88. தமிழ் சங்கத்தின் உதயம்

இன்று தமிழ் நெஞ்சங்களின் தமிழ் பசிக்கு தீணியாக அமைவது தமிழ் சங்கமே என்ற போதும் நம்மில் பலருக்கு இத்தமிழ் சங்கம் எவ்வாறு பிறந்ததென்பது தெரியாமலேயே உள்ளது. எனவே எனக்கு தெரிந்த சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

ஆம் இன்றைக்கு தமிழ் இத்தனை வளர்ச்சியடைந்துள்ள நிலைக்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ் மீது தீராக்காதல் கொண்ட பாண்டிய மன்னர்களே! இவர்களின் இன்பத்தமிழ் ஆர்வமே தமிழ் சார்ந்த சங்கங்கள் உருவாவதற்கான முக்கிய கருவாக அமைந்தது. மேலும் தமிழ் புலவர்களின் வருகையும், தமிழ் சார்ந்த நூல்களின் எழுகையும் பாண்டிய மன்னர்களின் காலத்திலேயே அதிகமாக நிகழ்ந்தன. இது சார்ந்த தகவல்களை இறையனார் களவியலுரை ஆசிரியர் நக்கீரர் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.

இவ்வாறு இவர்களால்  உருவாக்கப்பட்ட சங்கங்களே தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்பனவாகும். இச்சங்கங்களுக்கூடாக தமிழ் சார்ந்த பழைமை பேசப்பட்டதோடு தமிழ் செம்மைப்படுத்தலும்,  செழுமைப்படுத்தலும் புலவர்களையும், அறிஞர்களையும் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அது சார்ந்த நூல்களும் இயற்றப்பட்டன. இவ்வாறு சங்க காலம் தமிழின் பொற்காலமாக விளங்கியது.
 
தலைச்சங்கம் 
இது தென்மதுரையில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்து வாழ்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாண்டிய மன்னன் காய்ச்சின வழுதி தொடங்கி கடுங்கோன் வரையில் 89 மன்னர்களால், 4449 புலவர்களைக் கொண்டு நடாத்தப்பட்ட இச்சங்கத்திற்கு இறையனார் என்பவரே தலைமை வகித்தார். இவரை “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்” என்றும் அழைப்பர். இக்காலத்தில் இருந்த புலவர்களுள் அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த குமரவேல், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் ஆகியோரும் அடங்குவர். தமிழில் எழுதப்பட்ட மிகப்பழமையான இலக்கண நூலாகக் கருதப்படும் அகத்தியம் என்னும் நூல் இக்காலப்பகுதியில் எழுதப்பட்டது. இச்சங்கமானது கடலால் சூழப்பட்ட பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்ததும் கடல் அச்சங்கத்தை அணைத்துக் கொண்டதும் கவலைக்குறிய விடயம் இத்துடன் தலைச்சங்க நூல்கள் அனைத்தும் அழிவடைந்ததும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். 

இடைச்சங்கம் 
இது குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. 3700 ஆண்டுகளாக இந்த இடைச்சங்கம் வாழ்ந்துள்ளது. இச்சங்கத்திற்கு முருகக்கடவுள் தலைமை வகித்தார். இவரை “குன்றம் எரிந்த வேல், துவாரக் கோமான்” என்றும் அழைப்பர். இச்சங்கத்திற்கு கிருஷ்ணனும் தலைமை வகித்துள்ளார். பாண்டியன் வெண்தேர்ச்செழியனால் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்களையும், அகத்தியர், தொல்காப்பியர், திரையன் மாறன், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, கீரந்தை, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டுரங்கன், துவரைக்கோன்,  முதலிய 3700 புலவர்களையும் கொண்டு இடைச்சங்கம் அமைந்தது. தொல்காப்பியம், குருகும், வெண்டாளி, வியாழமாலை, அகவல், கலி போன்றவை இச்சங்கத்திலேயே பாடப்பட்டன. இசசங்கமும் கடலால் மூழ்கடிக்கப்பட்டது என்ற போதும் தொல்காப்பிடமும், தில்காப்பியத்தின் மூத்த நூலான திருமூலர் திருமந்திரமும் தப்பியமை வியக்கத்தக்கது. 

கடைச்சங்கம் 
1850 ஆண்டுகள் நிலவிய இச்சங்கம் உத்தர மதுரையில் முடத்திரு மாறனால் நிறுவப்பட்டது.  இக்காலத்தில் தமிழ் இலக்கியம் பெரும் புகழீட்டியதோடு மதுரை வரலாற்றின் ஊழித் திருப்புமுனை பெற்ரிருந்தது. உக்கிரப் பெருவழுதி வரையில் 49 மன்னர்கள் இதனைக் காத்து வந்தனர். சிறுமோதாவியார், சேந்தம்பூதனார், இளந்திருமாறன், மதுரையாசிரியர், நல்லந்துவனார், மருதனிளநாகனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர் கிழார், கணக்காயனார், மகனார், நக்கீரனார் முதலிய 449 புலவர்கள் இச்சங்கத்தில் பங்கேற்றனர். நெடுந்தொகை, நானூறு, குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, 150 கலி, 70 பரிபாடல் ஆகியன கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களே ஆகும். மேலும் இக்காலத்திலேயே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய பதினெண் மேற்கணக்கு நூல்களும் எழுந்தன. என்றபோதும் தெளிவற்ற சூழ்நிலைகளால் கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே நிலை குலைந்தது.

அதன் பின்னர் கி.பி 4ம் நூற்றாண்டு தொடக்கம் 7ம் நூற்றாண்டு வரை சமணர் ஆதிக்கம் காணப்பட்டது. இக்காலத்திலேயே ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியன எழுந்தன. 

ஆரம்ப காலத்தில் தமிழ் சங்கங்கள் சார்ந்த கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தாலும், இவ்வாறு மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தமை உண்மையே என்பதை டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், கா.சுப்பிரமணிய பிள்ளை, கா.அப்பாதுரையார், ஞா.தேவநேயப் பாவாணர் போன்றோர் அரிய சான்றுகளோடு நிறுவியும் உள்ளனர். மேலும் முச்சங்கங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லையென்பவர்களின் கூற்றுகளை முறியடித்து இலக்கியச் சான்றுகள் வரலாற்றுச் சான்றுகள் அகழாய்வுச் சான்றுகள் என்று பல சான்றுகள் தந்து மூன்று சங்கங்களும் இருந்தன என்னும் உண்மையை "முச்சங்க வரலாறு" என்னும் கட்டுரை நிறுவுகிறது.

இவ்வாறு 10000 ஆண்டுகளாகப் பாண்டிய மன்னர்களால் பேணிக் காக்கப்பட்ட தமிழ் வளர்த்த சங்கங்களை தொடர்ந்து, சமணர்களால் மதுரையில் மாண்புமிகு கற்றறிவாளரும் மதகுருவுமாகிய “வச்ரா நந்தி” என்பவரின் தலைமையில் “வத்ரா நந்தி தமிழ்ச் சங்கம்” உருவாக்கப்பட்டது. இது சிறிது காலமே செயற்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, 19ம் நூற்றாண்டில் உ.வே.சாமிநாதையர், தாமோதரம்பிள்ளை போன்றோரால் மறைவுற்றிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்கள் சார்ந்த தேடல் தொடங்கப்பட்டு, 1867ம் ஆண்டில் பிறந்த இளவரசர் பாண்டியத்துரைத்தேவருடன் சில கற்றறிவாளரும் சேர்ந்து மதுரையில் 14.09.1901 அன்று மதுரை சேதுபதி உயர் பாடசாலையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினர். (இக்காலம் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது) மேலும் இச்சங்கமே நான்காம் தமிழ் சங்கம் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் காப்பாளராகவும், தலைவராகவும் பாண்டியத்துரைத்தேவரே 10ஆண்டுகள் பணியாற்றினார். இவரின் 45வது வயதில் (11.12.1911) இவர் இறைவனடி சேர்ந்தார். 

இவரது மறைவைத் தொடர்ந்தும் தமிழ்ச் சங்க செயற்பாடுகள் முன் போலன்றி தேக்க நிலையை அடைந்தது. இன்றுவரை முன்னேற்றம் காணப்படாத நிலையிலேயே தமிழ் சங்கத்தின் செயற்பாடுகளும், முன்மகர்வும் காணப்படுகின்றது. முன்னைய காலங்களில்  தமிழ் புலவர் குழாமைக் கொண்டு சிறப்பாக இயங்கி வந்த தமிழ் சங்கங்களைப் போன்றதொரு சிறந்த தலைமையின் கீழ் தமிழ்ச் சங்கமானது தொடர்ச்சியாக இன்னும் பல நூற்றாண்டுகளை கண்டு வெற்றிவாகை சூட வேண்டுமென வேண்டிக்கொள்வோமாக!

இளைஞர்களே..... தமிழ் வளர்ச்சி தமிழ் சிசுக்களாகிய நம் ஒவ்வொருவரது கரங்களையும் எட்டிப் பிடித்து நிற்கின்றது. எம்மால் முடிந்தளவில் தமிழ் வளர்க்க முன்வருவோம்.
Comments

நல்ல கட்டுரை கீர்த்தி. தெரியாத பலவற்றை தெரிய தந்தீர்கள்..
நல்லதொரு கட்டுரை கீர்த்தி. மதுரையில் சங்கம் வளர்த்த தமிழன் இன்றைக்கு அல்லல் படுகின்றான் என நினைக்கும் போது கஸ்டம் தான். காரணம் தமிழர்கள் இப்போ சுயநலவாதிகள் ஆகிவிட்டார்கள். தான் தன் குடும்பம் என சுருங்கிவிட்டார்கள். மீண்டும் சங்ககாலம் திரும்பவேண்டும்.

எனக்குத் தெரிந்தது எல்லாம் ஊரிலுள்ள கூட்டுறவுச் சங்கமும் கொழும்பு தமிழ்சங்கமும்தான்.

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்