்க்கை மீண்டும் ஒரு இழப்பை அவன் முன் கொண்டுவந்தது.
அவன் தந்தையை இழந்தான்.
அந்த இழப்பு அவனுடைய இதயத்தை உடைத்தது.
தன் நாட்டின் இழப்புகள்.
தன் குடும்பத்தின் வலி.
தந்தையை இழந்த வெறுமை.
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவனை உள்ளுக்குள் நொறுக்கியது.
அந்த நாட்களில் அவள் அவனுக்கு
காதலியாக மட்டும் இல்லை.
அவனுடைய ஆறுதலாக மாறினாள்.
அவன் அழுதபோது அவளும் அழுதாள்.
அவன் மௌனமாக இருந்தபோது அவள் அவனோடு மௌனமாக இருந்தாள்.
“நான் இருக்கிறேன்...”
என்ற அவளது வார்த்தைகள் மட்டும்
அவனுடைய உடைந்த மனத்திற்கு
ஒரு உலகமாக இருந்தது.
அத்தியாயம் 8
“நான் இருக்கிறேன்...”
அவன் பேசாமல் இருந்த இரவுகளில் அவள் அவன் மௌனத்தைக் கேட்டாள்.
அவன் அழவில்லை.
ஆனால் அவன் குரலில் அழுகையை உணர்ந்தாள்.
“நீ பேச வேண்டாம்... நான் இருக்கிறேன்.”
என்று மட்டும் சொன்னாள்.
அவன் துயரங்களைத் தீர்க்க அவளால் முடியவில்லை.
அவனுடைய கண்ணீரைத் துடைக்க அவளால் அருகில் வரவும் முடியவில்லை.
ஆனால் அவனுக்குத் தேவையான நேரங்களில் அவள் மட்டும் அவனைவிட்டு விலகவில்லை.
அவன் உடைந்தபோது அவள் அவனுக்குக் கை கொடுத்தாள்.
அவன் தனிமையில் இருந்தபோது அவள் அவனுக்குத் துணையாக நின்றாள்.
அவன் உலகமே தன்னை விட்டு விலகிவிட்டதாக நினைத்தபோது,
“நான் இருக்கிறேன்...”
என்று அவள் மட்டும் அவனுக்கு நினைவூட்டினாள்.
அவர்களின் காதல் அப்படித்தான் வளர்ந்தது.
சந்தோஷத்தில் மட்டும் அல்ல.
வலியிலும்.
தூரத்தில் மட்டும் அல்ல.
இழப்பிலும்.
காதலில் மட்டும் அல்ல.
ஒருவருக்கொருவர் உயிராக.
அத்தியாயம் 9
வீட்டின் வாசலில் காதல்
காலம் சென்றது.
ஒருநாள் அவள் வீட்டில் அவளுக்குத் திருமணம் பேசத் தொடங்கினர்.
முதலில் மறுத்தாள்.
பின்னும் மறுத்தாள்.
“எனக்கு விருப்பமில்லை...”
என்றாள்.
ஆனால் வீட்டாரின் முயற்சி நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் தன் காதலை மறைத்து வைத்து தன் வாழ்க்கையை காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தாள்.
அன்று அவள் தன் காதலை வீட்டின் முன் வைத்தாள்.
“நான் ஒருவரைக் காதலிக்கிறேன்.
அவரைத்தான் திருமணம் செய்வேன்.”
அவள் குரலில் பயம் இருந்தது.
ஆனால் அவள் முடிவில் உறுதி இருந்தது.
அவள் எவ்வளவு பிடிவாதமாக அந்தக் காதலைக் காத்திருக்கிறாள் என்பதை வீட்டார் புரிந்துகொண்டனர்.
அவன் அனுமதியோடு, இறுதியில் அவனோடு பேச முடிவு செய்தனர்.
அவள் கைகளில் அலைபேசி இருந்தது.
இதயம் மட்டும் அவனை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
வீட்டார் அவனோடு பேசினர்.
அவன் சூழ்நிலையையும் கேட்டறிந்தனர்.
அவன் இப்போது அங்கே வர முடியாத நிலையை அவர்களும் புரிந்துகொண்டனர்.
“சரி...
இப்போது வர முடியாவிட்டாலும் பரவாயில்லை.
உன் வீட்டாரோடு பேசுவோம்.
ஒரு முடிவை ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வோம்.”
என்று அவனிடம் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் அவன் சொன்னான்:
“என் அம்மாவுக்கே இன்னும் இந்தக் காதல் பற்றி தெரியாது...
இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது.”
அவ்வளவுதான்.
அந்த உரையாடல் அங்கேயே முடிந்தது.
ஆனால் அவளுடைய வாழ்க்கையில் ஒரு நீண்ட இரவு அங்கேதான் தொடங்கியது.
அத்தியாயம் 10
அவள் கேட்டது “காத்திரு” மட்டுமே
அவள் மட்டும் வீட்டாரின் முன் தலைகுனிந்து நின்றாள்.
அவள் கேட்ட வசவுகள் அவளுடைய காதுகளை மட்டும் காயப்படுத்தவில்லை.
அவளுடைய நம்பிக்கையையும் மெல்ல மெல்லக் கிழித்தன.
ஆனாலும் அவள் மனதில் ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது.
“அவன் என்னை விட்டுவிட மாட்டான்.”
அன்று பின்னிரவு அவள் அவனை அழைத்தாள்.
அவள் எதிர்பார்த்தது ஒரே ஒரு வார்த்தை.
“இப்போது முடியாது...
கொஞ்சம் காலம் எனக்காகக் காத்திரு.”
அந்த ஒரு வார்த்தையை அவன் சொன்னால் போதும்.
ஆயுள் முழுவதும் காத்திருக்கத் தயாராக இருந்தாள் அவள்.
ஆனால் அவள் எதிர்பார்த்த குரலுக்குப் பதிலாக அவனுடைய கோபமான குரல் வந்தது.
“என்னால் இப்போது முடியாது.”
அவள் அமைதியாக இருந்தாள்.
அவன் தொடர்ந்து சொன்னான்:
“என் அம்மா அவளுடைய உறவினரின் மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறாள்.
அவளை மீறி என்னால் இப்போது எதுவும் பேச முடியாது.”
அவள் அந்த வார்த்தைகளைக் கேட்டபடி உறைந்து போனாள்.
அவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
ஆனால் அவள் கேட்பது அவனுடைய குரல் இல்லை.
தன் இதயம் உடையும் சத்தம்.
அவன் அவளுடைய தரப்பைக் கேட்கவில்லை.
அவள் எவ்வளவு போராடினாள் என்பதைக் கேட்கவில்லை.
அவள் வீட்டில் எவ்வளவு வசை கேட்டாள் என்பதைக் கேட்கவில்லை.
அவள் அவனுக்காக எவ்வளவு காத்திருந்தாள் என்பதையும் கேட்கவில்லை.
இறுதியில் அவன் சொன்ன அந்த ஒரு வாக்கியம்...
“என்னால் இப்போது முடியாது...
நீ உன் வீட்டில் சொல்பவரை மணந்துகொள்.”
அந்த வார்த்தைகள் அவள் காதுகளில் விழவில்லை.
நேராக அவள் இதயத்திற்குள் விழுந்தன.
அவள் எதிர்பார்த்தது ஒரு வருடமோ,
இரண்டு வருடமோ அல்ல.
“காத்திரு.”
என்ற ஒரு வார்த்தை மட்டுமே.
அந்த ஒரு வார்த்தைக்காக ஆயுள் முழுவதையும் கொடுக்கத் தயாராக இருந்தாள்.
ஆனால் அவன் கொடுத்தது...
“மறந்துவிடு.”
அவளால் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
அழுகை கூட அவள் தொண்டையில் சிக்கிக்கொண்டது.
அவள் அழைப்பைத் துண்டித்தாள்.
அத்தியாயம் 11
முடியாத இரவு
அந்த இரவு...
அவள் வாழ்நாளில் அதிகமாக அழுத இரவாக மாறியது.
கண்ணீர் நின்கவே இல்லை.
அவன் சொன்ன வார்த்தைகளை மறக்க முயன்றாள்.
ஆனால் ஒவ்வொரு முறையும் அதே வார்த்தைகள் அவள் மனதில் வந்து குத்தின.
“நீ உன் வீட்டில் சொல்பவரை மணந்துகொள்...”
இரவு முடிந்தது.
காலை வந்தது.
ஆனால் அவளுக்குள் இரவு முடியவில்லை.
மீண்டும் அவனை அழைத்தாள்.
அவன் எடுக்கவில்லை.
மீண்டும் அழைத்தாள்.
பதிலில்லை.
மீண்டும்...
மீண்டும்...
மீண்டும்...
ஒரு நாள்.
இரண்டு நாள்.
பல நாட்கள்.
அவள் அழைத்தாள்.
அவன் எடுக்கவில்லை.
அவள் செய்தி அனுப்பினாள்.
பதில் இல்லை.
அவள் காத்திருந்தாள்.
அவன் வரவில்லை.
ஒரு காலத்தில் அவளுடைய அழைப்புக்காகக் காத்திருந்தவன்...
இப்போது அவளுடைய அழைப்பையே புறக்கணித்தான்.
அவள் மெதுவாகத் தன்னையே இழக்கத் தொடங்கினாள்.
சாப்பிட மறந்தாள்.
தூங்க மறந்தாள்.
பேச மறந்தாள்.
சிரிக்க மறந்தாள்.
அவளிடம் இருந்தது ஒரே ஒரு நினைவு.
“அவன்.”
அத்தியாயம் 12
அவனுக்கான அலாரம்
அவனை நேசிக்கத் தொடங்கிய நாள் தொட்டு, அவள் அவனுடைய காதலியாக மட்டும் இல்லை.
அவனுடைய alarm clock ஆகவும் மாறிப்போனாள்.
அவன் வேலைக்குத் தாமதமாகிவிடக் கூடாதென்று பல இரவுகள் அவள் தூங்கியதே இல்லை.
அவன் இருந்தது தூர தேசத்தில்.
நேரங்கள் வேறுபட்டிருந்தன.
அவனுடைய பகல் தொடங்கும்போது அவளுடைய இரவு முடிந்திருக்காது.
ஆனால் அந்தத் தூரமும் அவளுடைய அன்பை ஒருபோதும் தடுக்கவில்லை.
அவன் தூங்கும் நேரம் பார்த்துத் தன் தூக்கத்தை மாற்றிக்கொண்டாள்.
அவன் எழுந்திருக்க வேண்டிய நேரம் பார்த்துத் தன் இரவுகளையே அலாரமாக்கிக்கொண்டாள்.
அவள் அலாரம் வைத்து தானே எழுந்து,
“எழுந்திரு...”
என்று அவனை எழுப்பிய நாட்கள்தான் அதிகம்.
சில நாட்களில் அலாரம் அடிக்கும் முன்பே அவள் விழித்துவிடுவாள்.
அவனுடைய நேரத்தை அவளுடைய உடல் கடிகாரம் மனப்பாடம் செய்திருந்தது.
அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறானா என்று நினைத்து அவள் மீண்டும் அழைப்பாள்.
ஒருமுறை...
இருமுறை...
அவன் எடுக்கவில்லை என்றால் மூன்றாவது முறையும் அழைப்பாள்.
அவன் தூக்கக் கலந்த குரலில்,
“ஹலோ...”
என்று சொன்னதும் அவளுக்குள்
ஒரு சிறிய நிம்மதி பிறக்கும்.
“எழுந்துட்டியா?”
என்று கேட்பாள்.
அவன்,
“ம்... எழுந்துட்டேன்...”
என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்க முயன்றாலும்,
“இல்லை... முதலில் எழுந்து தயாராகு.”
என்று செல்லமாகக் கோபிப்பாள்.
அவனுடைய ஒரு நாள் சரியாகத் தொடங்க வேண்டும் என்பதற்காக தன் இரவைத் தொலைத்தவள் அவள்.
அவன் வேலைக்குச் சென்றுவிட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகுதான் அவள் மீண்டும் படுக்கையில் விழுவாள்.
அவனுக்காக அவள் இழந்த தூக்கங்களை யாரும் எண்ணவில்லை.
அவன் கேட்டதும் இல்லை.
அவளாக சொன்னதும் இல்லை.
ஏனெனில் காதலில் செய்த தியாகங்களை கணக்குப் புத்தகத்தில் எழுதிக்கொண்டிருப்பதில்லை.
அவளுக்கு அது தியாகமாகவே தெரியவில்லை.
அவனை கவனித்துக்கொள்வது அவளுடைய வாழ்க்கையின் இயல்பாகிவிட்டது.
அத்தியாயம் 13
அலாரமாக இருந்தவள்
ஒரு காலத்தில் அவனை எழுப்பிய அந்தக் குரல்...
ஒருநாள் அவனுடைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக மறைந்துவிடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அவன் தூங்காமல் போனால் கவலைப்பட்டவள்.
அவன் சாப்பிடாமல் இருந்தால் கோபப்பட்டவள்.
அவன் தாமதமாக வேலைக்குச் சென்றால் பதற்றப்பட்டவள்.
இறுதியில் அவனுடைய வாழ்க்கையில் தான் வேண்டாதவளாகிவிடுவேன் என்று எப்படி நினைத்திருப்பாள்?
ஒரு காலத்தில் அவனுக்காக அலாரம் வைத்த அதே கை...
பின்னொரு காலத்தில் அவனை அழைக்கவே தயங்கிக்கொண்டிருந்தது.
ஒரு காலத்தில் அவன் எழுந்தானா என்று கவலைப்பட்ட இதயம்...
பின்னர் அவன் அழைப்பை எடுப்பானா என்று துடித்துக்கொண்டிருந்தது.
அவனை எழுப்புவதற்காக பல இரவுகள் தூங்காதவள்...
ஒருநாள் அவனுடைய நினைவுகளால் இரவெல்லாம் விழித்திருப்பாள் என்று அவளுக்குத் தெரியவில்லை.
காதல் சில நேரங்களில் நம்மை ஒருவரின் வாழ்க்கையில் அவ்வளவு ஆழமாகப் பதியச் செய்கிறது.
பின்னர் அதே மனிதன் விலகிச் செல்லும்போது...
நாம் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு முழு வாழ்க்கையையே நம்மிடமிருந்து எடுத்துச் சென்றுவிடுகிறான்.
அவளும் அப்படித்தான்.
அவனுக்கு அலாரமாக இருந்தவள்...
அவன் வாழ்க்கையில் ஒரு நாள் அவனுக்கு தேவையில்லாத நினைவாக மட்டுமே மாறிப்போனாள்.
அத்தியாயம் 14
ஒரு கேள்வி மட்டும்
இப்படியாக நாட்கள் நகர்ந்தன.
அவன் சொன்ன அந்த ஒரே ஒரு சொல் ஊசியைப் போல அவளுக்குள் குத்திக்கொண்டே இருந்தது.
“நீ உன் வீட்டில் சொல்பவரை மணந்துகொள்...”
எத்தனை முறை மறக்க முயன்றாலும் அதே வார்த்தை மீண்டும் மீண்டும் அவள் மனதைக் கிழித்தது.
ஒரு காலத்தில் அவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவள் அவள்.
அவனுடைய கண்ணீரில் தன் வலியை மறந்தவள்.
அவனுடைய தனிமையில் தன் துணையை கொடுத்தவள்.
அவன் துயரப்பட்டபோது அவனுக்கு ஆறுதலாக நின்றவள்.
அவனுக்காக தொலைவையும், காத்திருப்பையும், உலகத்தின் எதிர்ப்பையும் கூட தாங்கத் தயாராக இருந்தவள்.
ஆனால் இப்போது...
அவள் காதலித்த அதே மனிதன் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டான்.
அந்த உண்மையை ஏற்றுக்கொள்வது அவளால் முடியவில்லை.
“அவன் உண்மையாகத்தான் சொன்னானா?”
“அல்லது கோபத்தில் சொன்னானா?”
“அவனுக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது?”
“என்னை இவ்வளவு நேசித்தவன் எப்படி இவ்வளவு எளிதாக என்னை விட்டுவிடச் சொன்னான்?”
என்ற கேள்விகள் அவள் மனதுக்குள் முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருந்தன.
பதில் மட்டும் இல்லை.
அவனைப் புரிந்துகொள்ள முயன்றாள்.
அவன் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முயன்றாள்.
அவன் குடும்பத்தைப் புரிந்துகொள்ள முயன்றாள்.
ஆனால் அவள் புரிந்துகொள்ள முடியாத ஒன்று மட்டும் இருந்தது.
அவன் ஏன் அவளிடம் அந்த வார்த்தையைச் சொன்னான்?
அவள் எதிர்பார்த்தது அவனைப் பிடித்துக்கொண்டு,
“என்னை விட்டுவிடாதே...”
என்று கேட்பதல்ல.
அவன் மட்டும்,
“இப்போது முடியாது...
கொஞ்சம் காத்திரு.”
என்று சொல்லியிருக்க வேண்டும்.
அந்த ஒரு வார்த்தை அவளுக்கு ஒரு வாழ்நாள் நம்பிக்கையாக இருந்திருக்கும்.
ஆனால்...
அவன் சொல்லவில்லை.
அத்தியாயம் 15
முற்றுப்புள்ளி
மெல்ல மெல்ல அவள் தன்னைத் தானே சமாதானப்படுத்தத் தொடங்கினாள்.
“அவன் என்னை வேண்டாம் என்கிறான் என்றால்...
நான் ஏன் அவன் வாழ்க்கையில் நிழலாகவே நிற்க வேண்டும்?”
என்று தன் மனதைக் கேட்டாள்.
பதில் சொல்ல முடியாமல் அவள் அமைதியாக அழுதாள்.
அவனை விட்டு விலக வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அது அவள் எடுத்த முடிவு அல்ல.
அவனுடைய வார்த்தைகள் அவளைத் தள்ளிய முடிவு.
ஒவ்வொரு நாளும் அவனுடைய எண்ணை அழைக்காமல் இருக்க தன்னோடு தானே போராடினாள்.
அவனுடைய பெயர் அலைபேசியில் தெரிந்தாலும் இதயம் துடிக்கும்.
அவனுடைய பழைய குரல் பதிவுகள் காதில் விழுந்தாலும் கண்கள் கலங்கும்.
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுடைய நினைவுகளில் மீண்டும் உயிர்பெறும்.
ஒரு காலத்தில் அவள் வாழ்க்கையாக இருந்தவன்...
இப்போது அவள் வலியாக மாறிவிட்டான்.
“இது முடியாத காதல்...”
என்று அவள் தன்னைத்தானே சொல்லிப் பார்த்தாள்.
ஆனால் அவளுடைய மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏனெனில் அவள் ஒருபோதும் இந்தக் காதலுக்கு ஒரு முடிவை நினைத்ததே இல்லை.
அவள் கனவில் அவன் இருந்தான்.
அவள் நாளையில் அவன் இருந்தான்.
அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய ஆசையிலும் அவன் இருந்தான்.
அதனால் அந்த வாழ்க்கை இப்படியே முற்றுப்பெறும் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருநாள் அவள் கண்ணாடி முன் நின்றாள்.
தன்னைப் பார்த்தாள்.
பல நாட்களாகச் சிரிக்காத ஒரு முகம்.
பல இரவுகளாகத் தூங்காத கண்கள்.
பல வார்த்தைகளை உள்ளுக்குள் புதைத்த இதயம்.
அவள் மெதுவாகச் சொன்னாள்:
“நான் உன்னை மறக்க முயற்சிக்கிறேன்...”
ஆனால் அவள் கண்கள் மட்டும் அவளை நம்பவில்லை.
அவன் இல்லாத வாழ்க்கையை வாழப் பழக வேண்டும் என்று அவள் முயன்றாள்.
அவன் நினைவுகளை மெல்ல மெல்ல தன் மனத்திலிருந்து அகற்ற முயன்றாள்.
ஆனால் சில காதல்கள் மறக்கப்படுவதில்லை.
அவை வாழ்க்கையின் ஒரு பகுதியாகி மனதின் ஓரத்தில் மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கும்.
அவளுடைய காதலும் அப்படித்தான்.
அவள் விலக முயன்றாள்.
இதயம் மட்டும் அவனை விட்டு விலகவில்லை.
அவள் மறக்க முயன்றாள்.
நினைவுகள் மட்டும் அவளை மறக்கவில்லை.
அவள் இந்தக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலவில்லை,
ஆனால் அவள் அனுமதி கேட்காமலேயே அந்தக் காதல் தன் கதையின் கடைசி வரியை எழுதியுவிட்டது.
அவள் காதல்...
அவள் அனுமதியில்லாமலே முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது.
அந்த முற்றுப்புள்ளியைப் பார்த்தபடி அவள் இன்னும் ஒரே ஒரு கேள்வியோடு நின்றாள்.
“என்னை காதலித்தவன்...
ஏன் என்னை விட்டுச் செல்லச் சொன்னான்?”
அந்தக் கேள்விக்கு மட்டும்...
இறுதிவரை
அவள் மனதில் எந்தப் பதிலும் பிறக்கவில்லை!
அவள் விருப்பமே இல்லாமல் தொலைத்த காதல் அது
அவன் விரும்பி தொலைத்த காதலும் இது தான்
Samyu❣️
i3 planet 🌎
Comments