87. ஒன்றோடு ஒன்று

எப்போதாவது தான்
தரிக்கப்படுகின்றது
இன்பத்தின் கரு
பிரசவிப்பதென்னவோ
துன்பக்குழந்தை!

நிலையில்லா உலகில்
நிமிடத்தின் நீட்சியை
அழிவடையும் அழகை
அந்தரங்க கனவை
அள்ளிப் பருகி
மோட்சமடையும்
தொடக்கத்திலேயே
இன்பத்தை
விழுங்கிக் கொள்கின்றது
துன்பம்...!
 
துன்பத்தின் மேற்றோல்
தான் இன்பம்
மேற்றோலை களைந்து
துன்பம் வெளியேறும்
தருணம்....
ஒவ்வொரு மனிதனிலும்
சம்பவத்திலும்
வேறுபடுகின்றது!
 
எனக்கு மட்டும் தான்
இந்த நிலை....
ஒவ்வொரு மனிதனினதும்
சோக வெளிப்பாடு
ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும்
சோகத் தடம் பதிந்த வண்ணமே!

அவனவன் நிலையினின்று
நோக்கின் தான்
தெரியும் வலியில் வழு!
 
பிறப்பின் இன்பம்
இறப்பெனும் துன்பத்தோடு
இளமையின் இன்பம்
முதுமையெனும் துன்பத்தோடு
ஆக்கத்தின் இன்பம்
அழிவெனும் துன்பத்தோடு!

இவ்வாறே....
இன்பம் துன்பத்தை
அங்கமாக்கிக் கொண்டதால்
இன்பத்தின் முடிவும் கண்ணீரோடே
துன்பத்தின் முடிவும் கண்ணீரோடே!

இன்பத்தில் இமயம் தொடும் மனது
துன்பத்தில் துவண்டு மடிகின்றது!

இன்பத்தையும் துன்பத்தையும்
இரண்டாய் பார்க்காதீர்
இன்பத்துக்குள் தான்
தூங்கிக் கொண்டிருக்கின்றது
துன்பம்.....
அவ்வப்போது அது
விழித்துக் கொள்ளவும்
செய்கின்றது.....
விழித்துக் கொண்டதும்
விம்ம வைக்கின்றது!

இன்பத்தையும் துன்பத்தையும்
ஏற்றிட பழகி....
இனியதொரு
வாழ்வை தொடுவோம் நாளை!








Comments

Unknown said…
இன்பம் துன்பம் பற்றிய உங்கள் வரிகள் அனத்துமே அருமையாக உள்ளது கீர்த்தி வாழ்த்துக்கள்
//இன்பத்தையும் துன்பத்தையும்
ஏற்றிட பழகி....
இனியதொரு
வாழ்வை தொடுவோம் நாளை!//

முடியவில்லையே. இன்பம் வந்தால் மகிழும் மனது துன்பம் வந்தால் அழுகிறதே..

நல்ல கவிதை
Vijay said…
இன்பம் துன்பம் பற்றிய உங்கள் வரிகள் அனத்துமே அருமையாக உள்ளது கீர்த்தி வாழ்த்துக்கள்
ISR Selvakumar said…
//இன்பம் துன்பத்தை
அங்கமாக்கிக் கொண்டதால்
இன்பத்தின் முடிவும் கண்ணீரோடே
துன்பத்தின் முடிவும் கண்ணீரோடே!
//

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.
U.P.Tharsan said…
//
பிறப்பின் இன்பம்
இறப்பெனும் துன்பத்தோடு
இளமையின் இன்பம்
முதுமையெனும் துன்பத்தோடு
ஆக்கத்தின் இன்பம்
அழிவெனும் துன்பத்தோடு!

இவ்வாறே....
இன்பம் துன்பத்தை
அங்கமாக்கிக் கொண்டதால்
இன்பத்தின் முடிவும் கண்ணீரோடே
துன்பத்தின் முடிவும் கண்ணீரோடே!
//

அருமையான வரிகள்.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு