மாலா அக்கா என்ன ஆனார்?

அன்றும் வழமை போல 5.45 மணியளவில் வீட்டை நோக்கி விரைந்தேன். எதிர்வீட்டில் ஒரே அழு குரல்.... கூட்டம் நிரம்பியும் வழிந்தது. மனது பதைபதைக்க எதிர் வீட்டு பாட்டிக்கு தான் ஏதோ ஆகிவிட்டதோ என்ற எண்ணம் தோன்ற வேகமாக அவர்கள் வீட்டை நோக்கி விரைந்தேன் ஆனால் அங்கு அந்த பாட்டி தான் அத்தனை சத்தமாக அழுதுக் கொண்டிருந்தார். என்ன நடந்தது என கேட்டேன் பலமுறை கேட்டும் யாரும் பதில் சொல்லவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என புரிந்தது .

அவர்களின் வீட்டில் என்னோடு நெருங்கி பழகும் மாலா அக்காவிடம் கேட்டால் சொல்லிடுவாள் என அவரை தேடினேன் அவர் அங்கு இல்லாதிருக்க மாலா அக்கா..... மாலா அக்கா...... என அவரின் பெயரை சொல்லி கூப்பிட்டேன். மாலா அக்கா வரவில்லை மாறாக நான் மாலா அக்கா என அழைத்ததுமே இன்னும்சத்தமாக அழத்தொடங்கினார் அந்த பாட்டி. மாலா அக்காவிற்கு தான் ஏதோ நடந்துவிட்டது என புரிந்தது ஆனால் என்னவென்று புரியாமல் குழப்பமாக இருந்தது. அப்போது அங்கே வந்த மாலா அக்காவின் அண்ணாவிடம் கேட்டு எல்லா விடயங்களையும் தெரிந்து கொண்டேன்.

அன்று காலை அவர்களின் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு குடும்பமாக சென்று திரும்பும் போது சந்தேகத்தின் பெயரின் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் எத்தனையோ வாதாடியும் அவரை விடவில்லையாம். அன்றிலிருந்து அவர் குடும்பத்தினர் பல்வேறான வழிகளில் முயற்சி செய்தும் இன்னும் அவர் வீடு வந்து சேரவில்லை.

மேலும் மாலா அக்காவை பற்றி கூறுவதானால், அவர் கணவர் கனடாவில் வசித்து வருகின்றார். திருமணமாகி 10 வருடங்களை கடந்த நிலையிலும் விசா பிரச்சினைகளால் இன்று வரை கணவரிடம் செல்ல முடியாமல் தவிக்கும் ஜீவன். தன் தாயாரோடே காலத்தை களிக்கும் பாவப்பட்ட பெண். அத்தோடு நில்லாமல்தான் கருவுற்றுள்ளது தெரியாமலேயே 5மாத சிசுவை கருவிலேயே தொலைத்து செத்துப்பிழைத்த உயிர். இவ்வாறாக இவருக்குள் சொல்லமுடியாத சோகக்கதைகள் ஏராளம், தினம் தினம் தன் நிலை நினைத்து தன்னை தானேநொந்து கொள்ளும் பெண் இவர். நினைக்கும் போதே கண்கள் கலங்குகின்றன. அத்தனை ஒரு நல்ல மனம் அவருக்கு. யாருக்கும் உடனே உதவிகள் செய்யும் நல்லவர் அவர். அவருக்கே இப்படியானதொரு நிலையா என எண்ணும் போதே மனது வலி கொள்கின்றது. இன்று இவர் என்ன ஆனார் என்பது தெரியாமலேயே உள்ளது. அவரை நினைத்தே சதா அழுது புழம்பும் 70 வயது நிரம்பிய பாசமிகு தாயார். சாப்பிடாமல் இருந்தே தன்னை வருத்திக் கொள்கின்றார்.

இது நிகழ்ந்து இன்று 6மாதங்களைக் கடந்து விட்டது ஆனால் மாலா அக்கா இன்னும் வீடு வந்து சேரவில்லை.
அவர்களின் வீடு இப்போதெல்லாம் மௌனம் குடி கொண்டதாக....! இது போல இன்னும் எத்தனை எத்தனை குடும்பங்கள் தங்கள் உறவுகளை தொலைத்து இன்னலுருகின்றன. இதற்கான முடிவு தான்என்ன? எப்போது தான் நம் மக்கள் துன்பக்கூட்டில் அடைப்பட்ட நிலை தாண்டி சிறகுகளை விரித்து பறக்கப் போகின்றார்களோ???

Comments

Unknown said…
ஆத்திகனாய் இருந்திருந்தால் விதி என்றிருப்பேன்,
மாறி நாத்திகனாய் இருக்கிறேனே....!!!
என் சொல்வேன் நான்...?
ஒன்றல்ல இரண்டல்ல இப்படி எண்ணிலடங்கா மாலா அக்காக்களும் அவர் தம் குடும்பங்களும் நித்தம் வடிக்கும் கண்ணீருள் வாழும் நாடு இலங்கை.

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

உறவுகள்!