உள்ளம் உணர்வாகும் உணர்வில் உழைப்பே வாழும்














உதிரத்தை
வியர்வையாக்கி
உடல் தன்னை வருத்தி தினம்
உலகத்தில் உரமாக - நல்
வரமாக வந்துதித்த மானுட
கலங்களின் இறப்புக்களோ
கதைகள் பல எடுத்துரைக்க
வரலாற்றில் தடம் பதித்த
சுவடுகள் சொற்பமல்ல
ஆண்டாண்டு காலமாக
நேர வரையறையின்றி
மாண்டு மாண்டு மாடாய் தேய்ந்த
மானுட போராட்டம்
நாள் முழுதும் தன் உடல் வருத்தி
தானே சாவதை தவிர்க்க;

அக்கினியில் அழுத்தப்பட்ட
கறைகளின் திரியாக
தன்னோடே ஒட்டிக்கொண்டு
படையாக தன் நிறம் மறைத்த
வியர்வை தழும்புகளோடு
களைப்பும் துடைத்தெறிந்து
தூய காற்றோடு தூக்கத்தையும்
ஏந்திக்கொள்ள 125 ஆண்டுகளுக்கு
முன்பாக பொதுவுடமை எதிர்த்து வரும்
அமெரிக்காவின் சிகாகோ நகரில்
உழைப்பாளிகளின் ஒன்று திரளல்
உரிமை கோரிக்கை போராட்டத்தின்
முடிவுரை இன்றைய 8மணி நேரமாக
சுருக்கப்பட்ட உழைப்பு நேரமும்
வாரத்தில் ஒரு விடுமுறையும்

ஓய்வுதினம் என்றாலும்
கடமை உணர்ந்தவர்கள் கருதி முன்வந்து
உலகத் தொழிலாளரின் ஒன்றுபட்ட
உழைப்பை கௌரவிக்கும் திருநாள்
வைகாசியின் முதல் நாள்

வானத்தை தொட்டுவரும்
வாலிபரின் கூக்குரல்கள்
வாடாமல் தொடரும் எங்கள்
முதியோரின் முழக்கங்கள்
ஊரெங்கும் ஊர்வலங்கள் ஆம்
இவை உரிமை ஊர்வலங்கள்
கரடு முரடான வாழ்வின் பாதைகளில்
கவலை மறந்துவிட்டு களிப்போடே போற்றிவரும்
காலை முதல் மாலை வரை கண்கொள்ளா
காட்சியல்லோ..... அன்றோடு அவை முடிய
மறு நாளே உழைப்புக்கு உயிர் கொடுக்கும்
வியர்வைக்கு விடுதலையளிக்கும்
வீரத் தொழிலாளர் புகழ்பாடி நாம் மகிழ்வோம்

ஜாதி, மதம் நீளவில்லை பேதங்களும் பிறப்பதில்லை
ஜாதகங்கள் கால் முளைத்து ஜோதிடரை பார்ப்பதில்லை
நல்ல நேரம் கெட்ட நேரம் "நா" வதுவும் உரைப்பதில்லை
ஆண்டி முதல் அரசன் வரை ஆர்ப்பரிக்கும் இன் நாளில்
ஆதரவாய் அனைவருள்ளும் அகிம்சை குடிகொள்ளும்
அன்பை மனம் அள்ளும் அகிலம் உயிர் கொள்ளும்

அடிமைகளாய் முடக்கப்பட்டு போராட்ட கைதிகளாய் அடைக்கப்பட்டு
வலிகளும் வடுக்களும் வயதோடு துணையேற்று
வரிசையாய் வலம்வந்த உழைப்பாளர்
உலகத்தின் உயிரல்லோ - அவரை
உலகத்தின் உயிர்ப்புள்ள வரை உயிராய் மதிப்போம்
உலகை அவர் துணையோடு ஜெயிப்போம்!

நன்றி இருக்கிறம்

Comments

மிகவும் அருமையான கவிதை நண்பரே .
//மிகவும் அருமையான கவிதை நண்பரே//

நன்றி நன்றி

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு