62. இலங்கைப் பதிவர்களின் இனிய ஒன்றுகூடல் 2009
ஒன்றுகூடல் என்றாலே அதில் ஒரு இன்பம் அதிலும் ஒரே அரங்கில் இலங்கையின் வலைப்பதிவர்கள் அனைவரையும் சந்திப்பதென்றால் சும்மாவா? அப்பப்பா.... எத்தனை பரபரப்பு..... எத்தனை நெகிழ்ச்சி........
இலங்கையின் வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முற்றிலும் வேறுபட்ட ஒரு சிறந்த எதிர்கால வலையுலக சந்ததியை உருவாக்கும் நோக்குடன் 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் “இலங்கைப் பதிவர்களின் இனிய ஒன்றுகூடல்” 80க்கும் மேற்பட்ட நட்பின் உள்ளங்களுடன் இனிதே ஆரம்பமானது.
இந்நிகழ்வின் முதலாவது அம்சமாகவும், வலையுலகின் 10வது ஆண்டை சிறப்பிக்கும் முகமாகவும் எம் வலையுலக நணபர்கள், மூத்தோர் தலைமையில் கேக் வெட்டி தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷேட சில உரைகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் என்னை போன்று தூங்கிக் கொண்டிருந்த சிலரை மீள நிகழ்விற்கு கொண்டுவரும் பொருட்டு வடை, கோப்பியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களுடன் அரங்கம் களைகட்டியது.
கருத்துப் பகிர்வுகள் என்றாலே கருத்து முரண்பாடுகள் இல்லாமலா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புக்களும் இங்கே துல்லியமாக வெளிச்சப்படுத்திக் காட்டப்பட்டன. மேலும் இதுவரை அறிந்திராத நல்ல பல விடயங்களை தெரிந்து தெளிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. இந்தருணத்தில் எம் ஒன்றுகூடலின் சக உறுப்பினராக பங்கேற்றுக்கொண்ட இலங்கையின் இளம் வலைப்பதிவர் செல்வன்.யாசிர் -ஐ (11வயது, 6ஆம் வகுப்பு ) நினைவு கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
இவரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும் ஆம் இவர் கொழும்பிலொரு பாடசாலையில் தரம் 6ல் கல்வி கற்று வருகின்றார். இந்த சிறிய வயதில் இவருக்குள் இத்தனை ஆற்றல்களா? வியக்கின்றேன். இவரே இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட இளம் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
என் மனதில் கேள்விக் குறியாக்கப்பட்டிருந்த எண்ண அலைகளுக்கு கரையையல்ல, கடலைக் காட்டியது இந்த ஒன்றுகூடல், என்ற போதும் பொங்கிவந்த உணர்வின் விழிப்புகளை எழுத்துக்களில் சொல்லிவிட எந்தனுக்குத் தெரியவில்லை. சொல்லுக்குள் அடக்கிவிட முனைந்து தோற்றுவிட்டேன். தமிழ் மொழியை வளர்ப்பதற்காக தமிழ் உள்ளங்களின் சங்கமமாம் இந்நிகழ்வில் உங்களோடு, என்னையும் சக தோழியாக இணைத்துக் கொண்டதற்கு நன்றிகளை வெறும் வார்த்தையில் சொல்லி நிறுத்திக் கொள்ள முடியவில்லை. உண்மையில் இளம் சந்ததியினரிடையே உருப்பெற்று வரும் இந்நிலைக்கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்
வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்துவதாகவும், இணையத்தை தவறான வழிகளில் பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில் மிகச்சிறந்த ஒரு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இன்னும் சிறப்பாகவும், அதிகமான உறுப்பினர்களைக் கொண்டும் பல நூற்றாண்டுகளைத் காண வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை இந்நேரத்தில் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
ஏதாவது எழுதியே தீர வேண்டும் என எனக்குள் எழுந்த உணர்வை, நினைவை எனக்கு தெரிந்த வகையில், மொழியில் விதைத்துள்ளேன்.
நண்பர்களே! வலைப்பதிவர்களின் பதிவுகள் என்ற அரும்புகளை மலராக்குவதும், விதையை விருட்சமாக்குவதும் நம் கரங்களிலேயே; தமிழ் தான் எங்கள் மூச்சு என்பதை உணர்வுள்ள தமிழராய் உண்மையோடு உரைப்போம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைப்போம் என உறுதி கொள்வோம் இந்நன்னாளில் நாம் அனைவரும் இணைந்து
வலைப்பதிவர்களின்
இனிய ஒன்றுகூடலே;
உன்னை வர்ணிக்க
பிரபஞ்சத்தில்
வார்த்தைகள் இல்லையோ?
இருந்தும் ஏதாவது
சொல்லியே ஆகவேண்டும்
என முயற்சி செய்து
சொல்லிவிட்டேன்....
என் மொழியில்
நெஞ்சத்தை தொட்டு விட்டது
உன் உதிப்பு; உன் நிகழ்வு!
என்ற போதும் - இன்னும்
தேடிக்கொண்டிருக்கின்றேன்
வார்த்தைகளை - நிகழ்வே
உன்னை வர்ணிப்பதற்காக!
உன்னை நெகிழ்விப்பதற்காக!
உன்னை மீண்டும்
வெகு விரைவில்
சந்திப்பதற்காக
நேரத்தின் நீளத்தை
நொடி நீங்காமல்
தேடிக்கொண்டிருக்கும்!
நானும் ஒரு தமிழச்சி என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கின்றேன். எனது ஆக்கம் சார்ந்த உங்கள் கருத்துக்களை(குறை நிறைகளை) தாராளமாக தெரியப்படுத்துங்கள். எதிர்ப்பார்க்கின்றேன்
இறுதியாக, பதிவர் ஒன்றுகூடலை ஒழுங்கு செய்த நிர்வாகக் குழுவினருக்கும், என் சக வலைபதிவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு மீண்டும் வெகு விரைவில் சந்திப்பேன் எனக்கூறி உங்களிடமிருந்து விடை பெரும் இவள்......
தோழமையுடன்
ஜோ. சம்யுக்தா கீர்த்தனா
Comments