கொள்ளாமல் கொள்ளும்
தூக்கம் வருடுவதாய் இல்லை - அந்த
நீண்ட இரவில் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தேன்
அத்தனையும் உன்னை அணைத்தபடி!
எந்த ஒரு நீண்ட பயணமும்
உன்னோடு தொடரவில்லை
உன் கைவிரல் கோர்த்து எந்த காதல்
நாடகமும் இடம்பெற வில்லை!
அப்படி உனக்கு பிடித்த எதையும்
செய்ய நீ கேட்டதும் இல்லை
என்னை முழுதாக பிடிக்கும் என்பதை மட்டும் அடிக்கடி என்னிடம் கூறுவாய்!
அப்படி ஒன்றும் நான் சிறப்பானவள் இல்லை
ஆடவர் மயங்கும் அழகும் என்னில் இல்லை
இதை தாண்டி எந்த திறமையும் இல்லை
இருந்தும் உனக்கு என்னை பிடிக்கும்
என்பது எனக்கே ஆச்சரியமாயிருக்கும்!
அப்போதெல்லாம் உன்னைச் சுற்றி
எத்தனை பெண்கள் - உன்னை
காதலிப்பதாய் சொல்லியிருப்பார்கள்
எல்லாம் விட்டு என்னை தேர்ந்தது ஏன்?
புரியாமல் இன்றும் நான்!
அப்படி உன்னை விரும்பிய யாரையாவது
நீ தேர்ந்திருந்தால் உன் வாழ்வு
இன்னும் சீராயிருக்குமோ? - நான்
அனைத்தும் பறித்து எறிந்ததாய்
குற்றவுணர்வு எனக்குள்!
உன்னோடான என் நாட்கள்
உனக்கு எப்படியோ....
பட்டாம்பூச்சியாய் மாறிப்போனேன் நான்
என்னுள் பல்லாயிரம் மின்மினிகளின்
பிரகாச ஒளி வீச்சு
பார்க்கும் திசையெல்லாம் உன் விம்பம்
நீ எனை நோக்கி வீசும் பார்வை ஒரு வரம்
நீ கடந்த பாதையில் நடப்பதில் ஒரு சுகம்
உன் பெயரை கேட்டாலே ஒரு வெட்கம்
நீயாய் மாறிப்போனேன் நான்
என் பெயரில், உன் பெயரை
இணைத்து எழுதி மகிழ்ந்த தருணங்கள் எத்தனை அழகு
வார கடைசியில் உன்னிடம் இருந்து வரும்
ஒரு மடலுக்கான காத்திருப்பு - அதன்
பதில் மடல் எழுத நான் படும்பாடு
உன் குரல் கேட்டால்
துடிக்கும் இதயத்தின் ஓசை
தூரமாய் இருந்தே
அனைத்துக்கொள்ளும்
உன் பார்வை
எத்தனை அதிஷ்டசாலி நான்
நீ என்னவன் என்பதில்
அத்தனை பெருமை எனக்கு!
எதையுமே எதிர்பாராமல் அரும்பும்
முதல்காதல் எப்போதும் ஒரு சிறப்பு
அது காதலை மட்டுமே காதல் செய்யும்
ஒருபோதும் காமம் கலக்காது அதனுள்!
காலம் எல்லா காதலையும் சேர்த்து
வைத்தே தீரும் என்பது இல்லை
என்னுடையதும் கூட காலத்தின்
கணக்கில் சேர்க்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டதுதான்
எல்லாம் விதியாக
இருந்தும் ஓரமாய் ஆழமாய்
ஒட்டிக்கொண்டே இருக்கிறது அதன்
நினைவுகள் மட்டும்!
அவ்வப்போது கொள்ளாமல் கொள்ளும்!
Comments