89. உலக அஞ்சல் தினம் இன்று

இன்று உலக அஞ்சல் தினமாகும். சர்வதேச ரீதியில் தரமான அஞ்சற்சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் 1874ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09ஆம் திகதி  சர்வதேச அஞ்சல் ஒன்றியம் தாபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருடாவருடம் அக்டோபர் மாதம் 09ஆம் திகதி சர்வதேச ரீதியில் உலக அஞ்சல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது நினைவுகூரப்படுகின்றன. குறித்த விடயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும்.
இன்றைக்கு எத்தனையோ தொலைத்தொடர்பு சாதனங்கள் உலகில் நடைமுறையில் இருந்தாலும் ஆரம்ப காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி  அனைத்து மக்களையும் இணைக்கும் ஊடகமாக இவ்வஞ்சல் சேவையே காணப்பட்டது. இன்றும் அது தன் சேவையை  தொடர்ந்து செய்து வருகின்றது என்றபோதும் இன்றும் எம்மில் பலருக்கு இவ்வஞ்சல் சேவை உருவாகிய கதை தெரியாமலேயே இருக்கின்றது.                                   

அதாவது இன்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சல் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் விளங்கிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் உதித்ததன் பலனாக பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஜேர்மன் நாட்டின் அஞ்சல் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிற்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு "அஞ்சல் பொது ஒன்றியம்' உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் இத்தினமே உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.








Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு