81. மீண்டும் சுனாமி
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதியை நினைக்கும் போதே இதய இயக்கம் நின்றுவிட்டதான ஒரு எண்ணம் அனைவர் மனதையும் ஆட்டிப்படைக்கும். எத்தனை இழப்புக்கள், எத்தனை உயிர் சேதங்கள்....? உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தவித்த அவர்களின் கதறல் நினைக்கும் போதே காதுகளில் ஒலிப்பதாக உணர்கின்றேன். இன்று வரை அவ்விழப்புக்கள் ஈடு செய்யப்பட்டதாக இல்லையே....! இவ்வாறாக கடந்து விட்ட கசப்பான சம்பவம் மனதில் நீங்காமல் இருக்க மீண்டும் சுனாமி.... கதி கலங்க வைக்கின்றது கேட்கும் போதே அனைவரையும்.
ஆம் நேற்று பசிபிக் பெருங்கடலில் நடந்த பெரும் நில நடுக்கம் காரணமாக சமோவாத்தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கிராமமே அழிந்ததாகவும் ஊடகங்கள் அறிவித்தவண்ணமாக! (ரிக்டர் ஸ்கேலில் 8.3 அளவு இருந்தததாக அறிவிக்கப்பட்டுள்ளது) சுனாமி பெரும்பாலும் சமோவா தலைநகரமான 'ஆபியா' வைச் சுற்றி இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நியூஸியை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த அலைகள் இரண்டு மீட்டர் உயரம் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
முதன்முதலில் கி.மு. 365ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் அதனை தொடர்ந்து சமீப நூற்றாண்டுகளை கவனத்தில் கொண்டால் முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது தொடர்ந்து 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. அதன் பின்னர் 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் கூறப்படுகின்றது.
அது சரி சுனாமி சுனாமி என சொல்கின்றார்களே... சுனாமி என்றால் என்ன என்று சற்று தெரிந்து கொள்ளலாமே!
சுனாமி என்றால் என்ன?
சுனாமி என்பது ஜப்பானிய மொழி வார்த்தை. அதாவது ஜப்பானிய மொழியில் சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படுவது என்றும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது என்றும் கூறப்படுகின்றது.
சுனாமியை கடற்கோள், ஆழிப்பேரலை, துறைமுக பேரலை போன்ற பெயர்களாலும் அழைக்கின்றனர். சுனாமியானது பூகம்பத்தினாலேயே ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில் (நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது), கடல் பகுதியில் (கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது), மலைப்பகுதியில் (மலையில் எரிமலையாக உருவெடுகிறது) ஏற்படும். பூமி அதிர்ச்சி, மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
இவ்வாறான சுனாமி குறித்த பயத்தை கடலோர பகுதி மக்களிடமிருந்து அகற்ற தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவியமை குறிப்பிடத்தக்கது. மேலும், சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
என்றபோதும் கடந்த இரு தினங்களாக பசிபிக் பெருங்கடலில் நடந்த பெரும் நில நடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவிதமானதொரு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என இறைவனை நாமும் பிரார்த்தித்துக் கொள்வோமாக!
நன்றி
Comments
எல்லாம் மாயம்...