Search This Blog

Tuesday, October 6, 2009

86. வலிகள்

சிங்களம் வேட்டை கண்ட
தமிழ் தீவு வாழ்
தமிழச்சியின்
வலி மடல்

எரியும் விளக்கின்
சுடர் தான் “தமிழ்”
எண்ணை தான் “தமிழர்”

பசுமை நிறைந்த
என் மண்ணில்
நடந்து வந்த சுவடு
மறையும் முன்னே
இரத்தத் தடம் பதித்து
வரட்சி சொந்தமாகிப் போனது!

நடந்த கால்கள்
நடக்க மறுத்தன.....
மறுத்துப் போனதனாலல்ல
கால்களைத் தொலைத்ததனால்!

எப்படியோ தத்தித்தத்தி
இருந்ததை அணைத்துக் கொண்டு
உயிர் கரை சேர்வதற்குள்
இதயத்தில் இரத்தமே கசிந்தது
மனது மட்டும் மௌனமாய் அழுதது!


சத்தமாய் அழுதுவிட்டால்
இருக்கும் உயிரும்
போய்விடும்
மனசாட்சியின் எச்சரிக்கை!

நீயா... ? நானா...?
நான் என்ற மமதை உனக்கு
இருக்கலாம்
உன் புத்தி அப்படித் தானே செல்லும்
யார் கேட்பது உன்னை?

எம் மண்ணை வாழ்த்த
வாழ வைக்கத்தானே
என் உயிர்களின் போராட்டம்
உனக்கென்ன வந்ததிங்கே?
எமது இனம் என்ன
உன் அடிமைகளா?

எதிரியையும் அணைத்துக் கொண்டு
பசி போக்கும் பரந்த ம(இ)னம்
ஏனோ துரோகிகளை
உணவு கொடுத்து வளர்த்து
விட்டிருக்கின்றது அறியாமல்


உண்ட வீட்டில் வஞ்சம் தீர்த்த
உதவாத உயிர்கள்....

உயிர்களா.........?
உயிர் வாழ்ந்த சவங்கள் அவை
தமிழினத்தில் தப்பிப் பிறந்த
ஜடங்கள்!

உன்னதமான தமிழ் சுவைத்த
என் உறவுகள்
மண்ணில் விதைக்கப்பட்டது
விருட்சமாகவே - உன்
இரத்தப்பசிக்கு
விருந்தாகவல்ல!

சிறு கூடாய் சிரிப்பொலிக்குள்
சிறகடித்த நாங்கள் இன்று
சிதறிப் போனோமே;
இடம் பெயர்ந்தவர்களுக்கு
ஆதரவு அகதிமுகாம்கள்
அழகாய் சொல்கின்றாய்,

இடம் பெயர்ந்தவர்களா?
உன் கூலிப்படையால்
இடம் பெயர்க்கப்பட்டவர்களா?

உணவளிக்கின்றாயா?
வெட்கமில்லை உனக்கு
உன் வஞ்சப் புத்தியால்
எங்களிடம் உள்ளதை
சுருட்டிக் கொண்டு
எங்களோடு உறவாட
வருகின்றாய்

மிருக வேட்டைத் தாண்டி
சிங்களம் மனித வேட்டை
புரிகிறது - உனக்கே
புரிந்துவிட்டது
உன் இனம்
உதவாததென்று

இலங்கை எதிரொலிகள்
உன் கூலிக்கு மாறடிக்கும் கூட்டம்
எம் மக்கள் மரணத்திலும்
மார்பு தட்டி தமிழனென்று
சொல்லும் கூட்டம்!

மழைக் கண்ட தேசம் இன்று
இரத்த ஆறுகளை
நீராய் சுமக்கின்றதே
எங்கே ஆவியாகும் நீர்?
எப்போது மழை பார்க்கும்
என் பூமி....?

பொன்னுக்கும் பொருளுக்கும்
மண்ணுக்கும் மங்கைக்கும்
போட்டிப் போடுகின்றாய்
போகும் போது ஆறடி
மண் தானே உனக்கும் சொந்தம்!

நீ தமிழின் எதிரி
உன்னை நேராய் சந்தித்தோமே
தவிர - உன் சேய்களைக்
கொண்டு உன் முதுகில் 

குத்தவில்லை நாங்கள்!

கண்ணீரில் கறைகள்
கரைதேடி ஓட முடியாமல் 

அடைத்து நிற்கின்றாய்!

சதிகாரனே....,
உன் அதிகாரம் உடைத்து
அரசாட்சி புதைத்து
தமிழாளும் நாள்
வெகு தொலைவில் இல்லை!
2 comments:

மனதின் கிறுக்கல்கள் said...

உணர்வுகளை கொட்டியிருக்கிறாய் தங்கையே...கண்ணீரை வற்ற விடாதே அதை ஓட விட அதில் தான் உன் உண்ரவுகள் நீந்தி வரும்..நீந்தி கரைசேரும் உணர்வுகள், நிச்சயம் உண்மைகளேயே எடுத்துறைக்கும்..
தொடரவேண்டும உன் பணி,அதனால் தினமும் மின் ஒளியில் நடந்திடு..

குணா said...

அது சிங்களத்தீவு இல்லை.. நண்பி
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் தாயகம்...
வலிகளை சுமந்து நிற்கிறது...
சூரியனைக்கண்ட பனித்துளி போல் விரைவில் அகலத்தான் போகிறது..