வாழ்ந்து தான் பார்ப்போமே!

வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் கண்மூடி திறக்கும் நேரத்திற்கிடையில் வெவ்வேறான வடிவங்களாக பரிமாற்றமடைவதோடு அவற்றில் பல ஓடி மறைந்து விடுகின்றன ஏனோ ஒரு சில மட்டுமே நிலையாய் பதிந்து விடுகின்றன. அவ்வாறாக மனதில் பதிந்த விடயங்க்கள், நிகழ்வுகள் எம் உள் மனதில் சந்தோசமாகவோ, துக்கமாகவோ மாறி ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வை தந்து செல்லும். நாம் விரும்பிய ஒன்று கிடைக்காமலோ தொலைந்தோவிட்ட போது மனிதன் துயரம் என்ற அகோர பாதாளந்துக்குள்ளும் விரும்பியதொன்று கிடைத்தோ, எதிர்ப்பாராத ஒரு நிகழ்வு சுபமாகவோ நடைபெறும் போது மகிழ்ச்சியின் உச்சத்திலும் திளைக்கின்றான். ஆக மனிதன் வாழ்க்கை என்ற புத்தகத்தை இன்பம் துன்பம் என்ற பக்கங்களைக்கொண்டு மாறி மாறி பிரட்டிக் கொண்டிருக்கின்றான். கண்ணுக்குப்புலப்படாத ஏதோ ஒரு சக்தி இதனை செயற்படுத்திக்கொண்டிருக்கின்றது ஆனாலும் சந்தோசத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள துணிந்த மனிதன்; துயரம் என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதோடு விரும்புவதும் இல்லை. 

துயரம் என்ற முற்றுப்புள்ளி ஒவ்வொரு சந்தோசத்திற்கும் இல்லை என்றால் மனிதன் தன்னை மறந்தே போய்விடுவான் இன்னிலையை சீராகப்பேணவே அந்த கண்ணுக்கு புலப்படாத சக்தியானது இயற்கையின் இரவு பகல் போல தொடர்ந்து ஒரே இடைவேளியில் இல்லையென்றாலும் அவ்வப்போது இந்த மாற்றங்களை சேர்ப்பித்து உண்மையை உணர்த்திவிட்டுச் செல்கின்றது. இப்படியாக வாழ்க்கையின் நியதி அமைந்துவிட்டப்போது; தோல்வியையோ, துன்பத்தையோ கண்டு துவல்வதை நிறுத்திவிட்டு அதனை எதிர்கொண்டு எவ்வாறு சமாளிப்பது என்பதை சிந்திப்பதில் நேரத்தை செலவிடலாம் மேலும் இவற்றை வெற்றிக்கான முதற்படியாக ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் மனதை சஞ்சலப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகள் சம்பவிக்காமல் பேணுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளலாம்.

தானாக தேடி வந்து கிடைத்த வெற்றிக்கும் போராட்டத்தினூடு கிடைத்த வெற்றிக்கும் நிறைய வித்தியாசங்களை நம் மனமே கண்டுணர்வதுண்டு.  நீ எப்போது வீழ்வாய் கைக்கொட்டி சிரிக்கலாம் என ஆந்தைக்கண் கொண்டு காவல் காக்கும் கேடுகெட்ட சமூகத்தின் நடுமே விழுந்தாலும் வேர்தாங்கும் ஆலம் விழுதாக பற்றிப்பிடித்து உன் உறுதியை பரைசாற்று: வலிகளின் நடுவில் வரும் வசந்தத்தை சுவைப்பதிலுள்ள சுகமே தனி! உன்னில் நீயே நம்பிக்கை வைத்தால் உன்னைத் தாண்டி தீமையெல்லாம் உனைத் தீண்டவும் அஞ்சும்!

நான் என்ற உன்னை நிலைநிறுத்த உனக்கு கிடைத்த அறிய வாய்ப்பாக இதனைக்கருதி முன்னேற முயற்சி செய். தவறிலைத்து தன்னை திறுத்திக்கொண்ட மனிதனே பூரணப்படுகின்றான் எனவே உன்னை நீயே பூரணமானவனாக்க முதற்படியை பொறுமையோடு கவனமாக எடுத்து வை எதுவெல்லாம் உன் தோல்விக்கு, கவலைக்கு காரணமாயிற்றோ அவை அனைத்தும் தூரம் வை! உன் குறிக்கோள் எதுவென்று ஆரம்பத்திலேயே குறித்துக்கொள் அது உன் இலக்கை அடைய இன்னும் இலகுவாகும். இது தான் என தீர்மானித்த பின்னரே கலத்தில் இறங்கு இடையில் வரும் தடைகளைக்கண்டு உன் எண்ண ஓட்டங்களைச் சிதறவிடாமல் நேர் பாதையில் ஒரே மனதோடு பயணம்கொள் மேடு பள்ளங்கள் எதுவாயினும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது

இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறு சுவைகளும் கலந்தது தான் வாழ்க்கை அத்தனை சுவைகளையும் சுவைத்துப்பார்த்த பின்னரே இனிப்பின் இன்பத்தை அறிய முடிகிறது அதுபோலத்தான் வாழ்க்கையின் தத்துவத்தை முழுமையாக அறிந்து சுவைப்பதற்கு இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, நட்பு, வெறுப்பு என பல வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு நபர்களைக்கொண்டு எம்மை ஆட்சி செய்கின்றது அதில் நீ எதனைக் கொ(ன்)ண்(று)டு எதனை வென்றாய் என்பதில் தான் வாழ்க்கை தேர்வு நடக்கின்றது ஆகவே, என்னவென்றாலும் நடக்கட்டும் எனக்கென்ன வந்தது என்னும் அலட்சியப்போக்கை அடியோடு நீக்கு உன் வயிற்றுக்குப் பசிப்பதை உன்னால் மட்டுமே உணர முடியும் அதே போலத்தான் உன் சந்தோசம் எதிலென்று உன்னால் மட்டுமே தீர்மாணிக்கமுடியும் அதனை நீயே நல்வழியில் தேடு. உன் வாழ்வை தேர்ந்தெடுத்து சரியாக அமைத்துக்கொள்ளும் பொறுப்பு உன்னுடையது அதில் மற்றோரின் அதிகாரத்திணிப்பை உட்செலுத்தாதே எதுவாயினும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்து தீர்க்கமான முடிவை தெளிவாக எடு அதில் உறுதியாகவும் இரு! வாழ்க்கை புதிதும் அல்ல அத்தனை கொடியதும் அல்ல என்பதை உணர்வாய் செழிப்பாக வாழ்வாய்!
Comments

நல்லது ஐயா... நல்ல கருத்துக்கள்.... நன்றி...

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்